1000 கிலோ மிளகாய்துாள்; ரூ.3 லட்சம் வருவாய்: பாட்டியின் மசாலா தொழில் சிறக்க உதவிய பேரன்!
40 ஆண்டுகளுக்கு முன்பாக பலசரக்குக் கடையில் தொடங்கிய, சரஸ்வதி பாட்டியின் மசாலா, இன்று உள்ளூர் ப்ராண்டாக உருமாறி, 70வயதில் அவரை தொழில்முனைவாராக்கியுள்ளது. மாதம் 1000 கிலோ மிளகாய் துாள் தயாரித்து, ரூ3 லட்சம் வரை வருமானம் ஈட்டிவரும் பாட்டியின் பிசினஸ் கதை...
1980களில், விதவிதமான பாக்கெட்களில் அடைக்கப்பட்ட மசாலாக்களின் வருகைக் குறைவாக இருந்த காலத்தில், வீட்டு கிச்சன்களில் ஆதிக்கம் செலுத்திவந்தன பலசரக்கு கடைகளில் விற்கப்பட்ட வீட்டில் அரைத்த மசாலாக்கள். அன்றிருந்த பெரும்பாலான கடைகளில், இந்த மசாலாக்கள் விற்கப்பட்டன.
40 ஆண்டுகளுக்கு முன்பாக பலசரக்குக் கடையில் தொடங்கிய, சரஸ்வதி பாட்டி-யின் மசாலா, இன்று உள்ளூர் ப்ராண்டாக உருமாறி, 70வயதில் அவரை தொழில் முனைவாராக்கியுள்ளது.
மாதம் 1000 கிலோ மிளகாய் துாள் தயாரித்து, ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்டிவருகிறார்.
தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி பாட்டி. 1980ம் ஆண்டில் கணவர் பலசரக்குக் கடை நடத்திவர, அவரது கடையில் மசாலாப் பொருட்களை கைப்பட அரைத்து பொட்டலங்களில் கட்டி விற்பனைச் செய்துள்ளார்.
தொடக்கத்தில் 5 கிலோ மசாலா மட்டுமே அரைத்து விற்பனை செய்தநிலையில், ஐந்து, பத்தாகி, பத்து நுாறாகியுள்ளது. பாட்டியின் கைபக்குவத்தில் தயாராகிய அந்த மசாலாவிற்கு பயங்கரக் கிராக்கியது. ஆண்டுகள் பல கழிந்தோடினாலும், அவருடைய ஸ்பெஷல் மசாலாவிற்கென தனி பிராண்ட் உருவாக்கவேண்டும் என்ற எண்ணமில்லாமலே 40 ஆண்டுகளாய் மசாலாத் தொழிலை நடத்தி வந்துள்ளார்.
காலத்துக்கு ஏற்ப பாட்டிக் கடை இப்போது ஆன்லைனில் வாங்கும்படியாக நவீனப் படுத்தப்பட்டுள்ளது. பாட்டியின் வாரிசுகள் பாட்டியின் கைப்பக்குவத்தை பத்திரமாகப் பாதுகாத்து மக்களுக்குச் சுவைப்பட பரிமாறத் தொடங்கியுள்ளனர். சரஸ்வதி பாட்டியின் பேரனும், சரஸ்வதி மசாலாவின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் தொடர்ந்து பேசுகையில்,
"என் பாட்டியால் 1980-ம் ஆண்டு இந்த மசாலாத் தொழில் தொடங்கப்பட்டது. அக்கம் பக்கத்தினரும், ஊரில் உள்ளவர்களுமே அப்போதைய வாடிக்கையாளர்களாக இருந்தனர். அதனால், சிறிய அளவிலே தொடங்கப்பட்டது. காலப்போக்கில் இத்தொழில் என் தந்தை வசம் வந்தது.”
நான் டிப்ளமோ முடித்துள்ளேன். செல்போன் கடைக்கான விளம்பரப் பிரசுரத்தை வீடுவீடாகக் கொடுக்கும் பணியில் தொடங்கியது என் கேரியர். பல இடங்களில் பணிபுரிந்து இறுதியாய், தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்தேன். இந்த லாக்டவுன் சமயத்திலே பாட்டியின் மசாலாத் தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
ஏனெனில், லாக்டவுனில் பலரும் வேலையின்றியும், தொழிலில் பாதிக்கப்பட்டும் இருந்தனர். அவர்களுக்கு உதவி செய்யலாம் என்ற எண்ணத்தில், மசாலாத் தயாரிப்பை விரிவுப்படுத்தி வீட்டிலுள்ள பெண்கள் வாங்கி, விற்று வருவாய் ஈட்டிக் கொள்ளும் வகையிலான ஒரு பிசினஸ் பிளான் வடிவமைத்தேன்.
சந்தையில் ஏற்கெனவே பல மசாலா நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஒரு புராடக்ட்டாக இல்லாமல், பல தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருந்தது. அதன்மூலம், நிறுவனத்தை வளர்த்தெடுக்க முடிவு செய்தோம்.
அதற்காக முதலில், பேங்க் பணியினை விட்டேன். சற்று கடினமான முடிவு என்றாலும், பாட்டியின் கைபக்குவத்தில் முழு நம்பிக்கை இருந்தது. ரூ.50,000 முதலீட்டில் பேக்கிங் மிஷின், பேக்கிங் பேப்பர்ஸ் என சில சாதனங்களை வாங்கினேன்.
ஏற்கனவே, சரஸ்வதி மசாலாவிற்கு நிலையான வாடிக்கையாளர்கள் இருந்ததால், அவர்கள் முதலில் மறுவிற்பனையாளர்களாக மாறினர். எங்களது மசாலாக்களை வாங்கி விற்பனை செய்ய நினைப்பவர்கள், எங்களது பிராண்டிலும் விற்பனைச் செய்துகொள்கின்றனர். உற்பத்தியாளராக இருந்து மசாலாவைத் தயாரித்து கொடுப்பதால், சொந்தப் பிராண்டின் கீழும் விற்பனைச் செய்கின்றனர்.
சென்னை, வேலுார், நாமக்கல், திருநெல்வேலி என 18 மாவட்டங்களில் நிலையான விற்பனை செய்யக்கூடிய மறுவிற்பனையாளர்கள் இருக்கிறார்கள். வாரம் ஒரு முறை 200கிலோ ஆல் இன் ஒன் மசாலாவை பெங்களூருக்கு அனுப்புகிறோம். மாதத்திற்கு 1000கிலோ மிளகாய் பொடி விற்பனை செய்கின்றோம். மாதம் லாபமாக ரூ.3 லட்சம் கிடைக்கிறது, என்றார்.
முழுக்க முழுக்க வீட்டுப் பக்குவத்தில் ஆல் இன் ஒன் என்ற ஃபார்மூலாவில் அரைக்கப்பட்ட மசாலாவைத் தொடர்ந்து தனி மிளகாய் துாள், மல்லித் துாள், இட்லிப் பொடி ஆகியவற்றை அறிமுகப்படுத்தினோம்.
எல்லா வகையான சமையலுக்கும் ஒரே குழம்பு மசாலா துாள் என்பதே ஆல் இன் ஒன் மசாலா. அதில் ஸ்பெஷல் என்னவெனில், சுத்தமான மிளகாய்களை பாட்டி கைப்பட வறுத்தெடுத்து, அவற்றை உரலில் இட்டு கையால் இடித்து சிறுப்பொடிகளாக மாற்றிய பின்னரே, மிஷினில் அரைக்கிறோம். பராம்பரிய முறையில் உரலில் இடிப்பதே மிளகாய் பொடிக்கு தனி ருசி அளிக்கிறது," என்று கூறினார்.