கொரோனா: வீட்டில் தனிமைப் படுத்தப்படுபவர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் என்ன?
கோவிட்-19 சந்தேகம்/ உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான வழிகாட்டல்கள் இதோ:
கோவிட்-19 எனப்படும் 'கொரோனா வைரஸ்' உலகம் முழுவதும் வேகமாகப் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் நோய் பரவத் தொடங்கியுள்ளதை அடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒருவர் பயணம் மேற்கொண்டிருந்தாலோ அல்லது மேற்கொள்ளாத நிலையிலோ கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில் இதற்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட சுகாதார மையங்களில் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார்.
கீழே விவரிக்கப்பட்டவர்கள் கோவிட்-19 பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களாக கருதப்படுவார்கள்.
- கோவிட்-19 பாதித்த நபர் இருக்கும் அதே வீட்டில் வசிப்பவர்கள்.
- முறையான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் கோவிட்-19 பாதித்த நபரை நேரடியாகத் தொட்டு பராமரிப்பவர்கள்.
- ஒரே அறையில் அடைக்கப்பட்ட சூழலில் கோவிட் 19 பாதித்த நபருடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் அல்லது ஒரு மீட்டர் தொலைவிற்குள் இருந்தவர்கள் அல்லது விமானத்தில் உடன் பயணித்தவர்கள்.
இவ்வாறு கோவிட்-19 இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது உறுதிசெய்யப்பட்டவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால் இவர்கள் அனைவரையும் வீட்டிலேயே தனிமைப்படுத்தும் முறை குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்:
- கழிப்பறை வசதியுடன்கூடிய காற்றோட்டமான தனி அறையில் வசிக்கவேண்டும். அதே அறையில் மற்றொரு குடும்ப உறுப்பினரும் வசிக்கவேண்டிய சூழல் இருக்குமானால் இருவருக்கும் இடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும்.
- வீட்டில் முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், இன்ன பிற நோய் பாதித்தவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் இருந்து விலகி இருக்கவேண்டும்.
- வீட்டிற்குள் நடமாடுவதைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும்
- திருமணம், இரங்கல் உள்ளிட்ட சமூக அல்லது மத ரீதியான கூட்டங்களுக்குக் கட்டாயம் செல்லக்கூடாது.
- அடிக்கடி கைகளை சோப்பு அல்லது ஆல்கஹால் சார்ந்த கிருமி நாசினி கொண்டு நன்றாகக் கழுவவேண்டும்.
- பாத்திரங்கள், தண்ணீர் டம்ளர், கப், தட்டுகள், டவல், படுக்கை போன்றவற்றை வீட்டில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் தனியாகப் பயன்படுத்தவேண்டும்.
- வீட்டில் தனிமைபப்டுத்தப்படுபவர்கள் எப்போதும் சர்ஜிக்கல் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும். இந்த முகக்கவசத்தை 6-8 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றவேண்டும். பயன்படுத்திய முகக்கவசத்தை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இவற்றை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
- நோயாளிகள் அல்லது பராமரிப்பாளர்கள் அல்லது நெருக்கமாக வசிப்பவர்கள் பயன்படுத்திய முகக்கவசங்களை சாதாரண ப்ளீச் கரைசல் (5%) அல்லது சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசல் (1%) ஆகியவற்றைப் பயன்படுத்தி கிருமிகளை அழித்த பின்னர் அவற்றை எரிக்கவேண்டும் அல்லது குழியில் புதைத்துவிட வேண்டும். பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் என்பது தொற்று ஏற்படுத்தக்கூடியது.
- வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் போற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையத்தைத் தொடர்புகொள்ளலாம் அல்லது 011-23978046 என்கிற எண்ணை அழைக்கலாம்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான வழிகாட்டல்கள்:
- பாதிக்கப்பட்ட நபரை ஒரே ஒரு குடும்ப உறுப்பினர் மட்டும் பராமரித்தால் போதுமானது.
- கண்காணிப்பில் இருப்பவர்கள் பயன்படுத்திய துணிகளை பரமாரிப்பவர்கள் தங்களது சருமத்தில் நேரடியாக படாதவாறு கவனமாகக் கையாளவேண்டும்.
- அறையை சுத்தம் செய்யும்போதோ அல்லது கண்காணிப்பில் இருப்பவர்கள் பயன்படுத்திய துணிகளைக் கையாளும்போதோ பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய கையுறைகளைப் பயன்படுத்தவேண்டும்.
- கையுறைகளை அகற்றிய பின்பு கைகளை சுத்தமாகக் கழுவவேண்டும்.
- பார்வையாளர்களை கட்டாயம் அனுமதிக்கக்கூடாது.
- கண்காணிப்பில் இருப்பவர்களுக்கு அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படவேண்டும். அதன் பிறகு கூடுதலாக 14 நாட்களோ அல்லது ஆய்வக பரிசோதனை முடிவுகளில் நோய்தொற்று இல்லை என்று வரும் வரை தனிமைப்படுத்தப்படவேண்டும்.
சுற்றுச்சூழல் சுகாதாரம்
- தனிமைப்படுத்தப்பட்டவர்களின் அறையில் உள்ள கட்டில், மேஜை போன்றவற்றில் அடிக்கடி கைகள் படும் பகுதிகளை சுத்தப்படுத்தி 1% சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசல் கொண்டு கிருமிகளை அழிக்கவேண்டும்.
- கழிப்பறைகளை வழக்கமாக வீட்டில் பயன்படுத்தும் ப்ளீச் கரைசல் அல்லது கிருமிநாசினி கொண்டு தினமும் சுத்தப்படுத்தவேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்திய துணிகளை தனியாக சோப்பு போட்டு துவைத்துக் காயவைக்கவேண்டும்.
தகவல் உதவி: பிஐபி