டிரம்ப்க்கு கொரோனா? தனிமைப்படுத்திக் கொண்ட டாம் ஹாங்க்ஸ், ஜஸ்டின் ட்ரூடோ!
உலகிற்கே அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் யாரெல்லாம் தெரியுமா?
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய ஒற்றை வைரஸ் இன்று உலக மக்கள் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்து வீடுகளில் முடங்க வைத்துள்ளது. மக்களுக்கு மரண பயத்தை காட்டி வருவதோடு, பொருளாதார சரிவு, அன்றாட வாழ்க்கை முறையில் மாற்றம் என ஒரு இனம் புரியாத பதற்றத்தோடே நாட்களைக் கழித்து வருகின்றனர் மக்கள்.
கொரோனா வைரஸ் தாக்கினாலே உயிர்ப்பலி என்ற அச்சம் வேண்டாம், நோய் பாதிப்பில் இருந்து மீண்டு தற்போது இயல்பான வாழ்க்கை முறைக்குத் திரும்பிய சீனர்களும் உள்ளனர். 3 வயதுக்குக் கீழ்உள்ள குழந்தைகள், 70 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒரே வழி ‘சுத்தமாக இருப்பதே’. 20 நிமிடங்கள் கைகளை நன்றாக கழுவுதல், வீடு மற்றும் நாம் வசிக்கும் இடத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தலே நோய் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழி.
ஏழை, பணக்காரன், பிரபலங்கள் என்ற வித்தியாசங்கள் எதுவுமின்றி தொட்டாலே ஒட்டிக்கொள்ளும் விடாக்கொண்டனாக உலகம் முழுவதும் வலம் வருகிறது கொரோனா. உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனாவின் மையப்புள்ளியாக ஐரோப்பிய நாடுகள் இருப்பதால் அங்கு செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,701 ஆக உயர்ந்துள்ளது. நோய் பாதிக்கப்பட்டு 40 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்க அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள், விளையாட்டுப் போட்டிகள், கூட்டு நிகழ்வுகளுக்கு பல்வேறு மாகாண அரசுகள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளன.
கொரோனா பாதிக்கப்பட்ட இருவருடன் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துரையாடியதன் எதிரொலியாக அவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக் கிழமையன்று பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேமிக்கப்பட்டதாக டிரம்ப் சனிக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
“எனக்கு கொரோனா பாதித்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும், நோய் பாதிக்கப்பட்ட இருவருடன் உரையாடிக் கொண்டிருந்ததால் சந்தேகத்தின் பேரிலேயே பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டது, ஓரிரு நாட்களில் அதன் முடிவுகள் தெரிய வரும்,” என்றும் அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில் டிரம்பின் பரிசோதனை முடிவுகளை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
எனினும் ஹாலிவுட் பிரபலங்களான டாம் ஹாங்ஸ் மற்றும் அவரது மனைவி ரீடா வில்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தி டாவின்சி கோட், கேஸ்ட் அவே, டெர்மினல் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த அமெரிக்க நடிகரான டாம் ஹாங்ஸ் அவருடைய மனைவியுடன் அண்மையில் ஆஸ்திரேலியாவிற்கு சென்று திரும்பி இருக்கிறார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவரிடமும் நடத்திய பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர். டாம் ஹாங்ஸ் இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி க்ரெகோரி ட்ரூடோவிற்கு கோவிட் 19 வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார். கொரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள ஜஸ்டின் ட்ரூடோ,
“என் மனைவிக்கு நோய் பாதிப்பு இருப்பதால் குழந்தைகளோடு என்னை நானே தனிமைபடுத்திக் கொண்டிருக்கிறேன்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் நடைன் டோரிஸின் ரத்த மாதிரிகளை சோதித்ததில் அவருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். தனக்கு விரைவில் நோய் குணமடையும் என்று நடைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நிலைமை என்ன?
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் கொரோனாவை தேசிய பேரிடராக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கோவிட் வைரஸ் பாதித்தவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளை மாநில அரசுகளே ஏற்க வேண்டும், அதற்கான நிதியை மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம். மத்திய அரசைத் தொடர்ந்து தமிழக அரசும் கொரோனாவை தொற்றுநோயாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதித்தவர்களை தனிமைபடுத்துதல் மனஅழுத்ததைக் கொடுக்கிறது என்றாலும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த வேறு வழி இல்லை. விழிப்புணர்வோடு இருந்து வைரஸ் அண்டாமல் தற்காத்துக் கொள்வது ஒரு வகை என்றால், நோய் பாதிக்கப்பட்டால் சிகிச்சை காலத்தில் மனதைரியத்துடன் மருத்துவ கண்காணிப்பிற்கு முழு ஒத்துழைப்புத் தந்தால் எந்த வைரஸையும் விரட்டியடிக்க முடியும்.
கட்டுரை தொகுப்பு : கஜலெட்சுமி