Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கின்னஸ் சாதனை நீச்சல் வீரர் ‘குற்றாலீஸ்வரன்’ முதலீட்டாளர் ஆனது ஏன்? - சிறப்பு நேர்காணல்!

Induja Raghunathan

vasu karthikeyan

கின்னஸ் சாதனை நீச்சல் வீரர் ‘குற்றாலீஸ்வரன்’ முதலீட்டாளர் ஆனது ஏன்? - சிறப்பு நேர்காணல்!

Saturday May 20, 2023 , 6 min Read

90-ஸ் கிட்ஸ் மற்றும் அப்போது இருந்தவர்கள் இந்த பெயரைத் தெரியாமல் அக்காலக்கட்டத்தை கடந்திருக்க முடியாது. புகழின் உச்சியில், ஊடகத்தின் வெளிச்சத்தில் உலகப் பிரபலமாக குழந்தைப்பருவத்தை கடந்தவர் தான் ‘குற்றாலீஸ்வரன்’.

குற்றாலீஸ்வரன் பள்ளியில் படிக்கும்போதே 13 வயதிருக்கையில் நீச்சலில் கின்னஸ் சாதனை படைத்தவர். இப்போதுபோல மீடியாக்களின் எண்ணிக்கை அதிகம் இல்லாதபோதும் அக்காலத்தில் பெரிய அளவில் ஊடகத்தால் கொண்டாடப்பட்டவர்.

சிறுவனாக பாக்கு நீரிணை (Palk Strait), ஆங்கிலக் கால்வாய் (English Channel) ஆகியவற்றை தொடர் நீச்சலாக நீந்தி சாதனைப் படைத்த குற்றாலீஸ்வரன், நீச்சலில் இந்தியாவின் வருங்காலமாக எதிர்ப்பார்க்கப்பட்டார். 14 வயதில் அர்ஜுனா விருது பெற்ற இளம் வீரரும் ஆனார் குற்றால்.

ஆனால், இப்படி புகழின் உச்சியில் இருந்த குற்றாலீஸ்வரன், அதற்குப்பின் தீடிரென மாயமானார். நீச்சலில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் மெடல் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட அந்த இளம் வீரர் நீச்சலை விட்டே விலகினார்.

kutraleesaran

காலம் உருண்டோடியது... திடீரென அண்மைகாலமாக மீண்டும் வெளியுலகில் தென்பட்டார் குற்றாலீஸ்வரன். ஆனால், இப்போது நீச்சல் வீரராக அல்ல; தொழில் உலகில் ஒரு முதலீட்டாளராக உருவெடுத்து தனக்கான ஒரு வழியை வகுத்துக் கொண்டுள்ளார் குற்றால் விரபத்திரன்.

தற்போது அமெரிக்காவில் வசிக்கும் குற்றாலீஸ்வரன், சமீபத்தில் நடைப்பெற்ற ஒரு பிசினஸ் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தார். அதைத் தொடர்ந்து அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நீச்சல் தொடங்கி, பள்ளிப்பருவம், படிப்பு, இஞ்சினியரிங், ஸ்டார்ட்-அப்’ஸ், விசி முதலீட்டாளர், என இரண்டு மணி நேரத்துக்கும் மேல் உற்சாகமாக உரையாடினார். அந்த உரையாடலில் இருந்து..

நீச்சல் நினைவலைகளில் மூழ்கிய குற்றாலீஸ்வரன்

என்னுடைய சொந்த ஊர் ஈரோடு. ஆனால், என்னுடைய சிறு வயதிலே நாங்கள் சென்னையில் செட்டில் ஆகிவிட்டோம். சம்மர் விடுமுறைக்கு ஊருக்கு போகும்போதெல்லாம் நீச்சல் ஒரு முக்கியமான பொழுதுபோக்கு.

“சொந்தக்காரப் பசங்க, நான் என எல்லாரும் சேர்ந்து குளத்தில் நீச்சல் செய்யப் போவோம். ஆனால், அவர்களுக்கு அது போராக இருக்கும். எனக்கு எப்போ நீச்சல் செய்யப் போவோம்னு இருக்கும். அப்போதே எனக்கு தண்ணி மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது.”

ஆனால், ஒரு சம்மர் விடுமுறைக்கு எங்களால் ஊருக்குப் போகமுடியவில்லை. எனக்கு, நீச்சல் தெரியும் என்பதால் அந்த விடுமுறையை பயனுள்ள வழியில் செலவழிக்க சென்னையில் நீச்சல் பயிற்சிக்குச் சென்றேன். அப்போது சென்னையில் இரண்டு நீச்சல் குளங்கள் மட்டுமே இருந்தது. 90-களின் தொடக்ககாலம் அது. இப்படிதான் என்னுடைய நீச்சல் வாழ்க்கை தொடங்கியது.

“ஒரே வாரத்தில் நான் நான்கு வகை நீச்சல் ஸ்ட்ரோக்குகளை கற்றுத்தேர்ந்ததைப் பார்த்து, மாஸ்டர் என் அப்பாவிடம் ‘இவனுக்கு நீச்சலில் திறமை இருக்கு, இயற்கையாவே நல்லா வருது, இன்னும் நல்லா பயிற்சி கொடுத்தா பெரிசா வருவான்’ அப்படினு சொன்னார். அதான் நீச்சலில் என் முதல் படி.

வழக்கமாக நீச்சல் குளத்தில் பயிற்சி தொடங்கினாலும், அப்போது மெரினாவில் 5 கிலோமீட்டர் கடல் நீச்சல் போட்டி நடைப்பெறும். அதற்கான பயிற்சிக்காக கடலில் நீச்சல் செய்ய என் மீனவ நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் தினமும் கடலில் பயிற்சி செய்யத்தொடங்கினேன்.

“அப்போது என்னுடன் பயிற்சிக்கு வந்தவர்கள் எல்லாம் என்னை விட பெரியவர்கள், அவர்கள் எல்லாம் நீச்சல் முடித்துவிட்டு சோர்வாக இருக்கும்போது நான் மட்டும் அந்த களைப்பு தெரியாமல் மணலில் விளையாடிக் கொண்டிருப்பேன். அதைப்பார்த்தபோதுதான் எனக்குள் இயல்பாக கடலில் நீச்சல் அடிக்கும் திறனும், ஸ்டாமினாவும் இருக்கிறது என்பதை கண்டறிருந்திக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து கடல் சார்ந்த நீச்சல் போட்டிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.”

ஒரே ஆண்டில் பாக்கு நீரிணை (தமிழ்நாடு-இலங்கை 32 கிமி), ஆங்கிலக் கால்வாய் (ஆறு ஜலசந்திகள் 37 கிமி) கடந்து கின்னஸில் இடம்பெற்றேன், என பழைய நினைவலைகளில் மூழ்கினார் குற்றால்.

kutraleeswaran swimmer

நீச்சல் சாதனை செய்தபோது குற்றாலீஸ்வரன்

நீச்சலில் சாதிக்கத் தயாரானது எப்படி?

நீச்சல் பிடிக்கும், கடலில் இருப்பதும் பிடிக்கும், அந்த நேரங்களில் ரொம்ப என்ஜாய் செய்வேன். ஆனால், அந்த சிறிய வயதில் மற்றவர்களைப் போல இயல்பாக நானும் இருக்க வேண்டும், ரோட்டில் கிரிக்கெட் விளையாடனும் என நினைத்திருக்கிறேன்.

“காலை 4 மணிக்கு எழுந்தால்தான் 5 மணிக்கு பயிற்சிக்கு செல்ல முடியும். 5 முதல் 8 மணி வரை நீச்சல் பயிற்சி. அதன் பிறகு, வீட்டுக்கு வந்து தயாராகி பள்ளிக்குச் செல்வேன். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் மாலை 6 மணி வரை மீண்டும் நீச்சல் பயிற்சி, அதனைத் தொடர்ந்து டியூஷன் என என் பள்ளிக்காலம் முழுவதும் இப்படியே இருந்தது...”

இப்படி விளையாட்டிற்காக குழந்தைப்பருவத்தை செலவிட்ட நீங்கள் ஏன் விளையாட்டை ஒரு கேரியராக எடுத்துக்கொள்ளவில்லை என்ற கேள்விக்கு விரிவாக பதில் அளித்தார்.

‘நீச்சலே வேண்டாம்’ - திடீர் முடிவுக்குக் காரணம்?

அந்த காலத்தில் விளையாட்டுக்கு பெரிய வாய்ப்பு இல்லை, அதுவும் நீச்சலுக்கு. நான் இருந்தது மாரத்தான் ஸ்விம்மிங், அதில் கலந்துகொள்ளவும் பயிற்சிக்கும் அதிக செலவாகும். ஆனால், பொருளாதார ரீதியில் பெரிய பலன் இல்லை, இதற்கு அங்கீகாரமும் குறைவு.

“வெளிநாடுகளில் நடக்கும் ஒவ்வொரு போட்டிக்கும் லட்சங்களில் செலவு ஆகும். நாங்களே செலவு செய்யவேண்டும். ஆரம்பத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்த உதவியால்தான் கின்னஸ் சாதனை செய்ய முடிந்தது. ஆனால், பின்னர் கார்ப்பரேட் ஸ்பான்ஸர்கள் கிடைக்கவில்லை. தவிர இப்போதுபோல விளையாட்டுக்கு அப்போது பெரிய எதிர்காலம் குறிப்பாக ஸ்விம்மிங்கிற்கு இல்லை. குறுகிய கால ஸ்விம்மிங் என்றால் கூட முக்கியப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியும். ஆனால், மாரத்தான் ஸ்விம்விங் தனிப்பிரிவு என்பதால் விளையாட்டில் இருந்து படிப்புக்கு ஒதுங்கினேன். அது கடினமாக இருந்தாலும் அந்த முடிவுதான் சரி என எனக்குத் தோன்றியது.”

நீச்சல் போட்டிக்கு சென்றாலும் படிப்பில் ஓரளவு நல்ல மாணவனாகவே இருந்திருக்கிறார் குற்றாலீஸ்வரன். +2 முடித்த பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினீயரிங் சேர்ந்து படித்தார். படிப்பு முடித்த பிறகு அமெரிக்கா சென்றுவிட்டார். அமெரிக்கா, கனடா, ரஷ்யா என பல நாடுகளில் பணியாற்றி இருக்கிறார்.

குற்றாலீஸ்வரன்

Nanban Ventures - முதலீட்டாளர் ஆனது எப்படி?

இன்ஜினீயரிங் பணியில் சில காலம் இருந்தாலும் நிர்வாகம் படிக்க வேண்டும் என இந்தியா வந்து, ஐஐஎம் பெங்களூருவில் சேர்ந்தேன். ஆனால், ஒரு மாதத்தில் எனக்கு எம்.ஐ.டி-யில் (massachusetts) எம்.பி.ஏ. படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனால் மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றுவிட்டேன். 

“எம்.பி.ஏ. முடித்து அமெரிக்காவில் சில வருடம் வேலை செய்தேன். அப்போது கனடாவில் இருந்து ப்ளோகேபிப்டல் என்னும் முதலீட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு வென்ச்சர் கேப்பிட்டல், ஸ்டார்ட்-அப்’களில் முதலீடுகள் செய்ய ஆய்வு செய்வது என அத்துறையில் அனுபவத்தை பெற்றேன். அந்த பணியை விரும்பி செய்யத்தொடங்கினேன்.”

அப்போது ’நண்பன் குரூப்’ என்னும் நிறுவனம் அமெரிக்காவில் செயல்பட்டுவந்தது. அவர்களும் நிதி நிர்வாகப் பிரிவில் செயல்பட்டு வந்தார்கள். இந்த இடத்தில் ’நண்பன்’ எப்படி உருவானது என்பதை சொல்வது அவசியம் எனக் கூறிய குற்றாலீஸ்வரன் நண்பன் குறித்து விவரித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் (ஜிகே) அமெரிக்காவுக்குச் சென்ற பிறகு அங்கு நல்ல சிறப்பாக செயல்பட்டார். அவரின் இந்த வாழ்க்கைக்கு முக்கியமான காரணம் நிதிசார்ந்த தன்னிறைவு என்பது அவருக்குப் புரிந்தது. அதனால் அது தொடர்பாக நண்பர்களுக்கு இலவசமாக நிதி மேலாண்மை குறித்து சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார். வாரம் சில மணிநேரம் இதற்காக செலவிடத்தொடங்கினார்.

அப்படி அந்த வகுப்பில் சேர்ந்த இருவர் இதனை ஏன் நாம் பெரிய அளவில் மாற்றக்கூடாது எனச் சொல்லி இருக்கிறார்கள். அப்படி தொடங்கப்பட்டதே ‘நண்பன் க்ரூப்’ என விளக்கினார் குற்றால்.

ஜி.கே உடன் இணைந்த இருவரில் (மணி சண்முகம் மற்றும் சக்திவேல் பழனி) ஒருவர் என்னுடைய கல்லூரி ஜூனியர். நான் கனடாவில் ப்ளோகேபிட்டலில் வேலை செய்துகொண்டிருந்தேன். இவர்கள் அமெரிக்காவில் இருந்தனர். இருவரும் நிதிசார்ந்த துறையில் இருப்பதால் நிறைய உரையாடினோம். நண்பன் ஹெட்ஜ் பண்ட் உள்ளிட்ட சேவைகளை வழங்கினார்கள்.

“அப்போது நண்பன் க்ரூப்பில் நாம் ஏன் வென்ச்சர் கேபிட்டல் பிரிவு தொடங்கக் கூடாது என்னும் ஐடியா உருவானது. அவர்கள் மூவர் மற்றும் நானும் இணைந்து தொடங்கியதே ’நண்பன் வென்ச்சர்ஸ்’.

ஜூன் 2021-ம் ஆண்டு ’நண்பன் வென்ச்சர்ஸ்’ தொடங்கினோம். இதுவரை 100 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டி இருக்கிறோம். அமெரிக்காவில் 9 ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்திருக்கிறோம்.

டெக்னாலஜி ஸ்டார்ட்-அப்’களில் முதலீடு செய்கிறோம். 5 லட்சம் டாலரில் இருந்து 2 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்கிறோம். தேவைப்பட்டால் அதிகமாகக் கூட முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். இதுவரை அமெரிக்காவில் மட்டுமே முதலீடு செய்து வந்தோம். தற்போது இந்தியாவில் சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். முறையான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும், என குற்றாலீஸ்வரன் தெரிவித்தார்.

nanban ventures

எல்லாம் சரி பணிவாழ்க்கை, தொழில் என உங்கள் விருப்பப்படி வெற்றிப்பாதையில் சென்றுகொண்டிருக்கும் நீங்கள், நீச்சலை முற்றிலும் மறந்துவிட்டீர்களா?

“Passion என்பது இங்கே ஓவர் ரேட்டட் ஆக இருக்கு. நான் நீச்சல் வீரராக இருந்தபோது சிறப்பாகச் செயல்பட்டேன். அதன் பின்னர், எனக்கு ஒரு நல்ல எதிர்காலம், வசதியான வாழ்க்கை வேண்டும் என நினைத்தேன் அதற்காக நீச்சலை விட்டு சிறந்த கல்வியை பெற்றேன், நல்ல வேலையில் சேர்ந்தேன். இப்போது தேவைப்படுவோருக்கு திருப்பி செலுத்தவேண்டும் என்ற இடத்தில் இருக்கிறேன். அதற்காக முதலீட்டுப்பிரிவுக்கு வந்தேன்.”

அதுமட்டுமில்லாமல், நண்பன் குழுமத்தின் உதவியுடன் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி இருக்கிறார் குற்றாலீஸ்வரன். ’Nanban Sports Foundation' என்ற இந்த அறக்கட்டளை மூலம் எல்லாவித தனி விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கும், ஆனால், பொருளாதாரச்சூழலால் அந்த விளையாட்டை தொடரமுடியாதவர்களுக்கு நிதி உதவி வழங்குறோம், என்றார் குற்றாலீஸ்வரன்.

இது முற்றிலும் என்னுடைய ஐடியா, அதற்கு நண்பன் குழுமம் உதவுகிறார்கள். சென்னையில் இயங்கும் இந்த அறக்கட்டளை மூலம் இதுவரை 16 விளையாட்டு வீரர்கள் பயன் அடைந்திருக்கிறார்கள்.

“திறமை இருக்கும், ஆனால் அதற்கான சூழல் இல்லாத பலருக்கும் நாங்கள் உதவுகிறோம். நான் விளையாட்டில் ஈடுபடும்போது விளையாட்டுக்கு பெரிய எதிர்காலம் இல்லை, சப்போர்ட்டும் இல்லை. ஆனால், தற்போது விளையாட்டில் பெரிய மாற்றங்கள் உருவாகி இருக்கின்றன. இது மேலும் உயரும் என்றே நம்புகிறேன்,” என்று கூறி அமெரிக்கா செல்ல ப்ளைட் பிடிக்க நேரமானதால் வேகமாக விடைப்பெற்றார் குற்றாலீஸ்வரன்.

நாடே கொண்டாடிய விளையாட்டு வீரராக இருந்த குற்றாலீஸ்வரன் இன்று தொழில்துறையில் கோலோச்சினாலும், அவரின் நீச்சல் தாகம் அவரை முற்றிலும் விட்டுப்போகவில்லை என்பதற்கு அவரின் முயற்சிகளே சான்று எனலாம்.