9 மாதத்தில் - 20000 வாடிக்கையாளர்கள்: தலைப்புச் செய்தி ஆகிய ஷாம்பூ தயாரிப்பு நிறுவனம்!
இந்தத் தலைமுடி மற்றும் சருமப் பாதுகாப்பு அழகு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனம், தொடங்கிய 9 மாதங்களில் ஆன்லைன் தளங்களில் விற்காமலேயே இந்தியா முழுதும் பிரபலமாகியது எப்படி?
மார்கெட்டில் விற்கும் ஆயிரக்கணக்கான அழகு சாதனப் பொருட்களில் நமக்கு எது பொருந்தும் என்று எவ்வாறு தீர்மானிப்பது என்பதை ரோஹித் சாவ்லா கேட்டது தான் இன்று பல ஆயிரம் வாடிக்கையாளர்களின் விடையாக மாறியுள்ளது.
’தி மேன் கம்பனி’ யின் துணை நிறுவனராக இருந்துவிட்டு அதில் இருந்து வெளிவந்த பொழுது ரோஹித் சாவ்லாவின் எண்ணம், மக்களின் தலைமுடி தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு நிறுவனத்தை நிறுவ வேண்டும் என்பதே! நம்முடனான ஒரு சிறப்பு நேர்காணலில் அவரது பயணத்தை பற்றி பகிர்ந்து கொண்டார் அவர்.
’தி மேன் கம்பனி’யை நிறுவும் பொழுது அழகுப் பொருட்கள் சந்தையில் அதிக அனுபவம் கிடைத்தது. இதில் ஆச்சர்யம் மிக்க விஷயம், நமக்கு சிறிதும் பொருந்தாமல் இருந்தாலும், சாதாரண பொருட்களையே நாம் பயன்படுத்துவது தான். முக்கியமாக ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள்,” என்கிறார் இரண்டாவது முறையாக தொழில் முனைந்துள்ள ரோஹித் சாவ்லா.
ஓவ்வொருவருக்கும் சரும வகை எவ்வாறு வேறுபடுகிறதோ அதே போல், தலை முடியின் வகையும் வேறாக உள்ளது . இதனால் அவரவர் கூந்தலின் வகை, அமைப்பு மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு பொருட்கள் தயாரிக்க நினைத்த ரோஹித் உருவாக்கியது தான் ’Bare Anatomy.’
Bare Anatomy. என்பது என்ன? இந்த வியாபாரம் எப்படி தொடங்கப்பட்டது?
ரோஹித் சாவ்லா: Bare Anatomy என்பது தொழில்நுட்பத்தை அழகு பராமரிப்பில் இணைத்து எதிர்காலத்திற்காக சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். தொழில் நுட்பம் தான் அழகு சார்ந்த தொழிலின் எதிர்காலம் என்று நான் நம்புகிறேன். எங்கள் விஞ்ஞானிகள் ஒவ்வொரு வாடிக்கையாளர் கூந்தலின் அமைப்பையும் ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருட்கள் கலந்து அழகு சாதன பொருட்கள் தயாரிக்கின்றனர்.
தனிநபர் தலை முடி பராமரிப்பில் துவங்கி தற்பொழுது Bare Anatomy ஷாம்பூ, கண்டிஷனர், முடி எண்ணெய், தலை முடி சீரம், மற்றும் முடிக்கான மாஸ்குகள் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். இவர்கள் ஷாம்பூவின் ஆரம்ப விலை 750 ரூபாய்.
இந்த நிறுவனத்தை தற்போது இதன் பிராண்ட் ஹெட் ஆக இருக்கும் சிஃபட் குராணா மற்றும் முன்னாள் யூனிலீவர் மற்றும் ஜான்சன் & ஜான்சனில் பணியாற்றிய விமல் போலா ஆகியோரோடு இணைந்து துவங்கியுள்ளார் ரோஹித்.
தனிப்பட்ட முறையில் கூந்தல் பராபரிப்புப் பொருட்கள் தயாரிக்கும் Bare Anatomy, தற்போது ஷாம்பூ, கண்டிஷனர், தலை எண்ணை, சீரம் மற்றும் மாஸ்க்குகள் தயாரித்து வருகிறது. எங்களின் அனைத்து பொருட்களும் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்கள் வந்த பிறகு தான் தயாரிக்கிறோம்.
எங்கள் பொருட்களை ஆர்டர் செய்ய, வாடிக்கையாளர்கள் முதலில் ஒரு வினா-விடைத் தாளிற்கு பதிலளிக்க வேண்டும். அதில் அவர்கள் கூந்தலின் அமைப்பு பற்றிப் பல கேள்விகள் இருக்கும். ஒருவர் அவர் ஷாம்பூவின் நிறம், மணம், ஏன் பாட்டிலில் அவர்கள் பெயர் இருக்கும்படியும் தேர்வு செய்யலாம்.
தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கும் இந்த நிறுவனம், தங்களது பொருட்களை இயற்கையாக, வீகன் முறையில், எந்த மிருகங்களையும் துன்புறுத்தாது தயாரிக்கின்றனர். இவை அனைத்தும் வாடிக்கையாளரின் தலை முடி வகை, அவரது சரும வகை, வாழ்க்கை முறை, உணவு முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தயாரிக்கின்றனர்.
நீங்கள் உங்கள் பொருட்களை எப்படி தயார் செய்கிறீர்கள், அவற்றுக்குத் தேவையான பொருட்களை எங்கிருந்து பெருகிறீர்கள்?
ரோஹித் சாவ்லா: இந்த நிறுவனத்தை நாங்கள் துவங்கிய பொழுது, நீண்ட வருடங்கள் இருக்கப்போகும் ஒரு ப்ராண்டை உருவாக்குகிறேன் என்று எனக்கு தெரியும். அதனால் நான் அராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நிறைய முதலீடு செய்தேன். அதற்காக குருக்கிராமில் பிரத்யேகமாக ஒரு ஆய்வுக்கூடம் ஒன்றை நிறுவினேன்.
விமல்; பொருளின் தயாரிப்புக்கு பொறுப்பு ஏற்க உலகம் முழுவதிலும் இருந்து மூலப்பொருட்களை கொள்முதல் செய்து எங்கள் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களை தயாரிக்கத் துவங்கினோம். எங்கள் தயாரிப்புகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் எங்கு விளையுமோ அங்கிருந்தே அவற்றை பெருகிறோம். உதாரணமாக, ஷியா வெண்ணையை கானாவிலிருந்தும், மொரோக்கன் எண்ணையை மொரோக்கோவில் இருந்தும் பெறுகிறோம்.
எங்கள் வாடிக்கையாளர்களிடம் கிடைத்த வரவேற்பு மற்றும் எங்கள் ஆராய்ச்சி குழுவின் அயராத உழைப்பினாலும், எங்களால் மேலும் விரிவடைய முடியும் என்று முயற்சித்து கிடைத்த பலன் தான் மற்ற தயாரிப்புகளான சீரம், எண்ணை மற்றும் தலை முடிக்கான மாஸ்க். இவை கூந்தலின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன.
சாஸ் என்ற வாடிக்கையாளர் சார்ந்த விசியிடம் இருந்து இந்த வருடம் 500,000 டாலர்கள் நிதி பெற்றிருக்கிறோம். சர்வதேச தொழில் நுட்பம் மற்றும் எங்கள் ஆராய்ச்சி ஆய்வுக்கூடங்கள் எங்கள் மார்கெட்டிங் மற்றும் எங்கள் தயாரிப்புகளையும் மேம்படுத்தவுள்ளோம்.
உங்களின் இந்த உடனுக்குடன் வியாபார மாதிரிக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கு? மற்ற பெரிய பிராண்டுகளுக்கு மத்தியில் நீங்கள் எவ்வாறு போட்டியிடுகிறீர்கள்?
ரோஹித் சாவ்லா: தயாரிப்புகளை மொத்தமாக தயாரித்து விற்றால் நாங்கள் கூட்டத்தில் ஒன்றாக மறைந்து விடுவோம். அதனால் ஆர்டர்கள் வந்த பிறகு தான் நாங்கள் தயாரிக்கவே தொடங்குவோம்.
பெரும்பாலான எங்களது வாடிக்கையாளர்கள் தலைமுடி பிரச்சனையால் பல வருடம் போராடியிருக்கிறார்கள். அதனால் எங்களது தயாரிப்புகள் அவர்களுக்கென்று பிரத்யேகமாக தயாரித்து வழங்குகிறோம். வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளைக் கேட்டு அவர்களுக்கு ஏற்ற மாதிரி பொருட்கள் புதிதாக தயாரிப்பதால் முன்னதாக கையிருப்பு வைக்க வேண்டிய சிக்கல் இல்லை.
நீங்கள் ஏன் உங்கள் தயாரிப்புகளை இணையதளங்கள் மூலம் விற்பதில்லை?
ரோஹித் சாவ்லா: நாங்கள் ஆரம்பத்தில் எங்கள் இணையதளத்தில் விற்க ஆரம்பித்தோம். எங்கள் தயாரிப்புகளை இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலில் விளம்பரம் செய்தோம். அது வாடிக்கையாளர்களை எங்கள் இணையத்திற்கு திருப்பியது.
எங்களது ‘உடனுக்குடன்’ வியாபார மாதிரி என்பதால், ஒரு வினா-விடை கேள்வித்தாள் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து கொள்கிறொம். அதனால் எங்களால் இணையதளம் மூலம் விற்க முடியாது. அதே காரணத்தால் எங்களால் கடைகளிலும் விற்க முடியாது. வாடிக்கையாளர் ஆர்டர் கொடுக்கும் வகையில் எங்கள் தளத்தை வலுவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம்.
Bare Anatomy 2018ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, முதல் தயாரிப்பு மார்ச் 2019ல் விற்கப்பட்டது. தொடங்கி 9 மாதத்தில் பத்து மடங்கு வளர்ச்சி அடைந்து இன்று 20,000 வாடிக்கையாளர்களை தயாரிப்புகள் சென்று அடைந்துள்ளது.
இத்தகைய வியாபாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் என்னென்ன சவால்களை சந்திக்கிறீர்கள்?
ரோஹித் சாவ்லா: வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப நாங்கள் பொருட்களை தயாரிப்பதால், வேகமாக வளர்வது சவாலாக உள்ளது. அதிக ஆர்டர்கள் வந்தால் சமாளிக்க வேண்டும். கடையில் இருக்கும் பெரும்பாலான தயாரிப்புகள் பெரும் உற்பத்தி மூலம் தயாரிக்கப் படுவதால், வாடிக்கையாளர்களிடம் அவ்வப்போது இருக்கும் தேவைகளை அவர்களால் எளிதில் சமாளிக்க முடியும். மேலும் அந்த தயாரிப்புகளில் பதப்படுத்தும் பொருட்கள் இருப்பதால் அவை எளிதில் வீணாவதில்லை.
சமீபத்தில் தீபாவளி முடிந்து எங்களுக்கு அதிக ஆர்டர்கள் வந்ததால், எங்கள் இணையதளம் செயலிழந்துவிட்டது. அதிகப்படியான ஆர்டர்களை எங்களால் சமாளிக்க முடியவில்லை. ஆனால் வியாபாரம் பெருக பெருக நாங்கள் சவால்களை எதிர்கொள்ள முயற்சி செய்து வருகிறோம்.
Bare Anatomy-ன் எதிர்காலம் எப்படி இருக்கு?
ரோஹித் சாவ்லா: வெகு விரைவாக நாங்கள் வளர்ந்து வருகிறோம். அதனால் எங்கள் தயாரிப்புகளை கெடாமல் சேகரித்து வைப்பது பற்றி யோசித்து வருகிறோம். மேலும் வாடிக்கையாளர்களை தங்களுக்குத் தனித்துவமான தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் வரும் பயன்களையும் எடுத்துறைத்து வருகிறோம்.
ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில் : கெளதம் தவமணி