100 மில்லியன் டாலர் நிதி மூலம் ஹசுரா நிறுவனம் இந்த ஆண்டின் 10வது யூனிகார்ன் ஆனது!
ஹசுரா நிறுவனம் சி சுற்றில் 100 மில்லியன் டாலர் நிதி திரட்டியதன் மூலம், யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த ஆண்டு யூனிகார்னாகும் 10 வது இந்திய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பாக விளங்குகிறது.
கிராப்கியூஎல் (GraphQL) ஸ்டார்ட் அப் நிறுவனமான ஹசுரா, (Hasura), கிரினோக்ஸ் நிறுவனம் தலைமை வகித்த சி சுற்றில் 100 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
இந்தி நிதி மூலம் ஹசுரா நிறுவனம், இதுவரை மொத்தம் 136.5 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து நிறுவனம், இந்த ஆண்டு யூனிகார்ன் அந்தஸ்து பெறும் பத்தாவது நிறுவனம் ஆகியுள்ளது.
ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் நெக்சஸ் வென்சர் பார்ட்னர்ஸ், லைட்ஸ்பீடு வென்சர் பார்ட்னர்ஸ், வெர்டெக்ஸ் வென்சர்ஸ் ஆகிய நிறுவனங்களும் இந்த நிதிச்சுற்றில் பங்கேற்றதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே இதுவரை பத்து இந்திய ஸ்டார்ட் அப்கள் யூனிகார்ன் அந்தஸ்து பெற்றுள்ளன.
மேம்பட்ட அனல்டிக்ஸ் நிறுவனமான பிராக்டல், கல்வி நுட்ப நிறுவனமான லீட், மனிதவள நுட்ப நிறுவனமான டார்வின்பாக்ஸ், சமூக காமர்ஸ் நிறுவனமான டீல்ஷேர், பிளாக் செயின் நிறுவனமான பாலிகன், உள் அலங்கார நிறுவனமான லைவ்ஸ்பேஸ், பி2பி காமர்ஸ் நிறுவனமான எலாஸ்டிக்ரன், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான எக்ஸ்பிரஸ்பீஸ், உரையாடல் ஏஐ நிறுவனமான யூனிபோர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு பில்லியன் டாலர் சந்தை மதிப்பு பெற்று யூனினார்ன் நிறுவனங்களாகியுள்ளன. இப்போது இந்த வரிசையில் பத்தாவது நிறுவனமாக ஹசுரா இணைந்துள்ளது.
இந்தியாவின் பெங்களூரு மற்றும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் தலைமையகம் கொண்டுள்ள ஹசுரா, இந்த புதிய மூலதனத்தை ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு மற்றும் தனது கிராப்கியூஎல் இஞ்சினுக்கான சர்வதேச நடவடிக்கைகளை விரிவாக்கவும் பயன்படுத்திக்கொள்ள இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிராப்கியூஎல் தொழில்நுட்பத்தில் எந்தவித அனுபவமும் இல்லாதவர்கள் கூட, ஏற்கனவே உள்ள ஏபிஐ மற்றும் டேட்டாபேஸ் கொண்டு கிராப்கியூஎல் ஏபிஐ உருவாக்கி கொள்ள இந்த சேவை வழி செய்வதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்த சேவை 400 மில்லியன் முறைக்கு மேல் டவுண்லோடு செய்யப்பட்டுள்ளதாகவும், கித்ஹப் தளத்தில் 25,000க்கு மேல் ஸ்டார் மதிப்பு கிடைத்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“எங்கள் புதுமையாக வேகத்தை அதிகரிக்க இந்த நிதி உதவும். மேலும், இது வேகமாக விரிவடையும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் சேவைகளை விரைவாக வழங்கவும் உதவும்,” என்று ஹசுரா நிறுவன சி.இ.ஓ. தன்மய் கோபால் கூறியுள்ளார்.
"இந்த நிதிச்சுற்று மூலம், எங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் ஹசுரா குழு, தரவுகள் அணுகலுக்கான தீர்வு வழங்கி, டெவலப்பர் செயல்திறனுக்கான அடுத்த கட்டத்தை திறந்து வைப்பதற்கான எங்கள் முயற்சியை இரட்டிப்பாக்குகிறோம். டேட்டா அமைப்புகளுக்கான ஆதரவை வேகமாக வழங்குவதன் மூலம் பயனாளிகள் தேவையை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
2017ல் ரஜோஷி கோஷ் மற்றும் தன்மய் கோபால் ஆகியோரால் துவக்கப்பட்ட ‘ஹசுரா’ தரவுகள் அணுகுதலில் உள்ள தடைகளை நீக்கி வெப் அப்ளிகேஷன் உருவாக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. தரவுகள் அணுகலுக்கான கிராப்கியூஎல் ஏபிஐ உருவாக்கத் தேவையான நேரம் மற்றும் அனுபவத்தை இது குறைக்கிறது.
“பயனர்கள் ஏற்பை விட சக்திவாய்ந்த டெவலப்பர் அனுபவத்திற்கு வேறு சிறந்த சான்றுகள் இல்லை. இந்த நோக்கில் ஹசுரா போன்ற நிறுவனங்கள் அதிகம் இல்லை,” என்று க்ரீனோக்ஸ் பார்ட்னர் நீல் ஷா கூறியுள்ளார்.
"டெவலப்பட் செயல்திறன் மேம்பாடு மற்றும் அப்ளிகேஷன்களுக்கான குறைந்த நேரம் ஆகியவை பொதுவான அம்சமாகும். இப்போது ஹசுரா கிளவுட் இதை மேலும் ஒரு படி முன்னே எடுத்துச்சென்று கிராப்கியூஎல் வசதியை முழுவதும் ஜனநாயகமயமாக்கியுள்ளது. எவரும் தரவுகளை எளிதாக, வேகமாக அணுகுவது சாத்தியமாகிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
யூனிகார்ன் ஆண்டு
2022ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே இந்திய சூழலில் 10 தொழில்நுட்ப யூனிகார்ன்கள் உருவாகியுள்ளன. இதனிடையே, PwC அறிக்கை, இந்த ஆண்டு 50க்கும் மேற்பட்ட இந்திய ஸ்டார்ட் அப்கள் யூனிகார்ன் அந்தஸ்து பெறும் சாத்தியம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
2021ம் ஆண்டு, 44 ஸ்டார்ட் அப்கள் யூனிகார்ன் அந்தஸ்து பெற்றன. 2011 முதல் 2020 வரை மொத்தம் 33 யூனிகார்ன் நிறுவனங்களே உருவாகியுள்ளன.