ரூ.1.20 லட்ச செலவில் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்ற அரசுத் தலைமை ஆசிரியர்!
லீவு போடாமல் பள்ளிக்கு வந்த அரசுப் பள்ளி மாணவர்களை தன் சொந்தச் செலவில் விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார் இந்த ஆசிரியர். இவர் எதற்கு இப்படிச் செய்தார் தெரியுமா?
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லை என்று மூடுவிழா காணப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையானது ஆண்டுக்கு ஆண்டு கணிசமான அளவு உயர்ந்து வருகிறது. இது ஒருபுறம் என்றால் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் சரிவர பள்ளிக்கு வராமல் இருப்பதும் தொடர்கிறது, இடைநிற்றல்களைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி தலைமை ஆசிரியர்களும், வகுப்பு ஆசிரியர்களும் தனி முயற்சி மேற்கொண்டு மாணவர்களின் கற்கும் ஆர்வத்திற்கு ஊக்கமளித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் வித்தியாசமான முறையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
சிவகாசி அருகே உள்ள மங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 64 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் சுபநிகழ்ச்சிகளுக்கு செல்வது, உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வது என்று தேவையின்றி விடுப்பு எடுத்து வந்திருக்கின்றனர். இதனை தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கிறார் ஜெயச்சந்திரன்.
அப்போது தான் அவருக்கு அந்தத் திட்டம் மனதில் தோன்றியுள்ளது. விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வரும் மாணவர்களை விமானம் மற்றும் ரயிலில் சுற்றுலா அழைத்துச் செல்வேன் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
"இந்த அறிவிப்பை நான் வெளியிட்ட 4 மாதங்களில் மாணவர்கள் வருகையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. 5ம் வகுப்பு படிக்கும் 20 மாணவர்களில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே உடல்நிலை சரியில்லை என்ற விடுப்பு எடுத்தனர் மற்றவர்கள் வேறு தேவையற்ற காரணங்களுக்காக விடுப்பு எடுக்கவே இல்லை. மாணவர்கள் பள்ளிக்கு வரும் பழக்கம் வேரூன்றியதோடு அவர்களுக்கு கற்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது," என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் ஜெயச்சந்திரன்.
காற்று வாக்கில் அறிவிப்பு வெளியிட்டு விட்டு அதிலிருந்து பின்வாங்காமல் குழந்தைகள் மனதில் விதைத்த ஆர்வத்தை அவர்களின் புன்னகையால் அறுவடை செய்திருக்கிறார் தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன்.
தன்னுடைய சொந்தச் செலவில் 5ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்கள் 20 பேர் மற்றும் ஆசிரியர்கள் 4 பேரை ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்த்திருக்கின்றனர். பின்னர் சென்னையில் இருந்து மதுரைக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்றிருக்கிறார்.
இதற்காக சுமார் ரூ. 1.20 லட்சம் தன்னுடைய பணத்தை செலவு செய்திருக்கிறார் ஜெயச்சந்திரன்.
"ரயிலில் கூட சென்று வராத கிராமப்புற மாணவர்களுக்கு ரயில் பயணம், சென்னையில் மகாபலிபுரம், வண்டலூர் பார்க் என பட்டினத்தை ஒரு நாள் முழுவதும் வேனில் சுற்றிப் பார்த்துவிட்டு விமானத்தில் ஊர் திரும்பிய போது அவர்கள் முகங்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சியும், வியப்புமே ஒரு நிறைவைத் தந்தது. இந்த சுற்றுலா அவர்களது வாழ்க்கையில் மறக்க முடியாததாக இருக்கும்.
“இதே போன்று விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வரும் மற்ற வகுப்பு மாணவர்களையும் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிட்டிருக்கிறோம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தைத் தூண்ட அவர்களை விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வரவைப்பதே ஒரு வெற்றி தான்," என்று புன்னகைக்கிறார் இந்த ஜெய(ம்)சந்திரன்.
தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் செயலுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.