கிராமப்புற பள்ளி மாணவர்கள் இடைநிறுத்தலைக் குறைக்க புது முயற்சி எடுத்த ஆசிரியர்!
கர்நாடகாவைச் சேர்ந்த கோட்ரேஷ் பாவிஹல்லி மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்த ’பென்சில்’ என்கிற பத்திரிக்கையைத் தொடங்கியுள்ளார்.
இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தம் செய்கின்றனர். பள்ளிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதியும் அடிப்படை வசதிகளும் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம்.
இவ்வாறு படிப்பை இடைநிறுத்தம் செய்வது கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர்புறங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது. கர்நாடகாவின் பெலகர்கி கிராமத்தில் மேலே குறிப்பிட்டக் காரணங்களால் இடைநிறுத்த விகிதம் அதிகமாக உள்ளது. மேலும் இந்தப் பகுதியில் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருப்பதும் மாணவர்கள் படிப்பை இடைநிறுத்தம் செய்வதற்கான மற்றொரு காரணமாகத் தெரிகிறது.
குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி கிடைப்பதற்கு அவர்களை பள்ளியில் தக்கவைத்துக் கொள்ளவேண்டும். எனவே இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண ’பென்சில்’ என்கிற செய்தித்தாளை தொடங்கியுள்ளார் அரசுப் பள்ளி ஆசிரியரான கோட்ரேஷ் பாவிஹல்லி. பள்ளிக்கான இந்த செய்தித்தாள் மாணவர்களால் நிர்வகிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
தி லாஜிக்கல் இண்டியன் உடனான உரையாடலில் கோட்ரேஷ் கூறும்போது,
“நான் ’பென்சில்’ என்கிற செய்தித்தாளைத் தொடங்கினேன். இதை பள்ளி மாணவர்களே எழுதி நிர்வகித்து வருகின்றனர். மாணவர்கள் கட்டுரைகள் எழுதவும் தகவல்கள் சேகரிக்கவும் மக்களுடன் உரையாடி ஒட்டுமொத்த கிராமத்தையும் இணைத்துக்கொண்டு ஒரு சமூகத்தை உருவாக்கவும் வாய்ப்பளிக்கிறது. அவர்கள் தங்கள் திறமையையும் கலைத்திறனையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த உதவும் தளமாக விளங்குகிறது,” என்றார்.
இந்த செய்தித்தாள் ஆறாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஓவியம் மற்றும் படைப்பாற்றல், கிராம வரலாறு, மொத்த கிராமமும் பங்கேற்று கேள்விகள் கேட்கும் பகுதி என செய்தித்தாளில் பல்வேறு பகுதிகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
கோட்ரேஷின் முயற்சி எளிதாக இருக்கவில்லை. மாணவர்களை மீண்டும் பள்ளியில் கொண்டு சேர்ப்பதற்கு பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டார். குழந்தைகளின் படிப்பைப் பற்றி சற்றும் கவலைப்படாத பெற்றோர்களை சம்மதிக்கவைப்பது மிகவும் கடினமாக இருந்தது. கோட்ரேஷ் கூறும்போது,
“நிலைமையை ஆய்வு செய்து பண்ணைத் தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தபோது ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை கவனித்தேன். பாழடைந்த கொட்டகை போன்ற சிறிய அறை கல்வி கற்பதற்கான இடமாக மக்கள் மனதில் பதிவதில்லை. பள்ளியின் அமைப்பை மாற்றி அதன் விளைவை கவனிக்கத் தீர்மானித்தேன்,” என தெரிவித்ததாக The Lede குறிப்பிடுகிறது.
கோட்ரேஷ் பள்ளியின் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். பள்ளியை புதுப்பிப்பதற்காக வெற்றிகரமாக ஒரு லட்ச ரூபாய் சேகரித்தார். ஒரு ஏக்கர் நிலத்தையும் வாங்கினார். கூடுதலாக வகுப்பறைகள் கட்டுவதற்கு இந்தத் தொகை உதவும். ஆனால் அதிலும் பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது.
”மூன்று அறைகளுக்கான ஒப்புதல் பெற ஆறாண்டுகள் ஆனது. அதேநேரம் நான் மரக்கன்றுகளை நடத் தொடங்கினேன். பள்ளி 5ம் வகுப்பில் இருந்து 6ம் வகுப்பு வரையிலும் பின்னர் எட்டாம் வகுப்பு வரை மேம்படுத்தப்பட்டது. வகுப்பறைகள் தயாரான சமயத்தில் பள்ளி பசுமையாக காட்சியளித்தது. பள்ளியின் இந்தப் புதிய தோற்றம் கிராமமக்களின் கவனத்தை ஈர்க்கும் என்றும் பள்ளி குறித்த அவர்களது எதிர்மறையான கண்ணோட்டம் மாறும் என்றும் நம்பினேன். கிராம மக்கள் இந்த முயற்சியை வரவேற்றனர்,” என்றார்.
தற்போது இந்தப் பள்ளி வளாகம் சுற்றிலும் பசுமையாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து ’பென்சில்’ பத்திரிக்கையும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்பட்டு வருகிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA