சுகாதாரம், மருத்துவத் துறை ஸ்டார்ட்-அப்’கள் நிதி முதலீடு மற்றும் ரூ.5 லட்சம் வெல்ல வாய்ப்பு!
சுகாதாரத் துறையில் நிதி முதலீடு மற்றும் பீட்டா பரிசோதனைக்காக முனைப்புடன் தேடும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், செப்டம்பர் 19-20 2020 தேதிகளில் நடைபெறவுள்ள ‘மெய்நிகர் பிட்ச்ஃபெஸ்ட்’ ’Virtual Pitchfest' நிகழ்வில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க CAHO என்ற லாபமில்லா தன்னார்வ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த பிட்ச்ஃபெஸ்டில் கலந்துகொள்ள ரூ.500 என்ற சிறிய கட்டணத்தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். சுகாதாரத்துறை தலைவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் முன்பு ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் தங்களது சிறப்பான யோசனைகளை இந்நிகழ்வில் சமர்ப்பிக்கலாம் மற்றும் ரூ.5 லட்சம் வரை பரிசுப்பணத்தை வெல்ல வாய்ப்பும் உள்ளது.
செப்டம்பர் 15 ஆம் தேதி வரை www.cahotech.com என்ற தளத்தில் பதிவு செய்யலாம்.
CAHO என்ற லாபமில்லா தன்னார்வ நிறுவனம் நடத்தும் ஆண்டு தொழில்நுட்பக் கருத்தரங்கான ’கஹோடெக்’ (CAHOTECH), செப்டம்பர் 25-29 தேதிகளில் மெய்நிகர் முறையில் நடைபெறுகிறது. இந்த அமைப்பு நடத்தும் இந்த ஆண்டுக்கான கருத்தரங்கின் கருப்பொருள் 'சுகாதார பராமரிப்பின் எதிர்காலம் - அதை நிகழச்செய்வது' என்பதாகும். இந்த வருடாந்திர நிகழ்வானது, இந்நாட்டில் நடத்தப்படுகின்ற மிகப்பெரிய சுகாதார - தொழில்நுட்ப நிகழ்வாக கருதப்படுகிறது.
சுகாதாரப் பராமரிப்பு துறையோடு தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் அண்மை தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்து, தங்களை நிகழ்நிலைப்படுத்திக் கொள்வதற்காக 1000க்கும் அதிகமான சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் மெய்நிகர் முறையில் கலந்து கொள்வார்கள்.
மருத்துவ - தொழில்நுட்ப விற்பனை நிறுவனங்கள், செய்முறை புத்தாக்குனர்கள், தீர்வு வழங்குனர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், மருத்துவமனைகளில் முடிவுகளை செய்பவர்கள் மற்றும் புத்தாக்கமான மாறுபட்ட தொழில்நுட்பங்கள் மீது முதலீடு செய்ய விரும்புகின்ற முதலீட்டாளர்கள் ஆகியோர் பங்கேற்பாளர்களுள் அடங்குவர். இந்த ஆண்டு நடைபெறும் இந்நிகழ்வானது, ஒரு மெய்நிகர் கண்காட்சியையும் மற்றும் மெய்நிகர் கருத்தரங்கையும் கொண்டிருக்கும்.
கஹோடெக் 2020 – ன் அமைப்பு தலைவரும், கஹோ கூட்டமைப்பின் துணைத் தலைவருமான திரு.சமீர் மேத்தா இது தொடர்பாக பேசுகையில்,
“தொழில்நுட்ப உருவாக்குனர்கள், புத்தாக்குனர்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு வழங்கலில் ஈடுபட்டுள்ள பங்காளர்களுக்கு இடையே ஆரோக்கியமான, நேர்மறையான நல்லுறவை உருவாக்க உதவிய நான்கு வெற்றிகரமான இக்கருத்தரங்கு நிகழ்விற்குப் பிறகு, இந்தியாவில் சுகாதார பராமரிப்பு-தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய நிகழ்வாக இன்றைக்கு கஹோடெக் மதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, 5வது கஹோடெக் நிகழ்வானது, அனைத்து புவியியல் எல்லைகள் மற்றும் வரம்புகளைக் கடந்து மெய்நிகர் முறையில் உலகமெங்கும் தனது எல்லைகளை பரப்புகிறது.
”இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தைக் கடந்து தொலைநோக்குடன் பார்க்கவும், எதிர்காலத் தேவைகளை கருத்தில்கொள்ளவும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சுகாதாரத்துறை மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை இந்நிகழ்வின் பங்கேற்பாளர்களோடு நெருக்கமாக இது ஒருங்கிணைக்கவிருக்கிறது,' என்று கூறினார்.
கஹோடெக் 2020 நிகழ்வில் 30க்கும் அதிகமான புகழ்பெற்ற வல்லுனர்கள் மெய்நிகர் முறையில் பல்வேறு அமர்வுகள், உரைகள் மற்றும் கலந்துரையாடல்களில் தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
டாக்டர் இந்து பூஷன் (சிஇஓ, ஆயுஷ்மான் பாரத்-PMJAY); டாக்டர் கிரிதர் ஜே. கயானி, தலைமை இயக்குனர், இந்திய உடல்நல சேவை வழங்குனர்கள் சங்கம்; திருமதி.கிரண் மஜும்தார் ஷா, செயல்தலைவர், பயோகான் லிமிடெட்; திருமதி. சங்கீதா ரெட்டி, இணை நிர்வாக இயக்குனர், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்; டாக்டர் அஜய் நாயர், சிஇஓ, ஸ்வஸ்த்; திரு. ஜான் மெய்னர்ஸ், தலைவர், தொடர்புடைய பிசினஸ் மற்றும் சுகாதாரத் தீர்வுகள், அமெரிக்க இதயவியல் சங்கம்; டாக்டர் குமார் பெலானி, மருத்துவப் பேராசிரியர், மயக்கவியல் துறை, யுனிவர்சிட்டி ஆஃப் மினிசோட்டா ஹெல்த் (யுஎஸ்ஏ); டாக்டர். மோகன் செல்லப்பா, பிரசிடெண்ட் (குளோபல் வென்ச்சர்ஸ்), ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின் இன்டர்நேஷனல்; டாக்டர்.தேவி ஷெட்டி, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், நாராயணா ஹெல்த்; மற்றும் திரு.அஷுடோஷ் ரகுவன்சி, நிர்வாக இயக்குனர் & சிஇஓ, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் போன்ற பிரபல ஆளுமைகள் இவர்களுள் சிலராவர்.
கஹோடெக் 2020 நிகழ்வின் அமைப்பு செயலர் திரு. ஜே. அடெல் பேசுகையில், 'தொழில்நுட்ப புத்தாக்கங்கள் மீது அதிக கூர்நோக்கம் செலுத்தும் கஹோடெக், உடல்நல பராமரிப்பு தொழில்துறைக்கு புதிய மற்றும் சிறப்பான தொழில்நுட்ப தீர்வுகளை அறிமுகம் செய்வதை இலக்காகக் கொண்டிருக்கிறது.
“உடல்நலப் பராமரிப்பு தொழில்நுட்பத்தில் அண்மை கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்கள் பற்றி உடல்நல பராமரிப்பை வழங்குபவர்கள் கற்றுக்கொள்வதற்கும் மற்றும் ஐடி, மருத்துவ சாதனங்கள் / இயந்திரங்கள் மற்றும் செய்முறைகள் துறையில் எதிர்கால போக்குகளுக்கு தயாரானவர்களாக அவர்களை ஆக்குவதற்கும் ஒரு தனிச்சிறப்பான செயல்தளத்தை இது வழங்குகிறது.
ஆரம்ப நிலைகளிலேயே நம்பிக்கையளிக்கும் தொழில்நுட்பத்தை அடையாளம் காண சுகாதார – தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஒரே தளத்தில் பிட்ச்ஃபெஸ்ட் நிகழ்வு கொண்டு வருகிறது. இதன்மூலம் அவர்கள் தங்களது செயல்பாடுகளை உயர்த்தவும், வளரவும் அவர்களுக்கு திறன் அதிகாரத்தை வழங்குகிறது,” என்று கூறினார்.
இக்கருத்தரங்கிற்கு உறுப்பினர்கள் ரூ.500 என்ற கட்டணத்தொகையையும் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்கள் ரூ.1000 என்ற கட்டணத்தையும் செலுத்தி www.cahotech.com என்ற வலைதளத்தில் பிரதிநிதிகளாக பதிவு செய்துகொள்ளலாம்.