குழந்தைகள் விரும்பும் ஆரோக்கிய உணவு: புதுத் தொழில் சிந்தனையுடன் ‘லன்ச்பாக்ஸ்’ தொடங்கிய கிருபா!
பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவை வழங்கி வந்த ‘MC Lunchbox' தற்போது ‘SnackLabs' என்ற புதிய பிராண்டை பள்ளிக் கேண்டீன்களில் அறிமுகப்படுத்தி, சத்தான ஸ்னாக் வகைகளை விற்பனை செய்ய உள்ளது!
குழந்தை வளர்ப்பு ஒரு கலை தான்; ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்ததை மட்டுமே வழங்க விரும்புவர். உடுத்தும் உடையில் துவங்கி விளையாட்டு பொருட்கள் வரை அனைத்தையும் சிறப்பாக அமைத்து தருவர். ஆனால் உண்ணும் உணவிலும் குழந்தைக்கு ஏற்ற சிறந்த ஆரோக்கியமான உணவை கொடுக்க முடிகிறதா என்றால் இல்லை என்பது பல பெற்றோர்களின் குரல். தன் குழந்தைக்கு ஆரோக்கியமான மற்றும் கண் கவரும் உணவுகளை தயாரித்த கிருபா தர்மராஜ், அதையே தன் சுய தொழிலாக மாற்றி இன்று அதில் வெற்றியும், தொழில் விரிவாக்கமும் கண்டுள்ளார்.
“என் குழந்தைதான் என் நிறுவனத்தின் தொடக்கம்; அவருக்கு பிடித்த ஆரோக்கியமான உணவை சமைக்கத் துவங்கியது தான் இன்று நிறுவனமாக வளர்ந்துள்ளது...”
என பேச துவங்குகிறார் ’எம்சி லன்ச்பாக்ஸ்’ 'MC LunchBox' நிறுவனத்தின் நிறுவனர் கிருபா தர்மராஜ். எம்சி லன்ச்பாக்ஸ் குழந்தைகளை கவரும் ஆரோக்கியமான உணவை பேக் செய்து பள்ளிக் குழந்தைக்கு வழங்கும் நிறுவனம். பள்ளியில் துவங்கி இன்று கார்ப்பிரெட்களில் உணவு சேவை வழங்கல் வரை வளர்ச்சி கண்டுள்ளது இந்நிறுவனம்.
நிறுவனர் கிருபா ஒரு பொறியியல் பட்டதாரி; பெரும்பாலானோர் போல் கல்லூரிக்கு பின் 2 வருடம் பெரும் நிறுவனத்தில் பணி புரிந்தார். நல்ல வேலை நல்ல சம்பளம் என்றாலும் பெரியதாய் வேறு எதும் செய்யவே கிருபா விரும்பினார்.
திருமணத்திற்கு பிறகு பங்கு சந்தையில் தன் போக்கை மாற்றிய கிருபா, குழந்தை பிறந்த பிறகு தனக்கான தொழில் யோசனையை கைப்பற்றினார்.
“என் மகனுக்கு ஆரோக்கிய உணவை கொடுக்க சில ஆராய்ச்சி செய்தபோது தான் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை உண்ண வைக்க ஜங் ஃபுட்- ஐ நாடுகிறார்கள் என தெரிந்தது. அதை மாற்றும் நோக்கம் தான் இந்நிறுவன ஐடியா,” என்றார்.
இதை குறித்து சில மாதமங்கள் ஆராய்ச்சி செய்து 2013ல் இந்நிறுவனத்தை துவங்கினார். நேர்த்தியான சமையல் வல்லுனர், ஊட்டச்சத்து நிபுணர்களை ஒன்று திரட்டி குழந்தைகள் விரும்பும் ஆரோக்கிய உணவை தயாரிக்கத் தொடங்கியது எம்சி லன்ச்பாக்ஸ். இந்த கருத்தை மக்கள் இடத்தில் கொண்டு செல்ல முதலில் 3000 லன்ச்பாக்சுகளை இலவசமாக தந்தனர்.
“பெற்றோர்கள் குழந்தைகளுக்கான மதிய உணவை வெளியில் இருந்து பெறுவார்களா என்ற சந்தேகம் இருந்ததால் இலவசமாக கொடுத்தோம். நல்ல வரவேற்பு கிடைத்ததால் முழுமையாக தொழிலில் இறங்கினோம்.”
கிருபா அவரது சேமிப்பு மற்றும் கணவரின் சேமிப்பை கொண்டு இந்நிறுவனத்தை துவங்கினார். முதலில் 25 லன்ச்பாக்ஸில் தொடங்கி இன்று ஆயிரக்கணக்காக பெருகிவிட்டது.
பள்ளியில் இருந்து நிறுவனங்களுக்கும் தங்களது சேவையை அளிக்க விரும்பி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பிரான்சைஸ் முறையில் கொடுக்க துவங்கியுள்ளது இந்நிறுவனம். ராமானுஜம் ஐ டி பார்க்கில் தங்களது முதல் பிரான்சைஸ் துவங்கி நல்ல வரவேற்பை கண்டுள்ளனர்; இதனையொட்டி CADD சென்டர் நிறுவனத்துடன் தொழில் கூட்டணி வைத்துள்ளனர்.
“கேட் சென்டர் எங்களை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல உதவும் ஆனால் அதற்கு முன்பு சென்னையில் எங்கள் பிராண்டை வளர்க்க உள்ளோம். இன்னும் சில கிளைகள் சென்னையில் தொடங்கப்படும்,” என்கிறார்.
குழந்தைகளை மட்டும் இலக்காகக் கொண்டு துவங்கிய இவர்களது கருத்தை பெரியவர்கள் மற்றும் முதியோர்களும் விரும்பியதால் தொழில் தொடங்கி இரண்டே மாதத்தில் அனைத்து வயதினருக்கும் உணவுகளை தயாரித்தனர். அதற்கேற்ப உணவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
நல்ல வரவேற்பு இருந்தாலும் முதல் இரண்டு வருடம் பரந்த வாடிக்கையாளர்களை அடைய சற்று சவாலாகத்தான் இருந்தது என்கிறார் கிருபா. அதிலும் உணவுத் துறையில் நிலைத்து இருப்பது சற்று கடினம் என்கிறார். 3 வருட உழைப்புக்கு பிறகே ப்ரேக் இவன் புள்ளியை கடந்துள்ளது இந்நிறுவனம்.
அடுத்தப்படியாக தங்கள் நிறுவனத்தை எடுத்துச் செல்ல குழந்தைகளை நேரடியாக அடைய ’ஸ்நாக் லேப்ஸ்’ 'SnackLabs' என்ற புதிய பிரிவை தொடங்கி, பள்ளி உணவகத்தில் நுழைய முயற்சிகள் செய்து வருகின்றது இந்நிறுவனம்.
“பள்ளி காண்டீனில் மைதா மற்றும் வெள்ளை சக்கரைக்கு பதிலாக கோதுமை திணைகளை சேர்த்து ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இதுவே நிறுவனத்தின் முக்கிய நோக்கம்,” என முடிக்கிறார் கிருபா.
இந்த புதிய முயற்சியில் தற்போது சென்னையைச் சேர்ந்த 5 பள்ளிகள் இணைந்துள்ளது. மேலும் இதை ஒரு பிராண்டாக கொண்டு செல்ல வேகமாக பணியில் இறங்கியுள்ளார் இந்த சுறுசுறுப்பான பெண் தொழில் முனைவர்.