சங்கரன்கோவில் டூ ஜெர்மனி: 50 மில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் NFT முதலீட்டில் வழிகாட்டும் நிறுவனம்!
சர்வதேச அளவில் பல என்.எப்.டிகள் தினமும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த என்.எப்.டி எப்படி வர்த்தகமாகிறது, எந்த என்.எப்.டியில் முறைகேடுகள் நடக்கிறது என்பதை கண்டறிந்து முதலீட்டாளர்களுக்கு ஏதுவாக தகவல்களை வழங்கும் தளமாக ’bitscrunch' திகழ்கிறது.
ஒரு காலத்தில் தங்கம், ரியல் எஸ்டேட், பிக்ஸட் டெபாசிட் ஆகியவை மட்டுமே முதலீட்டு திட்டங்களாக இருந்தன. ஆனால், தற்போது பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட், பிரைவேட் ஈக்விட்டி என முதலீட்டின் வடிவம் மாறிக்கொண்டே இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கிரிப்டோ கரன்ஸி மற்றும் என்.எப்.டி என முதலீடு செய்வதற்கு புதிய புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் என்.எப்.டி.கள் செயல்பட்டுவருகின்றன. Non fungible tokens (NFT) என்னும் புதிய வகை சொத்து உருவாகி நாளுக்கு நாள் பிரபலமாகி வருகிறது. இந்தியா மட்டுமல்லமல் சர்வதேச அளவில் பல பிரபலங்கள் இதில் புதிய என்.எப்.டிகளை வெளியிட்டிருக்கிறார்.
உதாரணத்துக்கு பிரத்யேகமான, வீடியோ ஆடியோ புகைப்படங்களை டிஜிட்டல் டோக்கன் ஆக மாற்றி சந்தையில் வெளியிடுவார்கள். இவை பங்குகள் போல வர்த்தமாகும். இந்தியாவில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் என்.எப்டி.யை வெளியிட்டிருக்கிறார்கள்.
இதுதவிர, சர்வதேச அளவில் பல என்.எப்.டிகள் தினமும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த என்.எப்.டி எப்படி வர்த்தகமாகிறது, எந்த என்.எப்.டியில் முறைகேடுகள் நடக்கிறது என்பதை கண்டறிந்து முதலீட்டாளர்களுக்கு ஏதுவாக தகவல்களை வழங்கும் தளமாக 'bitscrunch' 'பிட்ஸ்க்ரன்ச்' இயங்குகிறது.
இந்த முதலீட்டுப் பிரிவில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தை சேர்ந்த விஜய் பிரவீன் ’பிட்ஸ்கிரன்ச்’ என்னும் நிறுவனத்தை ஜெர்மனியில் இருந்து நடத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நிறுவனம் 3.6 மில்லியன் டாலர் நிதியை திரட்டி இருக்கிறது. இவரது நிறுவனத்தில் காயின்பேஸ் வென்ச்சர்ஸ், கிர்ப்டோ டாட் காம், பாலிகன் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட பல சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்.
ஜெர்மனியில் இருக்கும் விஜய் உடன் ஒரு ஜூம் காலில் உரையாடினேன். நிறுவனத்தின் ஆரம்பகாலம், தற்போதைய திட்டம், எதிர்காலம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசினோம். அந்த உரையாடலில் இருந்து...
ஆரம்ப காலம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தவர் விஜய் பிரவீன். இவரது அப்பா காவல் துறையில் எஸ்.ஐ., அம்மா அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர். 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் எடுக்கும் விஜய், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் இன்ஜினீயரிங் படித்தார்.
நன்றாக படிப்பவராக இருந்தாலும் லேப் தேர்வினை எழுத இவரை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதைவிட முக்கியம் எங்கள் கல்லூரியில் படிப்பதற்கு பலர் காத்திருக்கின்றனர் என உதாசினம் செய்திருக்கிறார்கள். அதனால் அப்போதே சர்வதேச அளவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்னும் முடிவை எடுத்தார் விஜய்.
ஆனால், இரண்டாம் ஆண்டு படிக்க பல கல்லூரிகளில் முயற்சி எடுத்து அதிகக் கட்டணம் நிராகரிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டதால் மீண்டும் முதல் ஆண்டில் இருந்து இன்ஜினீயரிங் படிக்க தொடங்கினார். அந்த நான்கு ஆண்டுகளும் செல்லும் இடமெல்லாம் அவதூறுகள் நிறைந்ததாகவே இருந்ததாக கூறினார் விஜய்.
நான்கு ஆண்டுகள் கல்லூரியை முடித்த பிறகு ஜெர்மனியில் உள்ள டெக்னிக்கல் யுனிவர்சிட்டியில் எம்.எஸ். படித்தேன். படிக்கும்போதே அங்கு சில நிறுவனங்களில் பயிற்சியாளராக வேலை செய்தேன். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் படிக்கும்போது டெக்னிக்கலாக பகுதி நேர வேலை செய்ய முடியாது. சேவைத்துறையில்தான் வேலை செய்ய முடியும். ஆனால் ஜெர்மனியில் நாம் படிப்பதற்கு ஏற்ற வேலையை செய்ய முடியும்.
“இந்தியாவில் சாதி, மதம் உள்ளிட்ட வேறுபாடுகள் இருக்கும். ஆனால் ஜெர்மனியில் கலர் வேறுபாடு இருக்கும். இருந்தும் நாம் திறமையானவர்கள் என்பதை நிரூபித்துவிட்டால் நம்மை ஏற்றுக்கொள்வார்கள்.”
சீமென்ஸ், போக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்களில் டேட்டா சயின்ஸ்ட் ஆக பணியாற்றினேன். அப்போது சீங்கப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் 69 கோடி ரூபாயில் ஒரு என்.எப்.டியை வாங்கினார். அதற்கு முன்பாகவும் என்.எப்.டி. குறித்து தெரியும் என்றாலும் அப்போது என்.எப்.டி. குறித்து மேலும் படிக்கத் தொடங்கினேன். அப்போது இந்தப் பிரிவில் தொழில் தொடங்கலாம் என முடிவெடுத்து ‘bitscrunch' நிறுவனத்தை தொடங்கினோம்.
என்ன செய்கிறோம்?
NFT என்பது ஒரு டிஜிட்டல் சொத்து. இதில் நிறைய முறைகேடுகள் நடக்கும். புரிதலுக்கு சொல்ல வேண்டும் என்றால்,
"நான் ஒரு என்.எப்.டி.யை வெளியிடுவேன், என்னுடைய நண்பர்கள் அடுத்த நாள் வாங்குவார்கள். வேறு ஒரு நண்பர் அதை அதற்குகடுத்து வாங்குவார்கள். இதுபோல செயற்கையாக விலையை உயர்த்தும் நடவடிக்கைகள் உள்ளன. வெளியில் முதலீட்டாளர்கள் இதனைப் பார்த்துவிட்டு, என்.எப்.டி. உயர்கிறதே என நினைத்து அதில் அதிகமாக முதலீடு செய்வார்.”
இதுபோன்ற பரிவர்த்தனைகள் இங்கு அதிகம் நடக்கும். இவை பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் நடப்பதால் யார் வேண்டுமானாலும் அதனைப் பார்க்க முடியும்.
ஆனால், ஒரு நாளில் பல மில்லியன் பரிவர்த்தனை நடப்பதால் குறிப்பிட்ட என்.எப்டியில் எப்படி வர்த்தகம் நடந்தது என்பதை தொழில்நுட்பம் மூலம் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் பணியைதான் நாங்கள் செய்கிறோம், என்று விளக்கினார் விஜய்.
”எங்கள் தொழில்நுப்டம் மூலம் எந்த என்.எப்டி செயற்கையாக விலையேற்றம் செய்யப்படாமல் வர்த்தகமாகிறது என்பதை தெரிவிப்போம். தவிர ஒரு சொத்தின் நியாயமான விலையையும் எங்களது தொழில்நுட்பம் மூலம் முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்கிறோம்.”
பிளாக்செயின் தொழில்நுட்பத்தில்தான் என்.எப்.டி செயல்படுகிறது. இரண்டு முக்கியமான பிளாக்செயின் நிறுவனங்கள் உள்ளன. ’பாலிகன்’ (polygon) மற்றும் ’ராரிபிள்’ (Rarible) பிளாக்செயின் தொழில்நுட்பங்கள் மூலமாகதான் பெரும்பாலான என்.எப்.டிகள் வர்த்தகமாகின்றன.
நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு தகவல்கள் வழங்குவது மட்டுமல்லாமல் இதுபோன்ற பிளாக்செயின் நிறுவனங்களுக்கும் அவர்களுடைய நெட்வோர்க்கில் உள்ள என்.எப்.டி குறித்த டேட்டா அனல்டிக்ஸ்களையும் கேட்பார்கள். அந்த சேவையையும் நாங்கள் வழங்குகிறோம்.
நிதி சார்ந்த தகவல்கள்
நிறுவனம் தொடங்கிய சில மாதங்களில் ரூ.5.5 கோடி நிதி முதலீட்டை பெற்றோம். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் 3.6 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீட்டை பெற்றிருக்கிறோம். சர்வதேச அளவில் உள்ள பல முக்கியமான முதலீட்டாளர்கள் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள்.
”எங்கள் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 5 கோடி டாலருக்கு மேல் சென்றிருக்கிறது. இப்போதைக்கு 26 நபர்கள் வேலை செய்கிறார்கள். ஜெர்மனியில் நால்வர் பணியாற்றுகிறோம். மீதமுள்ள நபர்கள் இந்தியாவில் பல நகரங்களில் இருந்து பணியாற்றுகின்ரனர்.”
ஊழியர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருவதால் வீட்டில் இருந்து வேலை என்பது கொஞ்சம் கடினம். அதனால் சென்னை அல்லது பெங்களூருவில் ஒரு அலுவலகம் திறக்க இருக்கிறோம்.
அடுத்தகட்டமாக மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் டெக்னாலஜி பார்ட்னராக இணைய இருக்கிறோம். மாஸ்டர்கார்டு நிறுவனம் கிரிப்டோ வளர்ந்து வரும் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.
Master Start path program என்னும் திட்டத்தில் சர்வதேச அளவில் 9 நிறுவனங்களை தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நிறுவனம் நாங்கள்தான்.
NFT முதலீட்டாளர்களுக்கு?
என்.எப்டி என்பது வளர்ந்து வரும் முதலீட்டுப் பிரிவு. இந்தத் துறையிலே நான் முழு நேரமும் பணியாற்றி வருகினேன் என்றாலும் தேர்ந்தெடுத்துதான் முதலீடு செய்கிறோம். அனைத்து என்.எப்.டி.களிலும் முதலீடு செய்வதில்லை.
அதனால் வளர்ந்து வரும் முதலீட்டுப் பிரிவை கவனிக்காமல் இருப்பதும் தவறு. அதேபோல, மொத்தமாக அனைத்து முதலீட்டையும் அங்கே செய்வதும் தவறு என விஜய் நம்மிடம் தெரிவித்தார்.
வளர்ந்துவரும் என்.எப்.டி. பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்தவர் தொழில் தொடங்கி இருப்பது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பதும் அவர்களின் வளர்ச்சிக்கான சான்றாக உள்ளது.