இந்தியாவிலேயே முதல் முறை: விமானப் படையில் ஏர் மார்ஷல் பதவி வகித்து தம்பதியினர் சாதனை!
விமானப் படையின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநராக ஏர் மார்ஷல் சாதனா சக்சேனா நாயர் பதவியேற்றுள்ளார். இப்பதவியை வகிக்கும் 2-வது பெண் என்ற சாதனை படைத்துள்ள இவர் பற்றி உத்வேகமூட்டும் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
இந்திய விமானப் படையில் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநராக ஏர் மார்ஷல் சாதனா சக்சேனா நாயர் பதவியேற்றுள்ளார். இப்பதவியை வகிக்கும் இரண்டாவது பெண் என்ற சாதனை படைத்துள்ளார். தற்போது இவரைப் பற்றி சோஷியல் மீடியாவில் உத்வேகமூட்டும் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
பொதுவாக மருத்துவர் கணவன் - மனைவி, ஆசிரியர் தம்பதிகள் மற்றும் ஐஏஎஸ், வழக்கறிஞர் உள்ளிட்ட தம்பதிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால், ராணுவத்தில் 3 ஸ்டார் அளவிற்கு பதவி உயர்வு பெற்ற நட்சத்திர ஜோடியை காண்பது அரிதானது. சாதனா சக்சேனா நாயர் விமானப் படையில் ஏர் மார்ஷலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். மருத்துவரான இவரைப் போலவே இவரது கணவர் கே.பி நாயரும் ஏர் மார்ஷல் பதவியை அடைந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் மார்ஷல் தம்பதி:
சாதானா சச்சேனா நாயரின் கணவர் கே.பி நாயரும் விமானப் படையில் ஏர் மார்ஷல் பதவியை அடைந்தவர். இந்தியாவிலேயே முதல் முறையாக தம்பதி இணைந்து இப்படியொரு சாதனையை படைத்துள்ளதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆயுதப்படை டைரக்டர் ஜெனரலாக பெறுப்பேற்ற அவரது கணவர் கே.பி. நாயர் ஒரு போர் விமானி. இந்திய விமானப் படையின் ஆய்வு மற்றும் விமானப் பாதுகாப்பு தலைமை இயக்குனராக 2015-இல் ஓய்வு பெற்றுள்ளார்.
“இந்திய விமானப் படையின் முதல் மற்றும் ஒரே ஏர் மார்ஷல் தம்பதி அவர்கள்தான்” என ராணுவ அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
இந்த தம்பதிக்கு முன்னதாக கனிட்கர் தம்பதியினர் 2020-ஆம் ஆண்டில் ஆயுதப் படையில் மூன்று நட்சத்திர அந்தஸ்துள்ள உயர் பதவியை அடைந்த முதல் ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர். ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மாதுரி கனிட்கர் (அவரும் ஒரு மருத்துவர்) தனது கணவர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கனிட்கருடன் சேர்ந்து சாதனை படைத்தார். இவரது கணவர் ராஜீவ் 2017-ல் மாஸ்டர் ஜெனரல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
யார் இந்த சாதனா சக்சேனா?
ஏர் மார்ஷல் சாதனா நாயரின் குடும்பத்தில் கடந்த 70 ஆண்டுகளாக 3 மூன்று தலைமுறையினர் இந்திய விமானப் படையில் பணியாற்றி வருகின்றனர். சாதனாவின் தந்தையும், அவரது சகோதரரும் இந்திய விமானப் படையில் மருத்துவர்களாக இருந்துள்ளனர்.
இந்திய விமானப் படையில் ஏர் மார்ஷல் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண் அதிகாரி சாதனா நாயாராவார். இவருக்கு முன்னதாக ஏர் மார்ஷலாக பதவி வகித்து வந்த பத்மா பந்தோபாத்யாய் ஓய்வு பெற்றதை அடுத்து, பெங்களூரு இந்திய விமானப் படையில் முதன்மை மருத்துவ அதிகாரியாக இருந்த சாதனாவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
புனேவில் உள்ள ஆயுதப் படை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற சாதனா நாயர், 1985-ம் ஆண்டு இந்திய விமானப் படையில் பணியமர்த்தப்பட்டார். குடும்ப மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். புதுடெல்லியில் உள்ள AIIMS-ல் மருத்துவத் தகவலியல் தொடர்பான இரண்டு ஆண்டு பயிற்சித் திட்டத்தைத் தவிர, சுவிட்சர்லாந்தில் CBRN (ரசாயனம், உயிரியல், கதிரியக்க, அணு) போர் மற்றும் ராணுவ மருத்துவ நெறிமுறைகள் ஆகியவற்றையும் கற்றுள்ளார்.
ராணுவத்தில் பாலின சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டு வர உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, பெண் அதிகாரிகள் இப்போது போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள், பீரங்கி படைகளில் தலைமை பொறுப்பில் அமர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.