தமிழக கிராமங்களில் பாழடைந்த கிணறுகளை புதுப்பிக்கும் இளம் கட்டிடக் கலை வல்லுனர்!
தமிழ்நாட்டின் குக்கூ வன பள்ளியில் தன்னார்வலராக இருக்கும் 27 வயது மது மஞ்சரி, பயனற்று கிடைக்கும் பொது கிணறுகளை புதுப்பிக்கும் குழுவை வழிநடத்தி வருகிறார்.
பெரும்பாலான கட்டிடக் கலை வல்லுனர்களைப் போல மது மஞ்சரி நகர்புற வசதி படைத்தவர்களுக்காக பங்களாக்களையும் பண்ணை வீடுகளையும் வடிவமைத்து வந்தார். கட்டிடக் கலை நிறுவனங்களில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து பிறகு தனது இதயம் வேறு எங்கோ இருப்பதை உணர்ந்தார்.
2020 பெருந்தொற்று காலத்தில் 27 வயதான மஞ்சரி கட்டிடக் கலைத் துறையில் இருந்து விலகி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்த துவங்கினார். திருவண்ணாமலையில் சிங்காரப்பட்டியில் உள்ள விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் இணைந்து உருவாக்கிய ’குக்கூ’ வனப் பள்ளியில் தன்னார்வலராக செயல்படத் துவங்கினார்.
“சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான முதல் படி தண்ணீரில் இருந்து துவங்குகிறது எனும் எண்ணத்தை குக்கூவில் உள்ள இளம் பிள்ளைகள் மனதில் பிரதிபலிக்க வைத்தேன்,” என்கிறார் மஞ்சரி.
மக்கள் தண்ணீருக்காக ஆறு கிமீ நடந்து சென்று கொண்டிருந்த அருகாமை கிராமங்களுக்கு இந்தக்குழு விஜயம் செய்தது. தமிழ்நாடு அரசு ஆவணங்களின் படி, ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்கள் தான் கிராமப்புற வீடுகளில் 100 சதவீத குழாய் தண்ணீர் வசதி பெற்றுள்ளது.
மஞ்சரியும், அவரது குழுவில் உள்ள 15 தன்னார்வலர்களும், தமிழகம் முழுவதும் கிராமங்களில் பயனற்று கிடந்த 15 பொது கிணறுகளை புணரமைத்துள்ளனர்.
கிணறுகள் புதிப்பிக்கப்படுவது, மழைநீர் உள்ளே செல்ல வைத்து, தண்ணீர் மட்டத்தை உயர்த்தி, கடுமையான கோடை காலத்திலும் கிராமங்களில் தண்ணீருக்கு வழி செய்தது.
கிணறுகள் புதுப்பிப்பு
மஞ்சரியின் தன்னார்வக் குழு பலவிதங்களில் வளர்ந்து வருகிறது. இந்த இளைஞர்கள் குழு கிராமங்களில் உள்ள பொது கிணறுகளை புதுப்பித்து வருகிறது. இவர்கள் சமூக ஊடகம் வாயிலாகவும் பணியை கண்டறிகின்றனர். குழுவின் நண்பர்கள் மேலும் ஆர்வலர்களைக் கொண்டு வந்து குழுவை வலுப்படுத்துகின்றனர்.
ஆர்வலர்கள் முதலில் பயனற்று கிடக்கும் கிணறுகளை கண்டறிகின்றனர். பின்னர், அவர்கள் கிணற்றை தூர் வாரி புதுப்பிக்கின்றனர்.
அடுத்த கட்டமாக கிணற்றை சுற்றி உள்ள புதர்களை அகற்றி சுற்றுச்சூவர் அமைத்து தண்ணீர் எடுக்க வசதி செய்கின்றனர். இறுதியாக எளிதாக தண்ணீர் எடுக்க ஒரு மோட்டார் மற்றும் தொட்டி அமைக்கின்றனர்.
“கிணற்றின் நிலையை பொறுத்து அதை புதுப்பிக்க ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை ஆகலாம். எங்கள் புதுப்பிப்பு முயற்சி அனைத்தும் தன்னார்வலர்கள் நலம் விரும்பிகளால் கூட்ட நிதி மூலம் மேற்கொள்ளப்படுகிறது,” என்கிறார் மஞ்சரி.
இந்த திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருச்சங்கோடு, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் கிணறுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
கதை சொல்லும் கிணறுகள்
இந்தக்குழு அண்மையில் கிருஷ்ணகிரி அருகே அந்தியூர் மலையில் உள்ள கிணற்றை புதுப்பித்தனர். அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் கிராமத்தின் கங்கை என அந்த கிணறு அழைக்கப்படுவதாக தெரிவித்தனர். இந்த கிணற்றில் இருந்து 25 அடி மண் மற்றும் சகதியை வெளியே எடுத்தோம் என்கிறார்.
திருவண்ணாமலையில் நாயகனூர் கிராமத்தில் சாதி மோதல் காரணமாக ஒரு கிணறு 40 ஆண்டுகளாக மூடப்பட்டிருப்பதை கண்டனர்.
”இந்த கிணற்றை புதுப்பிக்கும் எண்ணத்தோடு அணுகிய போது அங்கிருந்தவர்கள் மிகவும் தயங்கினர். ஒரு சிலர் இந்த மூடப்பட்ட கிணறு வேண்டாம் எனக்கூறினார்,” என்கிறார்.
ஒரு சமூகத்தை அதன் வேருக்கு கொண்டு செல்ல சமூக மற்றும் கலாச்சார தடைகளுக்கு தீர்வு காண வேண்டியிருக்கிறது என்கிறார் மஞ்சரி. இன்னொரு கிராமத்தில் வயதான மனிதர் தினமும் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும் கிணற்றை வந்து பார்த்தார். 25 அடியை தொட்டதுமே இப்போது தண்ணீர் வரும் என்று அவர் கூறினார்.
“நாங்கள் புதுப்பித்துக்கொண்டிருந்த கிணற்றை 40 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியவர் அவர் என்று கூறும் மஞ்சரி, நம் சமூகத்தில் உள்ள பெரியவர்களின் அறிவு மற்றும் சுற்றுச்சூழல் புரிதல் அருமையானது,” என்கிறார்.
மஞ்சரியின் குழு தொண்டு செய்துள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அவருக்கு இப்போது வீடு உள்ளது.
“கிராமவாசிகள் எங்களை அவர்களில் ஒருவராகக் கருதுகின்றனர். ஆடிபெருக்கு பண்டிகையை முன்னிட்டு அண்மையில் அந்தியூர் கிராம மக்கள் புதுப்பிக்கப்பட்ட கிணறுக்கு வழிபாடு நடத்தி கொண்டாடினர். அவர்களைப்பொருத்தவரை, இது இயற்கையோடு இணைந்து வாழ்தல் மற்றும் தங்களுக்கு உரியதை திரும்ப பெற்றதாகும்,“ என்கிறார் மஞ்சரி.
ஆங்கிலத்தில்: சரண்யா சக்ரபாணி | தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan