‘ஹனி ட்ராப்’ உஷார்... தேசப் பாதுகாப்புக்கு ஒரு புதுயுக சவால்!
‘ஹனி ட்ராப்பிங்’ என்பது இணையவழியில் காதல் கொஞ்சம், காமம் தூக்கலாகப் பேசி வலையில் சிக்க வைத்து, மிகவும் ரகசியமான தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் நூதன மோசடி வேலை.
இது டிஜிட்டல் காலம். அதுவும் டிஜிட்டல் களத்தில் அன்றாடம் சாட்-ஜிபிடி வெர்ஷன்கள் புதுப்பிக்கப்படும் ஏஐ காலம். இதில் எத்தனை எத்தனை நன்மை இருக்கின்றதோ, அதேபோல், இன்னொரு இருண்ட பக்கமும் இருக்கின்றது. அதில் ஒன்றுதான் ‘ஹனி ட்ராப்பிங்’ (Honey Trapping).
சுருக்கமாகவும் எளிதாகவும் சொல்ல வேண்டும் என்றால் ‘கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும் டிஜிட்டல் உலகம்’. ஹனி ட்ராப் என்பதை நேரடியாக மொழி பெயர்த்தால் வரும் ‘தேன் பொறி’ என்பதும் பொருத்தமானதாகவே இருக்கும்.
ஹனி ட்ராப்பிங் என்பது இணையவழியில் காதல் கொஞ்சம், காமம் தூக்கலாகப் பேசி பாதுகாப்புத் துறையில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களை வலையில் சிக்க வைத்து, அதன் மூலம் க்ளாசிஃபைட் டேட்டாஸ் எனப்படும் மிகவும் ரகசியமான வரையறுக்கப்பட்ட சில தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் நூதன மோசடி வேலை.
வெளிநாட்டு நுண்ணறிவுத் துறைகள் இதனை கட்டவிழ்த்துவிடுகின்றன. இது இப்போது பாதுகாப்புத் துறையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்திய பாதுகாப்புத் துறையில் ‘ஹனி ட்ராப்பிங்’ ஏற்படுத்தும் அச்சுறுத்தலையும், அதனை எப்படிக் களைவது என்பதையும் காண்போம்.
இணையவழி வசியம்:
ஹனி ட்ராப்பிங் என்பது முந்தைய காலங்களிலும் இருந்திருக்கிறது. ஆனால், அப்போதெல்லாம் நேரடியாக பெண்களைப் பயன்படுத்தி அதிகாரிகளையோ, பெரும் புள்ளிகளையோ மயக்கி பாலியல் உறவில் ஆழ்த்தி தகவல்களைப் பெறும் வகையில் நிகழ்ந்து கொண்டிருந்தது.
எல்லாவற்றையும் புரட்சி செய்த டிஜிட்டல் யுகம் இதிலும் புரட்சி செய்துள்ளதன் வடிவமே ‘புது யுக தேவதை பிரியா’ (New Gen Angel Priya). இதன் மூலம் ஊடுருவல்காரர்கள் போலி அடையாளங்களை உருவாக்கி இணையவழியில் தங்கள் இலக்கானவர்களை வசியம் செய்து நெருக்கமான உரையாடல்களை மேற்கொள்ளத் தூண்டுகின்றனர். இப்படியே பழகி பல தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக் கொண்டு பின்னர் அதனைப் பயன்படுத்தி மிரட்டி அந்த நபரை முக்கியத் தகவல்களைப் பெற நெருக்கடி கொடுக்கின்றனர்.
அண்மையில் பாகிஸ்தான் உளவாளிகள், இந்திய ராணுவ அதிகாரிகளை இத்தகைய வலையில் விழவைக்க டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தியது அம்பலமானது.
இதனை எதிர்கொள்ள இந்திய ராணுவமானது ஏஐ மூலம் இயங்கும் சாட்பாட்களை உருவாக்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தி ராணுவ வீரர்களுக்கு ஹனி ட்ராப் சூழல்களை எதிர்கொள்ள பயிற்சியும் அளிக்கிறது. வீரர்கள் தங்களை இத்தகைய வலைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள அது பயிற்றுவிக்கிறது.
தேசிய பாதுகாப்பின் மீது தாக்கம்
ஹனி ட்ராப்பிங்கின் தாக்கம் தனிநபரை அவமானத்துக்குள் தள்ளுவதைத் தாண்டியும் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்துகிறது. மிக முக்கியமான ரகசியமான தகவல்களை அணுகும் அனுமதி கொண்டவர்கள் இந்த வலையில் சிக்கும்போது தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது.
இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் விஞ்ஞானி ஒருவர் பாகிஸ்தான் உளவாளியால் இவ்வாறாக ஹனி ட்ராப் செய்யப்பட்டார். தன்னை மாணவி என அடையாளம் காட்டிக் கொண்டு நெருக்கத்தை ஏற்படுத்திய அந்த உளவாளி இந்திய ஏவுகணைத் திட்டங்கள் பற்றிய முக்கிய ரகசியத் தகவல்களைப் பெற்றார். இது ஒன்று போதும் ஹனி ட்ராப்பிங் எத்தகைய பயங்கரமான அச்சுறுத்தலை தேசப் பாதுகாப்பின் மீது ஏற்படுத்தும் என்பதை எடுத்துரைக்க.
இந்திய கலாச்சாரமும், சவால்களும்!
இந்தியாவைப் பொறுத்தவரை உறவுகளும் அதனைச் சுற்றியுள்ள நம்பிக்கையும் ஆழமான மதிப்பைக் கொண்டுள்ளன. அதனால் நம்பிக்கையை மீறுதல் என்பது உறவை பாதிப்பதாக பார்க்கப்படுகிறது. கலாச்சார கட்டுப்பாடுகளும், ஹனி ட்ராப்பிங்கில் சிக்கியவர்கள் மீது விழும் பழிகளும், விமர்சனங்களும் அதனைப் பற்றி அவர்கள் வெளியில் சொல்வதை, விடுபடுவதற்கு உதவிகளை நாடுவதை கடினமானதாக மாற்றிவிடுகிறது.
ஹனி ட்ராப்பிங்கை தவிர்க்கும் உத்திகள் என்னென்ன?
விழிப்புணர்வும் பயிற்சியும்: சைபர் பாதுகாப்பு தொடர்பாக அடிக்கடி பயிற்சி வகுப்புகளை நடத்துவது ராணுவ வீரர்கள் ஹனி ட்ராப்பிங் சமிக்ஞைகளை சரியாக அடையாளம் காண உதவும்.
இந்திய ராணுவம் ஏஐ சாட்பாட்களைக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது ஒரு நல்ல முயற்சி.
சமூக வலைதளக் கட்டுப்பாடு: ராணுவ வீரர்கள், அதிகாரிகள் மத்தியில் சமூக வலைதள கணக்குகளைப் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதும் கண்காணிப்பதும் மிகவும் அவசியம். ராணுவ வீரர்கள் சமூக வலைதளங்களில் ராணுவ சீருடையுடன் கூடிய தங்களின் புகைப்படங்களை வெளியிட தடை உள்ளது. இது ஹனி ட்ராப்பிங் டார்கெட் யார் என்பதை அடையாளம் காணும் அளவிலேயே தடுத்துவிடும்.
சுய விழிப்புணர்வு: தனிநபர்கள் ஆன்லைனில் அடையாளம் தெரியாதவர்களுடன் பேசிப் பழகுவதில் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக தேனொழகப் பேசிப் புகழ்ந்து தள்ளுபவர்களை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். இணையவழியாக பேசிப் பழகுபவர்களின் உண்மையான அடையாளத்தை நிச்சயமாகக் கண்டு கொள்ள வேண்டும். அவர்களிடம் எந்தச் சூழலிலும் முக்கியத் தகவல்களைப் பகிரவே கூடாது.
உறுதுணை கட்டமைப்புகள்: ஹனி ட்ராப்பிங்கில் விழுந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க வலுவான கட்டமைப்பு வேண்டும். அத்தகைய அமைப்பே பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி, தாங்கள் எத்தகைய கண்ணோட்டத்துடன் அணுகப்படுவோம் என்ற தயக்கமின்றி உதவியை நாட முடியும். உளவியல் ஆலோசனைகள் தொடங்கி சட்டப்பூர்வ உதவிகள் வரை இந்த அமைப்பு நல்குவதாக அமைய வேண்டும்.
மொத்தத்தில் இந்த ஹனி ட்ராப்பிங் என்பது நவீன உளவுப் பொறி. மனித உணர்வுகளை துஷ்பிரேயோகம் செய்து, அதன் மூலம் ஆதாயம் தேடும் பொறி.
டிஜிட்டல் வரங்கள் பெறுகப் பெறுக அதை எப்படி கோணலான வேலைகளுக்குப் பயன்படுத்தலாம் என்ற சூழ்ச்சிகளும் ஒருபக்கம் பெறுகிக் கொண்டுதான் இருக்கும்.
விழிப்புடன் இருப்பதும். விஷயங்களை அறிந்தவராக இருப்பதும், கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலுமே பாதுகாப்புத் துறையில் இத்தகைய ஹனி ட்ராப்பிங் அசம்பாவிதங்களைத் தவிர்க்க உதவும்.
உளவாளிகளின் காலத்தில் மின்னுவதெல்லாம் பொன்னல்ல. அவை சில நேரங்களில் உங்களுக்கு விரிக்கப்பட்ட வலையாகக் கூட இருக்கும். உஷார்!
மூலம்: Nucleus_AI
'2024-ம் நிதி ஆண்டில் ஆன்லைன் பேங்கிங் மற்றும் கார்டு மோசடிகள் நான்கு மடங்கு அதிகரிப்பு' - ஆர்பிஐ அறிக்கை
Edited by Induja Raghunathan