'2024-ம் நிதி ஆண்டில் ஆன்லைன் பேங்கிங் மற்றும் கார்டு மோசடிகள் நான்கு மடங்கு அதிகரிப்பு' - ஆர்பிஐ அறிக்கை
நாளுக்கு நாள் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளின் பயன்பாடுகளும் இண்டெர்நெட் பேங்கிங் நடவடிக்கைகளும் அதிகரித்து வரும் நிலையில்m அவற்றில் மோசடிகளும் அதிகம் நடைபெறுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிக்கை எச்சரிக்கின்றது.
நாளுக்கு நாள் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளின் பயன்பாடுகளும் இண்டெர்நெட் பேங்கிங் நடவடிக்கைகளும் அதிகரித்து வரும் நிலையில், அவற்றில் மோசடிகளும் அதிகம் நடைபெறுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிக்கை எச்சரிக்கின்றது.
ரிசர்வ் வங்கியால் சேகரிக்கப்பட்ட மேற்பார்வை வருவாய் அறிக்கையின் படி, 2023-24 நிதியாண்டில் சுமார் 29,082 கிரெடிட்/டெபிட் கார்டு மற்றும் இண்டெர்னெட் பேங்கிங் நடவடிக்கைகளில் மோசடிகள் நடந்துள்ளன. மத்திய அரசு நாட்டை ‘டிஜிட்டல் இந்தியா’ ஆக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் அதன் இருண்ட பகுதியாக கடந்த நிதியாண்டை விட 2023-24 நிதியாண்டில் இத்தகைய மோசடிகள் 4 மடங்கு அதிகரித்துள்ளதாக அறிக்கை எச்சரிக்கின்றது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்ட தொகை 5 மடங்கு அதிகரித்து ரூ.1,457 கோடியாக உயர்ந்துள்ளது. இது மொத்த மோசடியில் தோராயமாக 10% ஆகும், இது நிதியாண்டு 2024ல் ரூ.13,930 கோடியை எட்டியது.
இந்தத் திட்டங்களின் மீதான மொத்த மோசடியின் விகிதமும், 2023-ம் நிதியாண்டில் 1.1% ஆக இருந்து 2024-இல் 10.4% ஆக கணிசமாக வளர்ந்துள்ளது. இருப்பினும், இத்தகைய மோசடிகள் குறித்து தெளிவுபடுத்திய ஆர்பிஐ ஓர் ஆண்டில் புகாரளிக்கப்பட்ட மோசடிகள் அறிக்கை வெளியான இந்த நிதி ஆண்டிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்திருக்கலாம் என்று அதன் அறிக்கையில் கூறியுள்ளது .
உண்மையில் மோசடிகளை பகுப்பாய்வு செய்து பார்த்தால் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் புகாரளிக்கப்பட்ட மோசடிகள் நடந்ததற்கும் அந்த மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கும் இடையே போதிய கால இடைவெளி இருந்ததைப் பார்க்க முடிகிறது என்கிறது ஆர்பிஐ அறிக்கை.
அதாவது, 2022-23 ஆம் ஆண்டில், அறிக்கையிடப்பட்ட மோசடிகளின் மொத்த மதிப்பில் 94% உண்மையில் முந்தைய ஆண்டுகளில் நிகழ்ந்தது. இதேபோல், 2023-24 ஆம் ஆண்டில், அறிக்கையிடப்பட்ட மோசடிகளின் மொத்த மதிப்பில் 89.2% முன்னதாகவே நடந்துள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் அதிகரிப்பு மோசடிகளின் அதிகரிப்புக்கு ஓரளவு காரணமாக இருக்கலாம். 2023-24 ஆம் ஆண்டில், மொத்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அளவு 44.3% மற்றும் மதிப்பில் 16.4% அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை கூறியுள்ளது.
வணிக ஆலோசனை நிறுவனமான ப்ராக்ஸிஸ் குளோபல் அலையன்ஸின் 2023 அறிக்கையானது, மொத்தமாகப் பதிவுசெய்யப்பட்ட டிஜிட்டல் பேமெண்ட் மோசடிகளில் பாதிக்கும் மேற்பட்டவை UPI தொடர்பானவை என்று கூறுகிறது.