லாக்டவுன் தாக்கம்: ‘ஓட்டல் துறையில் பெரும் நஷ்டம்; 20% மட்டுமே விற்பனை’ - நிர்வாகிகள் கருத்து!
நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும் விதிமுறைகள் காரணமாக ஓட்டல் தொழிலில் இருப்பவர்களும் திசை தெரியாமல் இருக்கிறார்கள் என்பதே நிஜம். வெளியில் இருந்து பார்ப்பதற்கு கடை இயங்குவதுபோல தெரிந்தாலும் நஷ்டம் அல்லது பிரேக் ஈவனில்தான் கடை நடத்துவதாக பலர் தெரிவிக்கின்றனர்.
சலூன் கடை, ஹார்ட்வேர் கடை, செல்போன் கடை உள்ளிட்ட இதர வணிகம் புரிபவர்களுக்கு பேசாமல் ஓட்டல் வைத்திருக்கலாம் என நினைக்கத் தோன்றும். இந்த லாக்டவுன் காலத்தில் கடையை திறந்து வைத்திருப்பதன் மூலம் குறைந்தபட்ச வருமானமாவது இத்தொழில் மூலம் கிடைக்கும் என பலர் இந்த லாக்டவுன் காலத்தில் கருதக்கூடும். ஆனால் ஓட்டல் வைத்திருப்பவர்களின் நிலைமையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதுதான் நிதர்சனம்.
நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும் விதிமுறைகள் காரணமாக ஓட்டல் தொழிலில் இருப்பவர்களும் திசை தெரியாமல் இருக்கிறார்கள் என்பதே நிஜம். வெளியில் இருந்து பார்ப்பதற்கு கடை இயங்குவதுபோல தெரிந்தாலும் நஷ்டம் அல்லது பிரேக் ஈவனில்தான் கடை நடத்துவதாக பலர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக எதார்த்தை தெரிந்துகொள்ள அடையார் ஆனந்தபவன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாச ராஜாவிடம் உரையாடினோம்.
”எங்களிடம் 140 கடைகள் உள்ளன. தற்போது பார்சல் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்பதால் பெரும்பாலான கடைகளை மூடிவிட்டோம். சுமார் 25 கடைகள் மட்டுமே திறந்திருக்கிறோம். போக்குவரத்து இல்லை என்பதால் நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளை மூடிவிட்டோம். லாக்டவுனுக்கு முன்பாக கால இடைவெளி கிடைத்ததால் பணியாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்,” என்றார்.
தற்போது செயல்படும் கடைகளும் கூட பெரிய லாபத்தில் இயங்கவில்லை. இருக்கும் பணியாளர்களை தக்க வைக்கவேண்டும் என்பதற்கும், நகரின் மையத்தில் இருப்பதால் கணிசமான வியாபாரம் நடக்கும் என்பதால் கடையை தொடர்ந்து நடத்துகிறோம். பார்சல் மட்டுமே என்பதால் எவ்வளவு ஆர்டர் வரும் என்பதை எங்களால் துல்லியமாக கணிக்க முடியவில்லை. அதனால் உணவு வீணாவதும் அவ்வப்போது நடக்கிறது.
”கடந்த ஆண்டு (2020) லாக்டவுனுக்கு பிறகு விற்பனை கொஞ்சம் சூடு பிடித்தது. ஆனால் லாக்டவுனுக்கு முன்பாக நடந்த வர்த்தகத்தில் அதிகபட்சம் 70 சதவீதம் வரை மட்டுமே எங்களால் தொட முடிந்தது. பழைய நிலைமைக்கு செல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அடுத்த லாக்டவுன் வந்துவிட்டது. தற்போது ஒவ்வொரு கடைகளில் நடக்கும் சராசரி விற்பனையில் அதிகபட்சம் 20 சதவீதம் மட்டுமே நடக்கிறது.”
சமூகத்தில் மீண்டும் இயல்புநிலை திரும்பும்போதுதான் பழைய விற்பனையை நாங்கள் தொடமுடியும். திருமணம், சுபநிகழ்ச்சிகள், உள்ளூர் விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள் எங்களின் வருமானத்தில் முக்கியப் பங்கு வகித்தன. ஆனால் தற்போது நிகழ்ச்சிகள் மிக எளிமையாக நடப்பதால் மக்கள் இடம்பெயர்வது மிகவும் குறைந்திருப்பதால் எங்களின் விற்பனை குறைந்திருக்கிறது.
லாக்டவுன் முடிந்த பிறகு எங்களின் விற்பனை உயரும். இருந்தாலும் பழைய விற்பனையை நடப்பு நிதி ஆண்டில் தொட முடியாது. காரணம் உணவு விற்பனை என்பது இயல்பாக பழைய நிலைமைக்கு வந்துவிடும். ஆனால் எங்களின் விற்பனையில் கணிசமான பங்கு இனிப்பு மற்றும் மற்றும் காரத்துக்கு இருக்கிறது. தற்போது மக்கள் இனிப்புகளை லக்சுரி பொருளாக கருதத் தொடங்கிவிட்டார்கள். பொருளாதாரம் மெல்ல திரும்பும்போதுதான் இனிப்புகளின் விற்பனை பழைய நிலைமைக்கு திரும்பும் என ஸ்ரீனிவாச ராஜா தெரிவித்தார்.
அசைவ ஓட்டல்களின் நிலை என்ன?
நான் வெஜ் பிரிவில் செயல்படும் ஜூனியர் குப்பண்ணா ஓட்டலின் தலைவர் மூர்த்தியிடம் உரையாடினோம். தற்போதைய சூழலில் அனைத்து கடைகளையும் திறக்க முடியாது. எங்களிடம் 45 கடைகள் உள்ளன. இதில் 15 கடைகள் மட்டுமே செயல்படுகின்றன. தவிர நாங்கள் நான் வெஜ் பிரிவில் செயல்படுவதால் அதிக உற்பத்தியை செய்ய முடியாது. தவிர வெஜ் மீல்ஸ், குயிக் மீல்ஸ் என தேவைக்கு ஏற்ற உணவுகளை மாற்றி சமைக்கிறோம்.
கடந்த ஆண்டு லாக்டவுனில் விற்பனை பாதிக்கப்பட்டது. ஆனால் பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கும் திரும்பும்போது எங்களின் விற்பனையும் சீராக உயர்ந்தது. அதேபோல இந்த முறையும் பொருளாதாரம் மீளும்போது விற்பனை உயரும் என நம்புகிறோம். ஆனால் ஓட்டல் துறையின் பிஸினஸ் மாடல் மாறும் என்றே கருதுகிறோம்.
சில ஆண்டுகளுக்கு பெரிய கடைகளை வாடகைக்கு எடுத்து ஓட்டல்கள் செயல்பட்டன. ஆனால் இனி 5,000 சதுர அடி உள்ள ஓட்டல்கள் அடுத்த சில ஆண்டுகளுக்கு அதிகம் இருக்காது என்றே கருதுகிறோம்.
”நிச்சயமற்ற சூழலில் பெரிய தொகையை முதலீடு செய்து லாபம் ஈட்டுவது கடினமாக மாறிவிடும். கடந்த காலத்தில் வாடகையில் எங்களுக்கு சில சலுகை கிடைத்தது. சில உரிமையாளர்கள் வாடகை வேண்டாம் எனக் கூறினார்கள். சில இடத்தில் உரிமையாளர்கள் 50 சதவீதம் வரை தள்ளுபடி கொடுத்தார்கள். சிலர் கால தாமதமாக கூட கொடுங்கள், ஆனால் முழுவாடகை கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறார்கள்.”
இந்த முறை எப்படி இருக்கும் என்பது வரும் காலத்தில்தான் தெரியும். இருந்தாலும் அடுத்த சில ஆண்டுகளில் ஓட்டல் துறையில் மாற்றங்கள் வரும் வாய்ப்பு இருக்கிறது. கிளவுட் கிச்சன் அதிகம் உருவாகக்கூடும். கொரோனா அச்சம் முழுமையாக விலகினால் மட்டுமே ஓட்டல் துறைக்கு மட்டுமல்லாமல் அனைத்து துறைகளுக்கு ஏற்றம் பிறக்கும் என மூர்த்தி கூறினார்.
சென்னையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அச்சிறுபாக்கத்தில் செயல்பட்டுவருகிறது மன்னா மெஸ். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயராஜ் உடன் பேசினேன்.
“நாங்கள் போக்குவரத்தை மட்டுமே நம்பி இருக்கிறோம் என்பதால் போக்குவரத்து இல்லை என்றால் எங்களுக்கு வியாபாரம் இல்லை. லாக்டவுனுக்கு முன்பாகவும் சில நாட்களுக்கு பார்சலுக்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தார்கள். அப்போதும் கூட பெரிய விற்பனை இல்லை. அதன் பிறகு முழுமையாக லாக்டவுன் அறிவித்த பிறகு ஓட்டலை மூடிவிட்டோம். தவிர நாங்கள் அசைவ ஓட்டல் என்பதால் மொத்தமாக தயாரிக்க வேண்டும். ஒருவேளை தேவை குறைவாக இருந்தால் பெரும் இழப்பு ஏற்படும் என்பதால் மூடிவிட்டோம்,” என்றார்.
ஆனால் லாக்டவுன் முடிந்த பிறகு எங்களுக்கு விற்பனை உயரும் என கருதுகிறோம். கடந்த ஆண்டு லாக்டவுன் முடிந்த பிறகு விற்பனை நன்றாகவே இருந்தது. போக்குவரத்து உயர்ந்ததை தொடர்ந்து நன்றாகவே இருந்தது. அதேபோல இப்போதும் இருக்கும் என கருதுகிறோம். ஆனால் அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
பணியாளர்களை பொருத்தவரை அருகில் உள்ள கிராமங்களில் இருந்தே பணியாளர்களை நாங்கள் எடுக்கிறோம். அதனால் பணியாளர்கள் குறித்த சிக்கல் எங்களுக்கு இல்லை. அருகில் சில ஓட்டல்கள் பகுதி அளவில் செயல்படுகிறார்கள். அவர்கள் வட இந்தியா அல்லது வெளியூர்களில் இருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார்கள். அதனால் அவர்களை தக்க வைப்பதற்காக ஓட்டல்களை நடத்துகிறார்கள்.
பெரிய அளவுக்கு வியாபாரம் இல்லை தவிர பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட காரணங்கள் சில ஓட்டல்களுக்கு கூடுதல் இழப்பு ஏற்படுகிறது பொதுமக்கள் அச்சமின்றி வெளியே வந்தால் மட்டுமே விற்பனை பழைய நிலைமைக்கு திரும்பும் என ஜெயராஜ் கூறினார்.
கொரோனா சில துறைகளுக்கு சாதகமான வாய்ப்பை உருவாக்கி இருப்பதுபோல தோன்றினாலும் நிஜம் அதுவல்ல. இரண்டாம் அலையுடன் கொரோனா தாக்கம் முடிவடைய வேண்டும் என்பதே தொழில்துறையினர் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பின் எதிர்பார்ப்பும்.
கடந்த முறை நம்மிடம் எந்த பாதுகாப்பும் இல்லை. தற்போது தடுப்பூசி இருக்கிறது. நாம் தடுப்பூசி செலுத்திக்கொள்வது நமக்கு மட்டுமல்லாமல், சமூகத்துக்கு நல்லது.
தொழில்துறைக்கும் நல்லது.