லாக்டவுன் பாடம்: போட்டோகிராபியோடு மீன் வியாபாரம் தொடங்கி வெற்றி கண்ட ராஜேஷ்!
கொரோனா ஊரடங்கால் வெற்றிகரமாக போய்க் கொண்டிருந்த போட்டோகிராபி தொழிலில் தடுமாற்றம். ஆனாலும் தளர்ந்து விடாமல் புத்திசாலித்தனமாக, கடல் மீன்கள் எனும் ஆன்லைனில் மீன் விற்று வருவாய் ஈட்டும் நாகை ராஜேஷ்.
கொரோனா பலரது வாழ்க்கையைப் புரட்டித்தான் போட்டிருக்கிறது. ஆனால் ‘உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது.. மாவு விற்கப் போனால் காற்று வீசுகிறது..’ எனப் புலம்பிக் கொண்டிருக்காமல் புத்திசாலித்தனமாக, மாவையும் உப்பையும் சேர்த்து போண்டாவாகச் சுட்டு இந்த கொரோனா ஊரடங்கிலும் புதிய தொழில் தொடங்கி வெற்றி பெற்றவர்கள் ஏராளம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் புகைப்படக் கலைஞர் ராஜேஷ்குமார்.
கொரோனா பிரச்சினையால் மார்ச் மாதம் முதலே ஊரடங்கால் திருமண நிகழ்ச்சிகள் களையிழந்தன. பிரமாண்டமாக திட்டமிடப்பட்ட பல திருமணங்கள் காலத்தின் கட்டாயத்தால் இருபது பேர் மட்டுமே கலந்து கொள்ளும் அளவிற்கு சுருங்கியது. இதனால் சமையல் கலைஞர்கள், போட்டோகிராபர்கள் எனப் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இப்படியான நெருக்கடியானச் சூழ்நிலையில் தான், இனி ஒரு தொழிலை மட்டும் நம்பிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என, தன் துறைக்கு சம்பந்தமே இல்லாத உணவுத் துறையில் கால் பதித்து இன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ராஜேஷ்குமார்.
புகைப்படம் எடுப்பதில் இருந்த ஆர்வத்தினால் ராஜேஷ், தனது பள்ளிப் பருவத்திலேயே சித்தப்பாவுடன் சுபநிகழ்ச்சிகளுக்கு உதவியாளராகச் சென்று தொழில் பழகி இருக்கிறார். காலப்போக்கில் கேமராவுக்குள் காலத்தை அடைக்கும் கலை கைவந்து விட, தனியாக புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கி விட்டார். தன் 12 வயதிலேயே திருமணங்கள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் எடுக்கத் தொடங்கி இருக்கிறார்.
படிப்பிலும் கெட்டிக்காரராகத் திகழ்ந்ததால், ராஜேஷின் ஆசைக்கு அவரது பெற்றோர் தடை விதிக்கவில்லை. இதனால் படிப்பைத் தொடர்ந்து கொண்டே, பகுதி நேர புகைப்படக் கலைஞராக வலம் வந்துள்ளார் ராஜேஷ்.
ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, புகைப்படக் கலையையே தனது மேற்படிப்பாக தேர்வு செய்ய முடியாத குடும்பச் சூழல். அதனால் தனது திறமைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் ஐடிஐல் சேர்ந்து விட்டார். பாலிடெக்னிக் முடிந்து திருச்சி பெல் நிறுவனத்திலும் ஒரு வருடம் பயிற்சி பெற்றுள்ளார். அதன் பின்னர் அவரது நண்பர்கள் அதே துறையில் தங்கள் வேலையைத் தேர்வு செய்து கொள்ள, மீண்டும் புகைப்படக்கலை பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார் ராஜேஷ் குமார்.
அதன் பலனாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் லைம் லைட் என்ற பெயரில் தனியாக ஒரு ஸ்டூடியோ ஆரம்பித்தார். ராஜேஷின் கடின உழைப்பால் ஒரு சில வருடங்களிலேயே அதன் மற்றொரு கிளையையும் தொடங்கினார். திருமணம், பிறந்தநாள் விழாக்கள் என நன்றாக சென்று கொண்டிருந்தது ராஜேஷின் தொழில்.
இந்தச் சூழ்நிலையில் தான் கொரோனா தாக்கம் அதிகரித்ததால் திடீரென மார்ச் இறுதியில் ஊரடங்கு விதிக்கப்பட, பல திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் தடைபட்டன. இதனால் ராஜேஷின் புகைப்படத் தொழிலும் கொஞ்சம் ஆட்டம் கண்டது.
“எங்கள் தொழிலில் தினமும் வேலை இருக்காது. வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்கள் தான் அதிக முகூர்த்தங்கள் நிறைந்தது. அந்த சமயத்தில் சுப நிகழ்ச்சிகளின் மூலம் கிடைக்கும் வருமானம் தான் மற்ற முகூர்த்தங்களற்ற மாதங்களில் குடும்பச் செலவுக்கு உதவும். ஆனால் இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் நிலைமையே தலைகீழானது. ஏற்கனவே ஒப்புக் கொண்ட சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் கேன்சல் ஆகி விட்டது. இதனால் பல லட்சங்கள் வருமான இழப்பு. பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பும் ஏற்பட்டது,” என்றார்.
ஆர்டர் கேன்சல் ஆனாலும், என்னிடம் வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் தந்தாக வேண்டும். பெரும் சிரமமாக இருந்த அந்தக் காலகட்டத்தில் தான், ஒரு தொழிலை மட்டுமே நம்பிக் கொண்டிருப்பது எதிர்காலத்திற்கு உதவாது என்ற பெரிய பாடம் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் மே மாத தொடக்கத்தில் மீன் விற்பனைத் தொழிலை ஆரம்பித்தேன்,” என்கிறார் ராஜேஷ்.
நாகர்கோவில் என்பதால் உணவில் தவிர்க்க முடியாதது மீன். அதோடு கன்னியாகுமரியில் இருந்து நல்ல மீன்கள் கிடைக்கும் என்பதால் மீன் விற்பனைத் தொழில் செய்வது என முடிவெடுத்தார் ராஜேஷ். அத்தொழிலில் முன் அனுபவம் ஏதும் இல்லை என்ற போதும், ஏற்கனவே போட்டோகிராபி மூலம் தனக்கு அறிமுகமான வாடிக்கையாளர்களையே மீன் விற்பனைக்கும் பயன்படுத்துவது என முடிவெடுத்தார்.
மீன் விற்பனைக்கென தனியே வாட்ஸப் குரூப்களை ஆரம்பித்தார். தனது நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சுமார் 1200 பேரை அந்த குரூப்புகளில் இணைத்தார்.
தினமும் கடலில் பிடித்த மீன்களை கடற்கரைக்கே சென்று ப்ரெஷ்ஷாக போட்டோ எடுத்து அதனை வாட்ஸப்பில் பகிர்ந்தார். அதில் வாடிக்கையாளர்கள் கேட்கும் மீன் வகைகளை மட்டும் வாங்கி வந்து, சுத்தப்படுத்தி துண்டங்களாக்கி அழகாக பேக் செய்து இலவசமாக டோர் டெலிவரி செய்தார்.
மே மாதத்தில் ஓரளவு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த போதும், மக்கள் வெளியில் அவ்வளவாக செல்ல முடியாமல் கொரோனா பயத்தால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். அப்போது வீட்டு வாசலுக்கே நல்ல தரமான மீன்கள் நியாயமான விலையில் கிடைத்ததால் ராஜேஷின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
“கடல் மீன்கள் என்ற பெயரில் மே மாத தொடக்கத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் முதலீட்டில் ஒரு கடையை ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் ஆன்லைனில் ஆர்டர்கள் பெற்று, அதனை மூடிய கடைக்குள் வைத்து பேக் செய்து விற்பனை செய்தோம். தற்போது ஊரடங்கு தளர்வுகளாலும், எங்கள் கடை பிரதான சாலை ஒன்றின் மேல் இருப்பதாலும் கடை வாசலிலேயே மீன்களை வைத்து விற்று வருகிறோம். இதன் மூலம் அந்தச் சாலையில் செல்லும் பலர் மீன் வாங்கிச் செல்கின்றனர். எங்களுக்கும் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து வருகின்றனர்,” என்கிறார் ராஜேஷ்.
ராஜேஷின் போட்டோ ஸ்டூடியோவில் ஏழு பேரும், மீன் கடையில் ஏழு பேரும் தற்போது வேலை பார்த்து வருகின்றனர். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் மீண்டும் போட்டோகிராபியிலும் கொஞ்சம் பிஸியாகி விட்டார் ராஜேஷ். ஆனபோதும் விடாமல் தனது மீன் விற்பனையையும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
தற்போதைக்கு நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டுமே மீன்களை டோர் டெலிவரி செய்து வருகிறார் ராஜேஷ். வரும் நாட்களில் அதனை இன்னமும் விரிவுப் படுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தனது கடல் மீன்கள் கடையின் கிளைகளை உண்டாக்க வேண்டும் என்பது தான் ராஜேஷின் எதிர்காலத் திட்டமாம்.
இப்படி போட்டோகிராபி தொழில் படுத்து விட்டதே என்ன செய்வது என முடங்கி விடாமல், சாமர்த்தியமாக செயல்பட்டு மாற்றி யோசித்தார் ராஜேஷ். அதனால் தான் தன்னை நம்பி இருந்த ஊழியர்களுக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்து, தானும் சம்பாதித்து, மற்றவர்களுக்கும் சம்பளம் தந்து இன்று புதிய தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறார் ராஜேஷ்.
“ஏற்கனவே போட்டோகிராபியில் கிடைத்த வருமானம் மூலம் கையில் இருக்கு சேமிப்பை வைத்து கொரோனா காலத்தை என்னால் ஓரளவு பிரச்சினை இல்லாமல் கடந்திருக்க முடியும். ஆனால் இதே நிலைமை நீடித்தால், இயல்பு நிலைக்கு மக்கள் திரும்ப இன்னும் பல காலம் ஆனால் என்ன செய்வது. அதுவரை கையில் இருக்கும் சேமிப்பைக் கரைத்துக் கொண்டிருக்க முடியாது. அது புத்திசாலித்தனமும் இல்லை.
அப்போது தான் இனி ஒரே தொழிலை நம்பிக் கொண்டிருப்பதில் பிரயோஜனம் இல்லை என்ற தெளிவு எனக்குக் கிடைத்தது. உடனடியாக புதிய வருமானத்துக்கு வழி தேடி இந்த மீன் வியாபாரத்தில் இறங்கிவிட்டேன்.
இந்தப் புதிய வியாபாரத்தில் நான் சாதித்து விட்டேன் என்று கூற முடியாது. இன்னும் அந்த நிலையை அடைய நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது. ஆனாலும் நஷ்டம் இல்லாமல் எனக்கு ஓரளவு லாபமும் கிடைக்கிறது, என்னை நம்பி இருக்கும் சிலருக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது.
கொரோனா பிரச்சினை வந்திருக்காவிட்டால் இப்படி இன்னொரு தொழில் பற்றி சிந்தித்திருப்பேனா என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது இரண்டு தொழில்களையும் திறம்பட நிர்வகித்து வருகிறேன். இதற்கு நிச்சயம் என் நண்பர்களும் ஒரு காரணம். அவர்களது ஒத்துழைப்பால் தான் என்னால் போட்டோகிராபியிலும், மீன் வியாபாரத்திலும் சிறப்பாக செயல்பட முடிகிறது. இனிமேல் ஒரே தொழிலைச் செய்தெல்லாம் காலம் தள்ளமுடியாது. இது கொரோனா நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கும் பாடம்,” என்கிறார் ராஜேஷ்.
கொரோனாவால் பலரும் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் சூழலில், புத்திசாலித்தனமாக சிந்தித்து, அதனை உடனடியாக செயல்படுத்தியதால் இன்று ஒரே நேரத்தில் இரண்டு தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வரும் தொழில் முனைவோர் ஆகி இருக்கிறார் ராஜேஷ். விரைவில் தனது லைம் லைட் ஸ்டூடியோவின் மூன்றாவது கிளையைத் தொடங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.