‘தாஜ்மஹால்' மாடலில் வீடு: மனைவி மீதான தீராக்காதலை வெளிப்படுத்திய காதல் கணவர்!
மத்தியப் பிரதேசத்தில் மின்னும் புதிய தாஜ்மஹால்!
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவிக்காக தாஜ்மஹால் போன்ற தோற்றத்தைக் கொண்ட வீடு கட்டி கொடுத்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூரில் வசிக்கும் ஆனந்த் பிரகாஷ் சோக்சி என்பவர்தான் மனைவிக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்தும்விதமாக தாஜ்மஹால் போன்ற வீட்டை கட்டிக்கொடுத்து அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். புர்ஹான்பூரில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் தொழிலதிபர் ஆனந்த் பிரகாஷ் சோக்சி.
தனது மனைவி மீது தீரா காதல் கொண்டிருக்கும் சோக்சிக்கு எப்போதும் ஒரு எண்ணம் மேலோங்கி இருந்துள்ளது. அது, வரலாற்றுப்படி ஷாஜகானின் மனைவி இறந்தது இந்த புர்ஹான்பூர் மாநகரில் தான். ஆனால் தாஜ்மஹால் ஏன் அவரது நகரத்தில் கட்டப்படவில்லை. மாறாக ஆக்ராவில் கட்டப்பட்டது. இதனால் தனது மனைவிக்காக அதே தோற்றத்தில் புர்ஹான்பூர் மாநகரில் ஒரு மாளிகையை கட்டிக்கொடுக்க விருப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கட்டுமானப் பணிகள் நடந்துவந்த நிலையில், தற்போது அந்த மாளிகை தயாராகியுள்ளது. கீழே 2 படுக்கையறைகள், மேல் மாடியில் 2 படுக்கையறைகள் என மொத்தம் 4 படுக்கை அறைகள், ஒரு தியான அறை, நூலகம் உள்ளிட்ட பல வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது இந்த தாஜ்மஹால் மாளிகை. இந்தூர், மேற்கு வங்கத்திலிருந்து கட்டிடக் கலை நிபுணர்களை வரவழைத்து அவர்களின் ஆலோசனைபடி இந்த மாளிகையை கட்டி முடித்திருக்கிறார் சோக்சி.
முன்னதாக இந்த வீட்டை கட்டுவதற்காக பொறியாளர் குழு, தாஜ்மஹாலை நிறைய ஆய்வு செய்து வடிவமைப்பை கொடுத்துள்ளது. நிஜ தாஜ்மஹாலில் உள்ள டூம் அல்லது குவிமாடம் இந்த மாளிகையிலும் இடம்பெற்றுள்ளது. 29 அடி உயரத்தில் குவிமாடம் வைக்கப்பட்டுள்ளது. வீட்டின் தரைதளம் ராஜஸ்தானின் 'மக்ரானா' கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
உண்மையான தாஜ்மஹாலைப் போலவே இந்த வீடும் இருளில் ஜொலிக்கும் வகையில் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனந்த் சோக்சே தன்னுடைய மனைவி மஞ்சுஷா சோக்சே மீதான காதலை வெளிப்படுத்த கட்டியுள்ள இந்த தாஜ்மஹால் வீடு புர்ஹான்பூரில் வரவேற்பை பெற்றுள்ளது.
தொகுப்பு: மலையரசு