நிலாவில் நிலம்; மனைவிக்கு சர்ப்ரைஸ் - இப்படியும் ஒரு கணவர்!
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரைச் சேர்ந்தவர் தர்மேந்திர அனிஜா. அவர் தன்னுடைய மனைவி சப்னா அனிஜாவுக்கு வாழ்வில் மறக்க முடியாத கிப்ட் ஒன்றை வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார்.
ஆம்! நிலவில் 3 ஏக்கர் நிலத்தை வாங்கி திருமண பரிசாகக் கொடுத்திருக்கிறார்.
தங்களுடைய 8வது திருமண ஆண்டையொட்டி தன் மனைவிக்கு வித்தியாசமாகவும், ஸ்பெஷலாகவும் இருக்கவேண்டும் என்று இந்த கிப்டை கொடுத்ததாகக் கூறுக்கிறார்.
”எங்களுக்கு டிசம்பர் 24ம் தேதி திருமண நாள். அதற்காக ஸ்பெஷலாக எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். எல்லோரும் கார், நகை என பூமியைச் சார்ந்த பொருட்களையே கிப்டாக கொடுத்துக் கொண்டிருந்தனர். நான் வித்தியாசமாக ஒன்றை செய்யவேண்டும் என்று எண்ணினேன். அதனால் தான் நிலாவின் அவளுக்காக நிலம் வாங்கினேன்,” என்கிறார்.
அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த நிறுவனமான லூனா சொசைட்டி இன்டர்நேஷனல் (Luna society international) மூலமாக நிலவில் நிலத்தை வாங்கியுள்ளார்.
நிலவில் இடம் வாங்கவும், அதன் முழு பிராஸஸ் முடியவும் 1 ஆண்டு தேவைப்பட்டது என்கிறார் தர்மேந்திர அனிஜா.
“ராஜஸ்தானில் நிலவில் இடம் வாங்கிய முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
உலகத்தைக் கடந்த ஒரு கிப்ட் தன் கணவனால் தனக்கு வழங்கப்பட்டிருப்பதை எண்ணி அவரது மனைவி அளவில்லா மகிழ்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
”இப்படியொரு கிஃப்ட, அதுவும் உலகத்தை கடந்து எனக்கு ஒரு பரிசை என் கணவர் கொடுப்பார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்படியொரு ஸ்பெஷலான கிப்ட் ஒன்றை அவர் எனக்குக் கொடுப்பார் என நான் நினைக்கவேயில்லை. உண்மையில் நாங்கள் நிலவில் இருப்பதைப்போல அன்று உணர்ந்தோம். அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் நிலவில் இடம் வாங்கியதற்கான சொத்து ஆவணத்தை ஃபிரேம் போட்டு அவர் எனக்கு கொடுத்தார்,” என்கிறார் மனைவி சப்னா அனிஜா.
முன்னதாக பீகாரில் உள்ள போத் கயாவில் வசிக்கும் நீரஜ் குமார் தனது பிறந்தநாளில் நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நீரஜ் குமார், ஷாருக்கான் மற்றும் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகியோரின் இன்ஸ்பிரேஷனால் வாங்கியதாகக் கூறியுள்ளார்.
1967ம் ஆண்டு சோவியத் யூனியன், அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் உள்ளிட்டவை ’விண்வெளி ஒப்பந்தம்’ ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். அதன்படி, நிலவில் நிலத்தை வாங்குவதோ விற்பதோ அந்த ஒப்பந்ததின் விதிகளுக்கு உட்பட்டது. அந்த ஒப்பந்ததின்படி, நிலவின் நிலத்தை விற்பது சட்டவிரோதமானது. இந்த சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியா உள்ளிட்ட 109 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
உடன்படிக்கையின் படி, “விண்வெளி என்பது இறையாண்மையைக் கோருவதன் மூலமோ, பயன்பாடு அல்லது தொழில் மூலமாகவோ அல்லது வேறு எந்த வழியிலோ தேசிய ஒதுக்கீட்டிற்கு உட்பட்டது அல்ல,” எந்தவொரு உடன்படிக்கை உறுப்பு நாடுகளும், எந்தவொரு வணிக நடவடிக்கைகளிலும் விண்வெளியைப் பயன்படுத்தக்கூடாது என்று தெளிவாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இருப்பினும், தனியார் ஒதுக்கீட்டைப் பொருத்தவரை ஒப்பந்தத்தின் தடை செல்லுபடியாகுமா இல்லையா என்பது பற்றிய விவாதம் உள்ளது.
தொகுப்பு: மலையரசு