45,000 பெண்கள் துணையுடன் தமிழக நதிகளுக்கு புத்துயிர் கொடுக்கும் நாயகன்!
தமிழகத்தில் நதிகளை புத்துயிரூட்டும் குப்பன் ஆரம்பித்த இந்த திட்டத்தில் பணியாற்றிய பெண்களின் எண்ணிக்கை ஒருகட்டத்தில் 45,000 ஆக உயர்ந்தது.
2005-ம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள டிஏவி பள்ளியில் வாழும் கலை அமைப்பின் சுவாச பயிற்சி வகுப்பு நடைபெற இருந்தது. இந்த நிகழ்வுக்கான மைக் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்யும் பணி, பள்ளியில் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றிய சந்திரசேகர் குப்பனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சேர்ந்து ஆறு நாள் சுவாசப் பயிற்சியில் கலந்துகொண்ட குப்பன், நிகழ்வின் முடிவில் தனக்கு நீண்டகாலமாக இருந்த வயிற்று புண்களில் இருந்து நிவாரணம் அடைந்ததாக உணர்ந்தார். அந்த நிகழ்வில் கலந்துகொண்டது தன்னை வேறு பெரிய விஷயத்துக்கு கொண்டு செல்லும் என்பதை குப்பன் உணரவில்லை. அதுவும் தமிழ்நாட்டின் நதிகளை போக்கை மாற்றும் விஷயத்தில் தன்னை ஈடுபடுத்தும் என்பதை குப்பன் அறிந்திருக்கவில்லை. அது நடந்தது!
2009-ல் வேலைய துறந்த குப்பன், வாழும் கலை அமைப்பில் இணைந்து முழுநேர பயிற்சியாளரானார். அதோடு மத்திய அரசின் `ஜன்தன்` திட்டத்தில் இணைந்து பணியாற்றி தொடங்கிய அதேநேரத்தில், இளைஞர்களுக்கு லீடர்ஷிப் குறித்து பயிற்சி அளிக்க மாநிலம் முழுவதும் பயணம் செய்தார்.
இந்தப் பயணம் தனது சொந்த மாவட்டமான திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பாயும் பாலாற்றின் கிளை நதியான நாகநதி 15 ஆண்டுகளாக வறண்டு போய் இருந்ததை அறிந்துகொள்ள உதவியது. அதுவும் போதிய மழை இருந்தபோதும் நாகநதியில் நீர் வரத்து இல்லாமல் வறண்டு போய் இருப்பதால், சொந்த ஊர் மக்கள் அருகில் உள்ள வேலை நிமித்தமாக இடம்பெயர்ந்தனர்.
இந்த நேரத்தில் இதனை அறிந்த குப்பன், வாழும் கலை அமைப்பின் மற்றொரு முயற்சியையும் தெரிந்து வைத்திருந்தார். அந்த அமைப்பு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் நதிகளுக்கு புத்துயிர் அளித்திருந்தது. அதே திட்டத்தை நாகநதியில் செயல்படுத்த முடிவு செய்தார். சாத்தியக்கூறு தொடர்பாக 2013-ல் ஒரு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதில், விஞ்ஞானிகளின் ஆய்வுகளும் இடம்பெற்றிருந்தன.
பிரச்சினையும் தீர்வும்
நாகநதியில் பிரச்சினை என்னவென்று விவரித்த குப்பன்,
“தண்ணீர் ஆவியாதல் முக்கிய பிரச்சினையாக இருந்தது. சாலைகள், ஆழ்துளை கிணறுகளை தோண்டுவது, ரசாயனம் கலந்த விவசாயம் ஆகியவை மண் அரிப்பை ஏற்படுத்தியது. இதனால் நதியில் தண்ணீரை தேக்கி வைப்பது மிகவும் கடினமாக இருந்தது,” என்றார்.
விஞ்ஞானிகள் அளித்த செயல் திட்டத்தில், ஓர் எளிய நடைமுறை தீர்வை வழங்கியது. அது ரீசார்ஜ் கிணறுகள். மறு ஊட்டக்கிணறுகள் எனப்படும் ரீசார்ஜ் கிணறுகள் ஆழமான நீர் தாங்கி மண்டலங்களுக்கு நேரடியாக நீரை உள்ளே செலுத்த பயன்படும் கிணறுகள் ஆகும்.
இந்த செயல்திட்டத்துடன் பஞ்சாயத்து தலைவரை சந்திக்க சென்ற குப்பனிடம், அவர் பேச மறுத்துவிட்டார். மனம் தளராமல், வாழும் கலை அமைப்பின் திட்ட நிதியை பெற்றுக்கொண்டு சாலமநத்தம் கிராமத்தில் ஐந்து ரீசார்ஜ் கிணறுகளை நிறுவினார்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு கிராமத்தில் மழை பெய்து நாகநதியில் தண்ணீர் வரவில்லை. எனினும், நதியின் ஒரு சிறிய பகுதி உயிர் பெற்றிருந்தது. மேலும், இம்முறை பஞ்சாயத்து தலைவர் குப்பனுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்து இன்னும் என்ன செய்யலாம், என்று கேட்டார்.
மீண்டும் உயிர்பெற்ற நதி...
ஆறுகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் இத்திட்டத்தை அதிக கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல நிதியும், முக்கியமாக மனிதவளமும் தேவை என்பதை குப்பன் உணர்ந்தார். அப்போது தான் கிராமங்களில் 100 நாள் வேலை செய்யும் நபர்களை இந்த திட்டத்துக்காக பயன்படுத்தலாம் என்கிற யோசனை வந்தது. பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ள வேலை 100 நாள் வேலை திட்டம். அவர்களை தனது திட்டத்துக்கு பயன்படுத்த அதிகாரிகளை அணுகினார்.
“நான் வேலூரில் உள்ள ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநரை அணுகினேன். ஆனால் அவர் ‘பெண்கள் கிணறு தோண்டுவது சாத்தியமில்லை’ என்று எனது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அவருக்கும் அவரது குழுவினருக்கும் யோகா கற்பிக்க முடியுமா என்று கேட்டு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்” - குப்பன்.
அப்படி, மூன்று நாள் யோகா வகுப்பின் முடிவில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனரின் மனம் மாறியது. ஏற்கெனவே கட்டப்பட்ட ரீசார்ஜ் கிணறுகளின் படங்களைப் பார்க்க விரும்பிய அவர், திட்டத்தின் நோக்கத்தை எவ்வாறு விரிவுபடுத்துவது, அதில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்வது தொடர்பாக பேசினார்.
20 பெண்கள் உதவியுடன் திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் அவர்களுக்கு திட்டத்தின் தேவையை புரியவைத்து, நதிகளை புத்துயிர் பெற வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய தகவல்களை வழங்கி தயார்படுத்தப்பட்டனர்.
பெண்களின் பங்கு...
இப்படியாக, ஆயிரம் பெண்கள் ஒன்று கூடி, ஒரு வருடத்தில் 21 கிராம பஞ்சாயத்துகளில் 349 ரீசார்ஜ் கிணறுகளையும் 200 சிறிய பாறாங்கல் செக் டேம்களையும் கட்டினார்கள். பாறாங்கல் செக் டேம் நீரோடைகள் நடுவே வைக்கப்படுவதால், அவை நீர் ஓட்டத்தை மெதுவாக்குகின்றன மற்றும் நீர் அரிப்பைத் தடுக்கின்றன, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கின்றன. பாறாங்கல் செக் டேம்களுக்கு இணையாக, பெரிய சிமெண்ட் வளையங்களும் உருவாக்கப்பட்டன. இப்படி, ஒவ்வொரு ரீசார்ஜ் கிணறும் கட்ட 23 நாட்கள் ஆகும்.
பெண்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது, நிலத்தடி நீர்மட்டம் உயர, பின்னர் நாகநதியில் நீர் வரத் தொடங்கியது. திட்டத்தின் வெற்றி பற்றிய செய்தி வெளியே பரவியது. குப்பன் நினைத்தது நடந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 20,000 பெண்கள் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 3,800 ரீசார்ஜ் கிணறுகள் மற்றும் 1,000 பாறாங்கல் செக் டேம்களை உருவாக்கினர்.
இதன் ரிசல்ட், நாகநதி ஆண்டு முழுவதும் பாய்வதோடு, இப்பகுதியின் சமூக - பொருளாதார நிலப்பரப்பை முற்றிலுமாக மாற்றியது. இப்பகுதியின் விவசாயமும் புதுப்பிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியும் தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் இந்தத் திட்டத்தைப் பற்றி வெகுவாக பாராட்டினார்.
இத்திட்டம் நாகநதி நதி மறுசீரமைப்புத் திட்டம் என்று அறியப்பட்டு, தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 25 ஆறுகளின் குறுக்கே 75,000 ரீசார்ஜ் கிணறுகள் மற்றும் பாறாங்கல் செக் டேம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சரஸ்வதி ஆறு, அப்பர் பாலாறு, மேட்டூர், பாம்பார், நல்லார், பவானி உட்பட பல நதிகள் இதில் அடக்கம்.
இந்த திட்டத்தின் மற்றொரு பயன், பெண்களின் வேலைவாய்ப்பு. குப்பன் ஆரம்பித்த இந்த திட்டத்தில் பணியாற்றிய பெண்களின் எண்ணிக்கை ஒருகட்டத்தில் 45,000 ஆக உயர்ந்தது. மேலும், 40 நாட்கள் மட்டுமே வேலை செய்ய முடியும் என்கிற நிலை மாறி, 80 நாட்களுக்கு வேலை பெறுவதோடு, கூடுதல் வருமானம் பெறுகிறார்கள். அதேபோல், அருகிலுள்ள நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வதும் குறைந்தது என்கிறார் குப்பன்.
குப்பன் மேற்கொண்ட முன்னெடுப்பின் வெற்றி இந்த மாடலை 35 மாவட்டங்களிலும் செயல்படுத்த ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரிடம் தமிழக அரசு அறிக்கை கேட்டுள்ளது. தமிழக அரசின் விருப்பத்தை அடுத்து,
“நாங்கள் ஒரு செயல் திட்டத்தைத் தயாரித்து வருகிறோம். இதை செயல்படுத்த 5-6 அரசு சாரா நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளோம். இதை வெற்றிகரமாக செய்ய பலர் ஒன்றிணைய வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்கிறார் குப்பன்.
குப்பனின் பணி இதோடு நிறைவடையவில்லை. புத்துயிர் பெற அதிக ஆறுகள் உள்ளன. அதனை நோக்கிய முன்னெடுப்பை எடுக்க தயாராகி வருகிறார்.
மூலம்: ரேகா பாலகிருஷ்ணன், தமிழில்: ஜெய்
'மண்ணை வளப்படுத்த ஏரி, குளங்கள் செழிப்பாகனும்' - 5 ஆண்டுகளில் 200 நீர்நிலைகளை தூர்வாரிய காவிரி கடைமடை இளைஞர்கள்!
Edited by Induja Raghunathan