9வது பெயில்; சேல்ஸ் கேர்ளாக தொடங்கி ரூ.137 கோடி மதிப்பு நிறுவனத்தை உருவாக்கிய மல்லிகா சங்கர்!
9ம் வகுப்பில் தோல்வியடைந்து தனது 14 வயதில் பாத்திரக்கடை ஒன்றில் சேல்ஸ்கேர்ளாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த மல்லிகா சங்கர், இன்று 17க்கும் மேற்பட்ட நாடுகளில் வாடிக்கையாளர்களைக் கொண்ட SAMMS Jukebox நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
கல்வி என்பது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவும் ஒரு கருவிதான்... ஆனால், பள்ளிக்கல்வியையே முடிக்காமல், 9ம் வகுப்பில் பெயிலானவர், பல்வேறு தொழில்களில் தான் பெற்ற அனுபவங்களின் மூலம் இன்று வருடத்திற்கு கோடிக்கணக்கில் டர்ன் ஓவர் செய்யும் நிறுவனத்தை நடத்தி 25 குடும்பங்களுக்கு வேலை அளித்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், அந்த சாதனைப்பெண்ணின் பெயர் மல்லிகா சங்கர். தற்போது 51 வயதாகும் அவர், SAMMS juke box (www.samms.in) என்ற நிறுவனத்தை நடத்தி, இந்தியா மட்டுமின்றி மற்ற 18 நாடுகளிலும் ஆர்டர்களை எடுத்து திறன்பட செய்து வருகிறார்.
மல்லிகா சங்கர் விசாகப்பட்டிணத்தில், மிகவும் ஆச்சாரமான கூட்டுக்குடும்பத்தில் பிறந்தவர். 9ம் வகுப்பில் பெயிலானதால், மீண்டும் சிறப்புத்தேர்வு எழுத, அதிலும் அவருக்கு வெற்றி வசப்படவில்லை. இதனால் மீண்டும் பள்ளிக்குச் செல்ல விரும்பாமல், அருகில் இருந்த கடை ஒன்றில் விடுமுறைக்காக பணியில் சேர்ந்துள்ளார். அங்கிருந்துதான் தொழில் அனுபவங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார் மல்லிகா.
“எங்களுடையது கூட்டுக்குடும்பம் என்பதால் 14 வயதில் பாத்திரக்கடை ஒன்றில் வேலைக்குச் செல்ல வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால், என் மனநிலையை என் தந்தை நன்றாக புரிந்து கொண்டார். அதனால் மாதம் ரூ.400க்கு சேல்ஸ்கேர்ளாக அந்தக் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். தினமும் 14 மணி நேர வேலை என்றாலும், சலிக்காமல், அலுப்பில்லாமல் வியாபார நுணுக்கங்களை அங்கு கற்றுக் கொண்டேன்," என்றார்.
16 நிறுவனங்களில் வேலை
ஒரு வருடத்தில் வேறு ஒரு துணிக்கடைக்கு 450 ரூபாய் சம்பளத்திற்கு மாறினேன். அப்படியே ரூ.750 சம்பளம், ரூ.1,200 சம்பளம் என சுமார் 16க்கும் மேற்பட்ட கம்பெனிகள் மாறினேன். அப்படி ஹோட்டல் ஒன்றில் ரிசப்ஷனிஸ்ட்டாக வேலை பார்த்தபோதுதான் எனது கணவரைச் சந்தித்தேன். இருவரும் வேறுவேறு மதம் என்பதால் எங்களது திருமணத்திற்கு வீட்டில் கடும் எதிர்ப்பு. அதனால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம்.
கல்வியறிவு போதுமானதாக இல்லாததால், நல்ல வேலை கிடைக்கவில்லை. எப்படியோ, ஒரு பிரபல நிறுவனம் ஒன்றில் மிகப்பெரிய பதவியில் சேர்ந்தேன். சுமார் 30 வருடங்களுக்கு முன்பு, அப்போதே ரூ.35,000 சம்பளம், கார், மொபைல் என அந்த வேலை எனக்கு சொகுசான வாழ்க்கையை அமைத்துத் தந்தது.
நானும் அந்த வேலைக்கு எனது முழு உழைப்பை தந்து, மாதம் ரூ.2 கோடி டர்ன் ஓவர் கொடுத்துக் கொண்டிருந்தேன். சுமார் 4 வருடம் அங்கு வேலை பார்த்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் நான் டிகிரி முடிக்கவில்லை என்பதைக் கண்டுபிடித்து என்னை பணியில் இருந்து நீக்கி விட்டனர்.
கைநிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்துவிட்டு, திடீரென வேலை பறி போனதால், என்ன செய்வதென்று முதலில் குழப்பம் உண்டானது. பிறகு கிடைத்த வேலைகளை எல்லாம் செய்யலாம் என செய்யத் தொடங்கினேன். அப்படி உருவானதுதான் இந்த 'சாம்ஸ் ஜூக்பாக்ஸ்' என தான் ஒரு தொழில்முனைவோரான கதையை விளக்குகிறார் மல்லிகா.
முதல் வாய்ப்பு
ஆரம்பத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு யூனிபார்ம் தைத்து தருவது, டி சர்ட் உருவாக்கித் தருவது என சிறு சிறு வேலைகளைச் செய்து வந்துள்ளார். அப்படி ஒரு சின்ன ஆர்டருக்காக சென்ற இடத்தில்தான், மல்லிகாவின் சாமர்த்தியத்தால் அவரது நிறுவனம் உருவாவதற்கான விதை போடப்பட்டது.
பிரபல நிறுவனத்தில் சிறு ஆர்டர் ஒன்றைப் பெறுவதற்கான நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். அங்கு என்னைப் போல் 20 பேர் சிறு சிறு ஆர்டர்களுக்காக வந்திருந்தனர். எனது நேர்காணல் முடிந்தபின், நான் அங்கிருந்து செல்லவில்லை. அனைவரும் செல்லும்வரைக் காத்திருந்து, பின்னர் அந்த மேலதிகாரியைச் சென்று சந்தித்தேன். அவர்களிடம் இந்த அனைவருக்கும் தரப்போகும் அனைத்து ஆர்டர்களையும் நானே செய்து தருவதாகக் கூறினேன்.
முன்பின் தெரியாத என்னிடம் எப்படி அவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைப்பது என முதலில் அவர் தயங்கினார். நான் அட்வான்ஸ்கூட வேண்டாம் வேலையை முடித்து விட்டு முழுப்பணத்தையும் வாங்கிக் கொள்வதாகக் கூறவும் ஒரு வழியாக அவர் சம்மதித்தார்.
"என் கையில் இருந்த பணத்தைக் கொண்டு, என்னுடன் வேலை பார்த்த சக ஊழியரையும் பார்ட்னராக சேர்த்துக் கொண்டு, அந்த நிறுவனத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கினேன். என்னை அந்த மேலதிகாரி நம்பியது போல, பல கடைகளில் என் செக்கை மட்டும் நம்பி, அவர்கள் பொருள் கொடுத்தனர். அந்த ஆர்டரைச் சிறப்பாக செய்து கொடுத்தபின்னர் எனக்கு பெரிய நம்பிக்கை உருவானது,” என்கிறார் மல்லிகா.
புதிய யோசனை
தான் வாங்கிக் கொடுத்த பொருட்கள் ஒரு பெட்ரோல் பங்கில் விளம்பரத்திற்கு வைக்கப் பட்டிருப்பதைப் பார்த்ததும், மல்லிகாவிற்கு புதிய யோசனை உதித்தது. இதை நாமே நேரடியாக ஆர்டர் எடுத்து செய்தால் என்ன? என்ற அவரது யோசனையைத் தொடர்ந்து, இது தொடர்பாக பல முன்னணி நிறுவனங்களை நேரில் சந்தித்து புதிய ஆர்டர்களைப் பெற்றுள்ளார்.
“எங்கள் நிறுவனத்தின் பணி, பெட்ரோல் பங்குகளில் ஹோர்டிங்ஸ் வைப்பதாகும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் விளம்பரங்களை, அவர்கள் விரும்பும் பகுதிகளில் ஹோர்டிங்ஸாக வைப்போம். அதற்காக அவர்களின் பணத்தை நேரடியாக வாங்கிக் கொள்ளாமல், அதற்குப் பதில் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கி, சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்குகளிடம் கொடுத்து விடுவோம். அவர்கள் அதனை அவர்களது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கொடுத்து விடுவார்கள்.
எங்களது இந்த பணி எங்களை நம்பி வேலை தரும் நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இசையாக இருக்க வேண்டும் என்பதால்தான் எங்கள் நிறுவனத்திற்கே 'ஜூக் பாக்ஸ்' எனப் பெயர் வைத்துள்ளோம். அதில் வரும் SAMMS என்பது எங்கள் குடும்பத்தினர் மற்றும் பார்ட்னரின் பெயர் எழுத்தின் முதல் எழுத்துக்கள் சேர்ந்தது,” என்கிறார் மல்லிகா.
தற்போது இந்தியா மட்டுமின்றி 17க்கும் மேற்பட்ட நாடுகளில் இவர்களது நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. சென்னையில் 4,350 சதுர அடியில் இவர்களது அலுவலகம் இயங்கி வருகிறது. அதில் 25க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். சுமார் 24 ஆண்டுகளாக இயங்கி வரும் இவர்களது நிறுவனத்தின் மொத்த நெட்வொர்த் 137 கோடி. ஆண்டு டர்ன் ஓவர் 5 கோடியில் இருந்து 15 கோடி என்ற அளவில் உள்ளது.
டைம்லெஸ் பியூட்டி
தொழிலில் மட்டுமின்றி, பிற மொழிகளைக் கற்றுக் கொள்வது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது போன்றவற்றிலும் மல்லிகாவிற்கு ஆர்வம் அதிகம். மிஸஸ் வேர்ல்ட் இண்டர்நேஷனல் போட்டியிலும் கலந்து கொண்டு டைம்லெஸ் பியூட்டி என்ற விருதைப் பெற்றுள்ளார் மல்லிகா.
ஜெர்மனியில் என்னுடைய புரொபைல் பிக்சர் பார்த்து, எனது தோழி ஒருவர் மிஸஸ் வேர்ல்ட் இண்டர்நேஷனல் ஆடிசனுக்கு என்னை அனுப்பி வைத்தார். டெல்லியில் நடந்த ஆடிசனில் 11 நாடுகளைச் சேர்ந்த 6,372 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் என்னையும் சேர்த்து 140 பேர் பைனலிஸ்டுகளாக தேர்வானோம்.
”144 மணி நேரம் கொடுக்கப்பட்ட பயிற்சிகளுக்குப்பின், எனக்கு டைம்லெஸ் பியூட்டி என்ற விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களில் நான் மட்டுமே 51 வயதானவர். மற்றவர்கள் எல்லாம் என்னைவிட வயதில் குறைந்தவர்கள். அவர்களுக்கு இணையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த விருது என்னை சர்வதேச அளவில் பிரபலமாக்கியுள்ளது. தற்போது மிஸஸ் இந்தியா ஆடிசனுக்கு மெண்டராக அழைத்துள்ளார்கள்,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் மல்லிகா.