பள்ளி ஆசிரியரான ரூபி, ப்யூட்டிபுல் பெண் பாடி பில்டரான கதை!
இன்றைய காலத்தில் பெண்கள் அனைத்து துறையிலும் முன்னேறி வருகின்றனர் இருப்பினும் ஒரு சில துறைகளை பெரும்பாலான பெண்கள் தொடாமல் தவிர்த்து வருகின்றனர். முக்கியமாக அழகு மற்றும் உடல் பராமரிப்பில் எந்தவித ரிஸ்க்கையும் எடுக்க துணிவதில்லை.
பெண்களின் அழகுக்கென ஒரு சில கோட்பாட்டை இச்சமூகம் வரையறை செய்துவிட்டது. அந்த கோட்பாட்டுக்குள் தங்கள் உடல் அமைப்பை பல பெண்கள் அமைத்துக்கொண்ட நிலையில், சென்னையை சேர்ந்த ரூபி, ஆண்கள் மட்டுமே செய்யக் கூடியவை எனக்கருதும் பாடி பில்டிங்கை துறையாக எடுத்து வெற்றி கண்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பெண் பாடி பில்டர் ரூபி ப்யூட்டி. இதற்கு முன் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர், பெரும்பாலான பெண்கள் போல் திருமணத்திற்கு பின் குழந்தை, வீடு, வேலை என சாதாரண சூழலில் தனது வாழ்கையை நடத்திக் கொண்டிருந்தார். அதன் பின் தனது கணவருடன் ஏற்பட்ட ஒரு நிகழ்வு, தனது வாழ்க்கைப் பயணத்தை மாற்றிவிட்டதாக தெரிவிக்கிறார் ரூபி.
“குழந்தை பிறந்தப்பின் உடல் எடை அதிகரித்து பருமனாக ஆகிவிட்டது. இதனால் என் மீது ஆர்வம் குறைந்துவிட்டதாக என் கணவர் தெரிவிக்க உடல் எடையை குறைக்க முயற்சிகள் எடுத்து அதுவே எனது கனவாக மாறிவிட்டது,” என்கிறார் ரூபி.
கணவருடன் ஏற்பட்ட அந்த நிகழ்வுக்கு பிறகு உடல் எடையை குறைக்க தினமும் 10கிமீ வரை அதிகாலையில் நடக்கத் துவங்கினார். அதன் பலனாக நான்கே மாதத்தில் 25கிலோ எடையை அவரால் குறைக்க முடிந்தது, இதுவே அவருக்கு உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை அதிகரித்தது.
ஜிம்மில் உடற் பயிற்சி மேற்கொண்ட ரூபி, அடுத்தக்கட்டமாக பாடி பில்டிங் செய்ய விரும்பி தனது பயிற்சியாளரிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார் ஆனால் போதிய ஊக்குவிப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.
“பாடி பில்டிங் செய்ய வேண்டும் எனக் கூறியதும் அனைவரும் கேலி செய்து சிரித்தனர். பாடி பில்டிங் ஆண்களுக்கான செயல் என்றும் பெண்களுக்கு அதில் இடமில்லை போன்ற கண்ணோட்டத்தையே என் மீது திணித்தனர்...”
தனது விருப்பத்தை கேட்ட அனைவரும் அவரை பார்த்து சிரிக்க, பாடி பில்டிங்கில் மிஸ்டர் இந்தியா, தமிழ்நாடு என்று பல பட்டங்களை பெற்ற கார்த்திக் மட்டுமே நிச்சயம் இதை செய்ய முடியும் என ஊக்குவித்து பயிற்சி அளித்ததாக தெரிவிக்கிறார் ரூபி.
2015ல் உடல் எடையை குறைக்க தனது பயணத்தை துவங்கி அதன் பின் பாடி பில்டிங் மீது ஆர்வம் ஏற்பட்டு பயிற்சி செய்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குவஹாத்தியில் நடைபெற்ற தேசிய அளவு போட்டியில் கலந்துக்கொண்டு தங்கம் வென்றுள்ளார். தமிழகத்தில் இருந்து சென்ற ஒரே பெண் பாடி பில்டர் ரூபி, முதல் போட்டியிலே தங்கம் வென்றுள்ளார். அதன் பின் சென்னையில் நடைபெற்ற போட்டியில் மிஸ் சென்னை பட்டத்தையும் வென்றுள்ளார்; கூடிய விரைவில் ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக களம் இறங்க முயற்சிகள் எடுத்து வருகிறார் ரூபி.
“முதலில் எனது குடும்பத்தால் இதை ஏற்க முடியவில்லை, ஆண்கள் போல் செய்கிறேன் என வருத்தம் தெரிவித்தனர். ஆனால் போட்டிகளில் நான் கலந்துக்கொண்டு அதை பற்றிய புரிதல் வந்த பிறகு ஆதரவு அளிக்கின்றனர்.”
முழு மூச்சாக பாடி பில்டிங்கில் கவனம் செலுத்த தனது ஆசிரியர் வேலையை துறந்து, ஜும்பா பயிற்சியாளராக பணிப்புரிந்து வருகிறார். கணவனை பிரிந்து தனது மகனுடன் வசிக்கும் ரூபி, தனது மகனின் ஒத்துழைப்பு இருப்பதால் தனது கனவை நோக்கி சுலபமாக நகர முடிகிறது என்கிறார்.
பெண்கள் தயங்காமல் இந்தத் துறையை தேர்ந்தெடுக்கலாம். முறையான பயிற்சி இருந்தால் எதுவும் சாத்தியம் என முடிக்கிறார் இந்த மசில்ஸ் ப்யூட்டி...