பெண்கள் உலகைப் பிரதிபலிக்கும் திரைப்பட இயக்குனர் அஷ்வினி ஐயர் திவாரி!
அஷ்வினி ஐயர் திவாரி தனது சமீபத்திய திரைப்படம் ‘பங்கா’வில் பெண்களின் விருப்பங்களின் முக்கியத்துவத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று இந்தியாவில் உள்ள திறமையான பெண் இயக்குநர்களில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் அஷ்வினி ஐயர் திவாரி. நில் பட்டே சன்னாடா, பரெய்லி கி பர்ஃபி, பங்கா போன்ற இவரது திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. விளம்பரங்களில் தொடங்கி திரைப்படங்கள் வரையிலான தனது பயண அனுபவத்தை இவர் யுவர்ஸ்டோரி உடன் பகிர்ந்துகொண்டார்.
வழக்கமாக மேற்கொள்ளும் தனது பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு காலை ஏழு மணிக்கு தனக்கான நேரத்தை ஒதுக்கி தேநீர் அருந்துகிறார். கைப்பேசியைப் பார்த்தவாறே விரைவாக காலை உணவை எடுத்துக்கொள்கிறார்.
அஷ்வினி தனது மகனை பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிட்டு பணியிடத்தை நோக்கி விரைகிறார். அன்றைய தினத்திற்காக சந்திப்புகளும் முக்கியப் பணிகளும் அவரது வருகைக்காக காத்திருக்கின்றன. இப்படியாக இவரது வாழ்க்கை மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
பொதுவாகவே பெண்கள் தேநீர் தயாரிப்பது, சுடச்சுட காலை உணவு பரிமாறுவது, கார் புக் செய்வது இப்படி குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் தேவைகளை பூர்த்திசெய்த பிறகு தன்னுடைய பணியில் ஈடுபட விரைகின்றனர். இவர்களது திறன் பெரும்பாலும் போற்றப்படுவதில்லை.
ஆனால் அஷ்வினி ஐயர் திவாரியின் சமீபத்திய திரைப்படமான ‘பங்கா’வில் இந்த அன்றாட வாழ்க்கைச் சூழல் மாறுபட்டுள்ளது. பெண்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்கிற கேள்வி இதில் முன்வைக்கப்படுகிறது.
“நான் வளர்ந்த சூழல் அத்தகையது. குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு பெண் தனக்கான வேலையில் ஈடுபடுவார். இது அவர்மீது திணிக்கப்பட்டவில்லை என்றாலும் அப்படித்தான் நடக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் இது வழக்கமாகி விட்டது.”
பங்கா திரைப்படத்தில் இந்த அம்சத்தை சுட்டிக்காட்டவே விரும்பினேன். ஒரு காதலியாக இருந்து மனைவியாகவும் அம்மாவாகவும் விரைவாகவே அடுத்தடுத்த கட்டங்களுக்கு மாறிவிடுவதால் பலர் இதை உணர்வதில்லை.
“இன்று பெண்கள் பணிபுரியலாம். உணவு ஆர்டர் செய்யலாம். இருப்பினும் இன்றளவும் பாலின பாகுபாடு என்பது தொடர்கதையாகவே உள்ளது. அனைவர் மீதும் குடும்பப் பொறுப்புகள் திணிக்கப்படுவதில்லை என்றாலும் இந்தச் சூழலே காணப்படுகிறது,” என்றார்.
கலை மீதான ஆர்வம்
கதை சொல்லுதல், திரைக்கதை போன்றவற்றை மிகவும் யதார்த்தமாக புதிய கோணத்தில் படைப்பதில் இந்த பாலிவுட் இயக்குநர் பிரபலமானவர். அஷ்வினிக்கு இரண்டு குழந்தைகள். இவர் 2017-ம் ஆண்டு ‘நில் பட்டே சன்னாடா’ என்கிற திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநர் விருது வென்றார். மும்பை புறநகரின் முலந்த் பகுதியில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் அஷ்வினி. பெரிய திட்டமிடல் ஏதுமின்றி தற்செயலாகவே திரைத் துறையில் இணைந்துள்ளார்.
என் அப்பா மத்திய கிழக்குப் பகுதியில் பணிபுரிந்து வந்தார். நான் என் அம்மாவுடன் மும்பையில் தங்கியிருந்தேன்,” என்றார் அஷ்வினி. இவர் சுயாதீனமாக சிந்தித்து முடிவெடுக்கும் தன்மை கொண்டவர்.
“எனக்கு கலை மற்றும் கைவினைப் பிரிவில் ஆர்வம் அதிகம் இருந்தது. நடுத்தர வர்க்க குடும்பப் பிண்ணனி கொண்டிருப்பதால் இதுபோன்று கலைப் பிரிவில் செயல்படுவது பரிச்சயமில்லாத ஒன்று. நான் சிஏ படிக்கவேண்டும் என்பது என்னுடைய அம்மாவின் விருப்பம். எனவே சிஏ படிப்பில் சேர்ந்தேன். ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை,” என்றார் அஷ்வினி.
அஷ்வினி மும்பையில் கலைக்கல்லூரி ஒன்றில் சேர்ந்து சிறப்பாக படித்து தங்கப் பதக்கம் வென்றார். பிறகு லியோ பர்னெட் என்கிற விளம்பர நிறுவனத்தில் கலை இயக்குனர் பணிக்கான பயிற்சியாளராக சேர்ந்தார். விரைவிலேயே நல்ல முன்னேற்றத்துடன் நிர்வாக இயக்குனர் ஆனார்.
“இந்த சமயத்தில் லோவ் லிண்டாஸ் நிறுவனத்தில் விளம்பரங்கள் தொடர்பான எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்த நித்தேஷை சந்தித்தேன். இருவரும் திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்குக் குழந்தை பிறந்தது. அவர் எழுத்தாளர் என்பதாலும் நான் கலை இயக்குநர் என்பதாலுமே இருவரும் ஒன்றிணைந்தோம் என்று நாங்கள் வேடிக்கையாக சொல்வதுண்டு,” என்று புன்னகையுடன் குறிப்பிட்டார் அஷ்வினி.
கேபிசி முதல் திரைப்படம் வரை…
லியோ பர்னெட் நிறுவனத்தில் எக்ஸிக்யூடிவ் கிரியேடிவ் டைரக்டராக பணியாற்றிய அஷ்வினி நியூயார்க் திரைப்பட விழா, கேன்ஸ் விழா போன்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று பல விருதுகளையும் வென்றுள்ளார்.
“கதை சொல்வதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. விளம்பரப் படங்கள் தயாரிக்கும்போது கதையின் ஒரு பகுதியை மட்டுமே எப்போதும் வெளிப்படுத்த முடிந்தது,” என்கிறார் அஷ்வினி.
அந்த சமயத்தில் அஷ்வினி ‘கௌன் பனேகா குரோர்பதி’ விளம்பரத்தை உருவாக்கினார். இந்த விளம்பரம் அவருக்கு பாராட்டைப் பெற்றுத் தந்ததுடன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும் உதவியது. திரைப்படங்கள் மூலம் கதை சொல்லுவது குறித்து அப்போதுதான் சிந்தித்தார்.
“அந்தத் திட்டம் பலனளித்தது. அதிகளவிலான பார்வையாளர்களுக்காக கதை உருவாக்க விரும்பினேன். திரைப்படத்தை இயக்க முயற்சி செய்யுமாறு நேஷனல் கிரியேடிவ் டைரக்டர் கே.வி ஸ்ரீதர் என்னை ஊக்குவித்தார். இதுகுறித்து சிந்தித்த பிறகு திரைப்படம் இயக்கத் தீர்மானித்தேன்,” என்றார்.
கௌன் பனேகா குரோர்பதி விளம்பரம் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றுத்தந்த சமயத்தில்தான் ‘நில் பட்டே சன்னாடா’ பற்றிய எண்ணம் தோன்றியது. JAR பிக்சர்ஸ் நிர்வாக தயாரிப்பாளரான அஜய் எல் ராய் உடன் இதுகுறித்து பகிர்ந்துகொண்டபோது அவருக்குப் அந்தக் கதைக்களம் பிடித்திருந்தது.
“நான் கதையை எழுத நிதேஷின் உதவியைப் பெற்றுக்கொண்டேன். இந்தக் கதைக்கான தயாரிப்பாளரை பரிந்துரைக்குமாறு அஜயிடம் கேட்டேன். இந்தக் கதையை நான் இயக்கவேண்டும் என்றார். எனக்கு சற்று தயக்கமாக இருந்தது. நான் இந்தத் திரைப்படத்தை இயக்கினால் அஜய் தயாரிப்பாளராக இணைவதாக தெரிவித்தார்,” என்றார் அஷ்வினி.
திரைப்படம்
திரைப்படத்தை இயக்குவது இருபாலருக்கும் கடினமானதே.
“ஆனால் பெண்ணாக இருக்கும்போது தன் திறமையை நிரூபிக்க ஆண்களைக் காட்டிலும் சற்று அதிகம் உழைக்கவேண்டும். பெண்ணால் முடியுமா என்கிற சந்தேகம் பொதுவாகவே மக்கள் மனதில் பதிந்துள்ளது.”
திரைப்படத் துறையில் பணியாற்றுவது குறித்து பலர் கேள்வியெழுப்பியதாக தெரிவித்த அவர், “உங்கள் கணவர் நன்றாக சம்பாதிக்கிறார். இந்தத் துறையில் கடினமாக உழைக்கவேண்டும். நீங்கள் ஏன் இதில் ஈடுபடவேண்டும்?” என்று பலர் வியந்ததாக குறிப்பிட்டார்.
ஊக்கமளித்து உறுதுணையாக இருப்பார்கள் என்று இவர் நம்பிய பலர் தயக்கம் காட்டியதாக தெரிவித்தார். விளம்பரங்கள் தயாரித்த நாட்களில் இவரது வாடிக்கையாளர்களாக இருந்த பலரும் இன்றளவும் நட்புடன் பழகுகின்றனர். குழுவாக ஈடுபடும் நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றும் அஷ்வினி தனிப்பட்ட அளவிலும் தன்னுடைய குழுவிற்கும் அங்கீகாரம் கிடைக்க இரவும் பகலும் அயராது உழைத்துள்ளார்.
இவரது கிரியேடிவ் டைரக்டர்களில் பலர் இன்று திரைக்கதை எழுதுகின்றனர். இவர் தனது தயாரிப்பு நிறுவனமான எர்த்ஸ்கை பிக்சர்ஸ் மூலம் கிரியேடிவ் மையம் ஒன்றை உருவாக்க விரும்புகிறார்.
“எனக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள் என்று நான் நம்பிய பலர் ஏமாற்றமளித்தனர். அது மோசமான காலகட்டமாக இருந்தது. ஆனால் என்னுடைய நோக்கத்தில் நான் தெளிவாக இருந்தேன். என் கதையின் அழகையும் எளிமையையும் ஏற்றுக்கொள்ளும் சரியான நபரைக் கண்டறியும்வரை என்னுடைய தேடல் படலம் தொடர்ந்தது,” என்றார் அஷ்வினி.
நில் பட்டே சன்னாடா, பரேலி கி பர்ஃபி, பங்கா என அஷ்வினி ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு புதிய கதையை சொல்ல முயற்சித்துள்ளார். இன்றைய ரசிகர்கள் முற்றிலும் மாறுபட்ட திரைப்பட அனுபவத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றார்.
இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘நில் பட்டே சன்னாடா’. அப்போதிருந்து ஒவ்வொரு படத்திலும் ஒரு மாறுபட்ட கதையை காட்சிப்படுத்துகிறார். இருப்பினும் இவரது முதல் திரைப்படமே இவருக்குத் தொடர்ந்து உந்துதலளித்து வருகிறது.
‘நில் பட்டே சன்னாடா’ திரைப்படத்தில் யதார்த்தமாக கதை சொல்லப்பட்ட விதத்தை ஒவ்வொரு முறையும் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறேன். வணிக ரீதியாக ஈர்க்கப்படுவது இயல்பே என்றாலும் கதை சொல்லலைப் பொறுத்தவரை யதார்த்தத்தையும் அழகையும் தக்கவைத்துக்கொள்வது முக்கியம். வணிக ரீதியாகவோ அல்லது ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையிலோ கவனம் செலுத்தினால் உங்களால் மாறுபட்ட திரைப்படத்தையோ கதையையோ உருவாக்கமுடியாது,” என்கிறார் அஷ்வினி.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா