ரூ.1,000 கோடி மதிப்புடைய 12 பில்லியன் ஊதுபத்திகளை விற்பனை செய்துள்ள ‘சைக்கிள் பியூர்’ வளர்ச்சிக்கதை!
ரங்கா ராவ் 1948-ம் ஆண்டு சிறியளவில் வீட்டிலிருந்தே தொடங்கிய தொழில் முயற்சி 75 நாடுகளில் விரிவடைந்து அபார வளர்ச்சியடைந்துள்ளது.
என்.ரங்கா ராவின் குடும்பத்தில் பலர் ஆசிரியர்களாகவும் புரோகிதர்களாகவும் இருந்தனர். ரங்காவிற்கு எட்டு வயதிருந்தபோதே அவரது அப்பா உயிரிழந்துவிட்டார். இதனால் இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்புகளை சுமக்கவேண்டிய சூழல். கிடைத்த சிறு வேலைகளை செய்து சம்பாதித்து வந்தார். பதின்ம வயதில் ஸ்டோர் சூப்பர்வைசர் வேலை கிடைத்ததால் குன்னூர் சென்றார்.
“என் தாத்தாவிற்கு எப்போதும் தொழில்முனைவில் ஆர்வம் அதிகம். குன்னூர் சென்று சில காலம் வேலை செய்தபோது, மைசூருவிற்குத் திரும்பி குடும்பத்தின் பாரம்பரியத்தைப் பின்பற்றும் வகையில் ஊதுபத்தி வணிகத்தில் ஈடுபடலாம் என்று நினைத்தார்,” என்கிறார் மூன்றாம் தலைமுறை தொழில்முனைவரான அர்ஜுன் ரங்கா.
இவர் என் ஆர் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக செயல்படுகிறார்.
1940-களில் ரங்கா ராவ் தனது வீட்டிலிருந்தே ஊதுபத்தி வணிகத்தைத் தொடங்கினார். மைசூரு பிராடக்ட்ஸ் அண்ட் ஜெனரல் ட்ரேடிங் கம்பெனி என்கிற பெயரில் தொடங்கப்பட்ட
நிறுவனம் பின்னர் NR Group என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பயணத்தின் தொடக்கப்புள்ளி
ரங்கா ராவ் தனது பாட்டியின் உதவியுடன் வீட்டிலேயே ஊதுபர்த்தித் தயாரிக்க ஆரம்பித்தார். தினமும் சந்தைக்குச் சென்று தேவையான மூலப்பொருட்களை வாங்கி வருவார். பிறகு ஊதுபத்தித் தயாரித்து மறுநாள் விற்பனை செய்து சம்பாதிப்பார்.
அடுத்த நாள் தயாரிப்பிற்குத் தேவையான தொகையை ஒதுக்கி வைத்துவிட்டு மீதமிருக்கும் தொகையைக் கொண்டே குடும்பச் செலவுகள் நிர்வகிக்கப்பட்டன.
“எத்தனையோ தியாகங்கள் செய்துள்ள என் தாத்தா, வணிகத்தைப் பொருத்தவரை மிகவும் துணிச்சலான முடிவுகளை எடுத்திருக்கிறார். இந்தியாவில் வெற்றிகரமாக செயல்பட ஒரு பிராண்ட் முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டு ’சைக்கிள் அகர்பர்த்திஸ்’ நிறுவினார்,” என்கிறார் அர்ஜுன்.
1948-ம் ஆண்டு மைசூருவில் தொழிற்சாலை அமைத்தார் ரங்கா ராவ். அப்போதிருந்து படிப்படியாக இந்நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது.
அர்ஜுனின் அப்பா ஆர் என் மூர்த்தி ரங்கா வணிகத்தில் இணைந்தார். மூர்த்தி ரங்காவின் சகோதரர்களான குரு ரங்கா, வாசு ரங்கா இருவரும் இணைந்துகொண்டார். அதன்பிறகே வணிகம் விரிவுபடுத்தப்பட்டது.
“என் தாத்தா அவருடைய திறனைக் கொண்டு ஊதுபத்தி தயாரிப்பில் ஈடுபட்டார். சந்தையில் வணிகத்தைத் தக்கவத்துக்கொள்ள தொடர்ந்து புதுமைபடைக்கவேண்டும் என்பது இணைய வாசனையே அறியாத காலத்திலேயே அவரது வணிக உத்தியாக இருந்தது,” என்கிறார் அர்ஜுன்.
NR Group சைக்கிள் பியூர் அகர்பர்த்திகளையும் இதர பூஜைப் பொருட்களையும் வழங்குகிறது.
இந்தக் குழுமம் Ripple Fragrances Private Limited என்கிற பெயரில் Lia, IRIS Home Fragrances உள்ளிட்ட பொருட்களையும் வழங்கி வருகிறது. இந்த பிராண்டுகளின் மூலம் ரூம் ஃப்ரெஷ்னர், கார் ஃப்ரெஷ்னர் என காற்றை நறுமணமிக்கதாக மாற்றக்கூடிய தயாரிப்புகளை வழங்குகிறது.
வணிக விரிவாக்கம்
NR Group செயல்பாடுகளைப் பொருத்தவரைத் தொடர்ந்து புதுமை புகுத்தப்பட்டு வருகிறது. டின் பேக்கேஜிங்கில் இருந்து கார்ட்போர்ட் பேக்கேஜிங்கிற்கு மாறிய முதல் ஊதுபத்தி தயாரிப்பாளர்களில் இந்தக் குழுமமும் அடங்கும். இந்த முயற்சியின் விளைவாக உற்பத்தி செலவு குறைந்ததுடன் இறுதி தயாரிப்பின் விலையும் குறைந்தது என்கிறார் அர்ஜுன்.
இன்று NR Group, 75 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் வருவாய் 1,700 கோடி ரூபாய். கடந்த ஆண்டு 1,000 கோடி ரூபாய் மதிப்புடைய 12 பில்லியன் அகர்பர்த்திகளை விற்பனை செய்துள்ளது.
சைக்கிள் பியூர் நிறுவனம் அதன் தயாரிப்பு செயல்முறையை சீரமைப்பதற்காக சமீபத்தில் ஐஓடி சார்ந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி ‘பியூர் பிரேயர் ஆப்’ என்கிற செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்மீக பயணத்திற்கு புக் செய்துகொள்ளலாம்; நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் இருந்து நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படுவதைப் பார்க்கலாம்; வீட்டில் வந்து பூஜை செய்பவரையும் புக் செய்துகொள்ளலாம்.
இரண்டு ஊதுபத்தியின் நறுமணத்தை ஒன்றிணைக்கும் Pure Fragrance Infusion System (PFIS) என்கிற காப்புரிமை பெறப்பட்ட தொழில்நுட்பத்தையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
“20 ஆண்டுகளுக்கு முன்பு நான் இணைந்துகொண்டபோது வணிகம் ஏற்கெனவே நிலைப்படுத்தப்பட்டிருந்தது. அந்த மரபை கொண்டு செல்லும் பொறுப்பு எனக்கு இருந்தது,” என்கிறார்.
சந்தை போட்டி
”என் தாத்தா வீட்டிலிருந்தே தொழில் செய்து வந்த காலத்திலேயே சந்தையில் மிகப்பெரிய பிராண்டுகள் இருந்தன. இருப்பினும் போட்டியைக் கண்டு மனம் துவளாத அவரது உறுதியும் தன்னம்பிக்கையும் சந்தையில் எங்கள் பிராண்ட் நிலைத்து நிற்கக் காரணமாக அமைந்தது,” என்கிறார்.
உள்ளூரில் செயல்படும் அமைப்புசாரா நிறுவனங்களை சமாளிப்பது மிகப்பெரிய சவால் என்கிறார் அர்ஜுன்.
ஊதுபத்தி சந்தை மிகப்பெரியது. சைக்கிள் பியூர் அகர்பர்த்திஸ் சந்தையில் 16 சதவீதம் பங்களிக்கிறது. மைசூருவில் அமைந்துள்ள நவீன ஆய்வகத்தில் நறுமணமும் தயாரிப்பும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
”நறுமணத்தை ஆய்வு செய்வதற்கு நிறுவனத்திற்குள்ளாகவே ஆய்வகம் அமைத்துள்ள வெகு சில நிறுவனங்களில் எங்கள் நிறுவனமும் அடங்கும்,” என்கிறார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்நிறுவனத்திற்கு, உலகின் கார்பன் நியூட்ரல் அகர்பர்த்தி தயாரிப்பாளர் என சான்றிதழ் கிடைத்துள்ளது.
”எங்கள் துறையில் உலகளவில் முதன் முதலாக ISO 45001:2018 தர சான்றிதழ் பெற்ற வெகு சில இந்திய நிறுவனங்களில் எங்கள் நிறுவனமும் ஒன்று,” என்கிறார்.
சமூக நலன்
சமூக நலனில் அக்கறை காட்டும் விதமாக சைக்கிள் பியூர் அகர்பர்த்திஸ் மைசூருவில் உள்ள கோயில்களில் இருந்து பூக்களை சேகரித்து ஊதுபத்திகளாக மறுசுழற்சி செய்கிறது. இந்த முயற்சியின் காரணமாக பூக்கள் கழிவுகளாக கொட்டப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
மைசூருவில் 'பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான ரங்கா ராவ் மெம்மோரியல்’ மூலம் 150 பார்வை மாற்றுத்திறனாளி பெண்களின் வாழ்க்கை மேம்படுத்தப்பட்டுள்ளது.
NR Group மைசூருவின் குடிசைப்பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு எழுதுபொருட்களும் பெண்களும் தையல் பயிற்சி உள்ளிட்ட திறன்கள் தொடர்பாக அமர்வுகள் ஏற்பாடு செய்கிறது.
ஊதுபத்தி தயாரிப்பில் கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது. இங்குள்ள பெண்களுக்கு தயாரிப்புப் பணிகளுக்குத் தேவையான மூலப்பொருட்களையும் இயந்திரங்களையும் வழங்குகிறது. தயாரிப்புப் பணிகள் முடிந்ததும் அவற்றை இந்நிறுவனமே வாங்கிக்கொள்கிறது.
வருங்காலத் திட்டங்கள்
'ஓம் சாந்தி’ என்கிற பிராண்டின்கீழ் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூம் ஃப்ரெஷ்னர், கார் ஃப்ரெஷ்னர் போன்ற பிரிவுகளில் மேலும் வலுவாக செயல்பட திட்டமிட்டுள்ளது.
Pure Puja செயலியின் மூலம் சுலோகங்களையும் வீட்டில் கடவுளை பிரார்த்தனை செய்து வழிபடும் முறையையும் மக்களுக்குத் தெளிவாக்க இந்நிறுவனம் விரும்புகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா