அமெரிக்காவில் ரூ.75,000 கோடி மதிப்பு தொழில் கோட்டையைக் கட்டமைத்த இந்திய சிங்கப்பெண்!
புனேயில் பொறியியல் படித்த நேஹா, அமெரிக்காவில் தடம் பதித்து இன்று 100 வணிகப் பெண்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 50-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
புனேயைச் சேர்ந்த நேஹா நர்கடே சுயமாக உருவாகிய தொழிலதிபர். இவர் இந்தியாவில் பிறந்து படித்து வளர்ந்தவர். ஜார்ஜியா டெக்கில் கணினி அறிவியலில் முதுகலைப் படிப்பதற்காக 2006-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் ஆரக்கிள் மற்றும் லிங்க்ட்இன் போன்ற நிறுவனங்களில் அவருக்கு வேலை கிடைத்தது. மற்றவர்களுக்கெல்லாம் கனவான இந்த நிறுவனங்களில் தன் திறமையினால் சாஃப்ட்வேர் இன்ஜினியர் வேலையைப் பெற்றார் நேஹா.
2014-ஆம் ஆண்டில், அவர் தனது இரண்டு லிங்க்ட்இன் சகாக்களுடன் ‘கான்ஃப்ளூயன்ட்’ (Confluent) என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இந்நிறுவனம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
கன்ஃப்ளூயன்ட் பிளாட்ஃபார்ம் என்பது முழு அளவிலான தரவு ஸ்ட்ரீமிங் தளமாகும். இது தொடர்ச்சியான, நிகழ்நேர ஸ்ட்ரீம்களாக தரவை எளிதாக அணுகவும், சேமிக்கவும் மற்றும் நிர்வகிக்கவும் உதவும் நிறுவனம். இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு என்னும் ஒரு துறை ராட்சனாக வளர்ந்து வருவதற்கு இந்த தரவு ஸ்ட்ரீமிங், டேட்டா மைனிங் போன்ற துறைகள் பெரிய அளவில் நங்கூரம் பாய்ச்சியுள்ளன.
கான்ஃப்ளூயெண்ட் நிறுவனம் 2021ம் ஆண்டில் பங்குச் சந்தையில் பொதுமக்களுக்கான வெளியீட்டிற்கு வந்தது. இதன் மதிப்பு 9.1 பில்லியன் டாலர்கள் (ரூ.75,000 கோடிக்கு மேல்) என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தில் நேஹாவுக்கு 6 விழுக்காட்டிற்கும் மேல் பங்கு இருந்தது.
புனே பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தவரான நேஹா நர்கடே, இப்போது 2021ல் நிறுவிய ‘மோசடி கண்டறிதல்’ (fraud detection) நிறுவனமான Oscilar-ஐ நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட ரூ.160 கோடி முதலிட்டு இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து வருகிறார்.
லிங்க்ட்இன் நிறுவனத்தில் அவர் பணியாற்றிய போது, அப்பாச்சி காஃப்கா எனப்படும் குறுஞ்செய்தியிடல் அமைப்பை உருவாக்க உதவினார். அப்பாச்சி காஃப்கா என்பது நிகழ்வு ஸ்ட்ரீமிங் தளமாகும். இது ஆயிரக்கணக்கான நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றது. உயர் செயல் திறன் தரவு செல்வழி, ஸ்ட்ரீமிங் பகுப்பாய்வு, தரவு ஒருங்கிணைப்பு, தரவு ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்காக பெரிய பெரிய நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய டிஜிட்டல் நடைமேடையாகும்.
தன் வெற்றிக்குக் காரணம் தன் தந்தையே என்று கூறும் நேஹா, சிஎன்பிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியது,
“தடைகளைக் கடந்து உச்சம் தொட்ட பெண்களின் வெற்றிக்கதைகள் அடங்கிய புத்தகங்களை என் தந்தை எனக்கு அளித்ததுதான் எனது வெற்றிக்கு அடித்தளம்,” என்கிறார்.
இந்திரா காந்தி, இந்திரா நூயி, கிரண் பேடி ஆகிய வெற்றிப் பெண்மணிகள் பற்றிய புத்தகங்களை தான் படித்ததாக நேஹா நர்கடே கூறியுள்ளார். இந்த வெற்றிக் கதைகளைப் படித்ததன் மூலம் தான் ஒரு சக்தியைப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
நேஹா நர்கெடே இப்போது கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் வசிக்கிறார். அமெரிக்காவின் 100 வணிகப் பெண்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 50-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 4,296 கோடி ரூபாய்!
நிறுவன மதிப்பு ரூ.5 லட்சம் கோடி; அதன் தலைவரின் பங்கு வெறும் 0.04% - HDFC-யின் தீபக் பரேக் கதை!
Edited by Induja Raghunathan