ஸ்விக்கி ஐபிஓ நாளை வெளியீடு - பங்குகளை வாங்க திரை, விளையாட்டுத் துறை பிரபலங்கள் போட்டாப் போட்டி!
ஐபிஓவில் ஊழியர்களுக்கான 750,000 பங்குகளுக்கான முன்பதிவும் அடங்கும், வெளியீட்டு விலையில் ரூ.25 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கியின் முதல் பொதுப்பங்குகள் வெளியீட்டிற்கு (ஐபிஓ) நாளை (6-11-24) வருகிறது. இதன் மூலம் ஸ்விக்கி ₹11,000 கோடிக்கு மேல் திரட்டுவதற்காகத் திட்டமிட்டுள்ளது.
Swiggy இன் IPO ஒரு பங்கின் விலை 371-390 ரூபாய்க்கு கிடைக்கும். சில்லறை முதலீட்டாளர்கள் 38 பங்குகளுக்கு விண்ணப்பிக்க ரூ.14,820 தேவைப்படலாம். ஐபிஓ-வில் ஊழியர்களுக்கான 750,000 பங்குகளுக்கான முன்பதிவும் அடங்கும், வெளியீட்டு விலையில் ரூ.25 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் முதல் ராகுல் திராவிட் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்கள் வரை, Swiggy பங்குகளுக்கு ஏற்கனவே இரண்டாம் நிலை சந்தையில் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இந்த பங்குச்சந்தை மூலம் திரட்டப்படும் நிதியை, ஸ்விக்கி துணை நிறுவனமான ஸ்கூட்ஸியில் முதலீடு செய்யவும், தொழில்நுட்பம் மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பு, பிராண்ட் மார்க்கெட்டிங் மற்றும் வணிக விளம்பரச் செலவுகள், அடையாளம் தெரியாத கையகப்படுத்துதல் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
செலிபிரிட்டி முதலீட்டாளர்கள் யார்?
ஸ்விக்கியின் பங்குகளுக்கு திரைப்படத் துறை, விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல பிரபலஸ்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இரண்டாம் நிலை சந்தையில் ஸ்விக்கியின் பங்குகளை இந்தப் பிரபலங்கள் வாங்க போட்டாப்போட்டியிடுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த பிரபலங்களில் குறிப்பிடத்தகுந்தவர்களாக ராகுல் திராவிட், ஜாகீர் கான் டென்னிஸ் நட்சத்திரம் ரோஹன் போபண்ணா, திரைப்படத் தயாரிப்பாளர் கரன் ஜோஹர், நடிகர்-தொழில்முனைவர் ஆஷிஷ் சவுத்ரி ஆகியோர் இருப்பதாக எக்கானமிக் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.
அவர்களைத் தவிர, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் குடும்ப அலுவலகம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் ஆரம்ப முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகளை வாங்குவதன் மூலம் நிறுவனத்தில் ஒரு சிறிய பங்குகளை வாங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் தலைவர் ராம்தியோ அகர்வால் ஸ்விக்கியின் பங்குகளை வாங்குவதாகவும் செய்திகள் உலா வருகின்றன. இதைத் தொடர்ந்து, நடிகை மாதுரி தீக்ஷித், இன்னோவ்8-இன் நிறுவனர், ரித்தேஷ் மாலிக், கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் (இப்போது ஓயோவுக்கு சொந்தமானது) ஆகியோர் தலா ₹1.5 கோடி செலுத்தி, 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்விக்கி பங்குகளை இரண்டாம் நிலை சந்தையில் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
நார்வேயின் நோர்ஜஸ் மற்றும் ஃபிடிலிட்டி ஆகியவையும் $15 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஏலங்களை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது, அத்தகைய முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட $605 மில்லியன் பகுதியை விட 25 மடங்கு அதிகமாக உள்ளது, என்று மிண்ட் ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.
Swiggy IPO நவம்பர் 6 புதன்கிழமை அன்று பொதுச் சந்தாவிற்குத் திறக்கப்பட்டு நவம்பர் 8 வெள்ளிக்கிழமை முடிக்கப்படும். ஒதுக்கீடு நவம்பர் 11 ஆகவும், பட்டியலிடல் தேதி நவம்பர் 13 ஆகவும் இருக்கலாம்.