கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் மனித உடலில் இருக்கும்?
கொரோனா பரவலில் ஸ்டேஜ்– 3 என்றால் என்ன? கொரோனாவில் இருந்து குணமடைந்தவர் மீண்டும் பாதிக்கப்படுவாரா? விளக்குகிறார் Dr.சுமந்த் சி ராமன்!
கொடூர நோய்தொற்று கொரோனாவின் பரவல் தமிழகத்தில் 2 நாட்களில் 150 கடந்து 309 பேருக்கு கோவிட்– 19 பரிசோதனை உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்த வந்தவர்களிடம் இருந்து சமூகத் தொற்றாக தமிழகத்தில் மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ள பகுதி என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அறிவித்துள்ளது.
ஏப்ரல் 14ம் தேதி வரை 2 வாரங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டிய வாரங்கள் என மருத்துவத் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
நாளுக்கு நாள் பீதியை அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பற்றிய கேள்விகளுக்கு பிரபல மருத்துவர் சுமந்த் ராமனிடம் விடை கண்டது யுவர் ஸ்டோரி தமிழ். அதன் விவரங்கள் இதோ:
கொரோனா நோய் பரவல் தமிழகத்தில் எந்த கட்டத்தில் இருக்கிறது?
தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த 2 வாரங்கள் மிக முக்கியமான நாட்கள். இந்த காலகட்டத்தில் அறிகுறிகளுடன் இருப்பவர்களைக் கண்டறிந்து அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் தனிமைபடுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் இதுவரை 2500 பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கிறது, இதனை மேலும் அதிகப்படுத்த வேண்டும். நாளொன்றிற்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு கொரோனா பாதிப்பு இருப்பவர்களை கண்டறிந்து தனி வார்டுகளில் வைப்பதன் மூலம் நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
தற்போதைய நிலையில் நோயைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
கொரோனா நோய் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் முக்கியமாக செய்ய வேண்டியவை. காய்ச்சல், சளி அறிகுறியுடன் இருப்பவர்களுக்கு உடனடியாக கோவிட்–19 பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். கோவிட்– 19 உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில் ஒரு கொரோனா நோயாளி எத்தனை பேருக்கு நோயை பரப்பியுள்ளார் என்பதை உடனடியாக பரிசோதித்து அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தவில்லை என்றால், நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினம்.
கொரோனா பரவலில் ஸ்டேஜ்– 3 என்றால் என்ன?
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் இந்த நோயானது தமிழகத்திற்குள் நுழைந்து விட்டது. அயல்நாட்டில் இருந்து வந்தவரிடமிருந்து அவரது குடும்பத்தினர், குடும்ப உறுப்பினர்கள் மூலம் சமூகத்தினருக்கு என கொரோனாவின் பாதை நீள்கிறது. தமிழகம் கிட்டதட்ட 3ம் கட்டத்தை நெருங்கிவிட்டது.
ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது, இந்த 110 பேருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் சென்று வந்த இடங்களில் சந்தித்த மக்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்து அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும். உண்மையிலேயே இது மிக சவாலான பணி, அதனால் தான் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தொடர்ந்த அறிவுறுத்தப்படுகிறது.
கோவிட் – 19 எத்தனை நாட்கள் மனித உடலில் இருக்கும்?
கோவிட்– 19 தாக்கத்திற்கு ஆளானவர்களின் உடலில் 14 நாட்கள் இந்த வைரஸானது தங்கி இருக்கும். இதில் என்ன முக்கியமென்றால் பாதிக்கப்படும் அனைவருக்குமே ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்காது. கொரோனா பாதிக்கும் 25% பேருக்கு அறிகுறிகளே இருக்காது அவர்கள் இயல்பாகவே இருப்பார்கள் நோய் வந்த இடமும் போன பாதையும் தெரியாது.
எஞ்சிய 75% பேரில் 80 சதவிகிதம் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கிறது. மீதமுள்ள 20 சதவிகிதம் பேரில் 5 சதவிகிதம் பேர் மட்டுமே தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள 110 பேரில் எல்லோருமே அபாயக் கட்டத்தில் இல்லை, இவர்களில் 30 பேருக்கு எந்த அறிகுறியுமே இல்லாமல் கூட இருக்கலாம். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் இன்னும் பிற உடல்நலப் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு அதிக ரிஸ்க் இருப்பதால் உடல் நலனில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.
14 நாட்கள் தனிமைப்படுத்தல் ஏன் அவசியம்?
கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அரசு உடனடியாக மருத்துவமனைகளில் தனி வார்டுகளில் வைத்து கண்காணிப்பதற்கு முக்கியக் காரணம் நோயின் தீவிரத்தை உணராமல் பலர் அலட்சியப்படுத்துவதே. நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் சோதனை அடிப்படையில் இந்திய அரசு அனுமதித்துள்ள Hydroxychloroquine மருந்து அளிக்கப்படுகிறது. நோய் தாக்கப்பட்டவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதன் மூலம் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முடியும்.
கொரோனாவில் இருந்து மீண்டவர் என்று எப்படி உறுதி செய்யப்படுகிறது?
கொரோனா பாதிக்கப்பட்டவர் 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டிருக்கும் போது தீவிரமாக கண்காணிக்கப்படுவார். அவருக்கு வைரஸின் வீரியம் அதிகரிக்கிறதா, மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்படுகிறதா வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
14 நாட்களுக்குப் பிறகு நோயாளிக்கு வெவ்வேறு நாட்களில் 3 முறை பரிசோதனைகள் செய்யப்படும் இந்த சோதனைகளில் வைரஸ் நெகடிவ் என்று வந்தால் மட்டுமே அந்த நபர் முழுவதும் குணமடைந்தவர் என்று கருதப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்.
குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கோவிட் -19 தாக்கம் ஏற்படுமா?
தனிநபர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி, உடல்நலனை பொறுத்தே கொரோனாவின் தீவிரம் குறையும். குணமடைந்தவர்களுக்கு 95 சதவிகிதம் அடுத்த சில மாதங்களுக்கு இதே வைரஸின் தாக்கம் இருக்காது.
எத்தனை நாட்களுக்கு இந்த வைரஸ் மீண்டும் வராமல் இருக்கும் என்பதையே தற்போது அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. இந்தியாவிலும் Anti-body பரிசோதனை நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே வைரஸின் தாக்கம் மீண்டும் எத்தனை நாட்களில் வர வாய்ப்பிருக்கிறது என்பதை கணிக்க முடியும்.