‘சின்ன வேலை, பெரிய சம்பளம்...’ - வேலை மோசடிகளும் ‘அலர்ட்’ குறிப்புகளும்
வேலை தேடுபவர்கள் இப்போது மலிந்துள்ள ‘பார்ட் டைம்’ வேலை மோசடிகளில் சிக்காமல் அறிய வேண்டிய சூழ்ச்சிகளும், சில வழிகாட்டுதல்களும்...
பகுதி நேர வேலை எனப்படும் ‘பார்ட் டைம்’ வேலை மோசடிகள்தான் வேலை தேடுபவர்களுக்கான இப்போதைய பெரிய கவலை. ஒரு நிறுவனத்தின் முதலாளிகள் போலவோ, வேலைக்கு ஆள் எடுக்கும் கன்சல்டன்சி நிறுவனங்கள் போன்றோ தங்களை காட்டிக்கொண்டு மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை இப்போது பெருகிவிட்டது. அப்படியான மோசடியாளர்கள், ஆன்லைன் தளங்கள் போன்ற தகவல் தொடர்புகளைப் பயன்படுத்தி வேலை தேடுபவர்களை மோசடிக்குள் தள்ளுகிறார்கள்.
மோசடியாளர்கள் இதற்காக வெளிப்படுத்தும் சூழ்ச்சிகளில் முக்கியமானது, பெரும்பாலும் அதிக ஊதியம் போன்ற ஏமாற்று வாக்குறுதிகள்தான். இப்படியான வாக்குறுதிகளால் ஏமாற்றப்படுவர்களுக்கு இழப்பீடு கூட கிடைக்காது. மேலும், அவர்கள் அடையாள திருட்டுக்கும் ஆளாவார்கள்.
இந்த மோசடிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுதல், இந்த மாதிரியான ஏமாற்று வேலைகளுக்கு இரையாகாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும். பார்ட் டைம் வேலை மோசடிகளைக் கண்டறிந்து தவிர்ப்பதற்கான சில வழிகள் உங்களுக்காக இங்கே...
பார்ட் டைம் வேலை மோசடிகளின் பொதுவான வகைகள்:
முன்கூட்டியே பணம் செலுத்தும் மோசடி: உங்களின் வேலைக்கான விண்ணப்பத்தை ப்ராசஸ் செய்யவுள்ளதாகவும், உங்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாகவும் கூறி கட்டணம் என்ற பெயரில் மோசடியாளர்கள் உங்களிடம் முன்கூட்டியே பணம் கேட்கலாம். நீங்கள் பணம் கொடுத்தவுடன் உங்களையும் நீங்கள் கொடுத்த பணத்தையும் மறந்துவிடுவது வாடிக்கையாகி வருகிறது. எனவே, முன்கூட்டியே பணம் செலுத்துவதை தவிர்த்தால், மோசடியில் இருந்து தப்பிக்க முடியும்.
காசோலை பண மோசடி: வேலைக்காக உங்களுக்கு அவர்கள் காசோலை (செக்) தருவதாக கூறலாம். பெரும்பாலும் அவை போலி காசோலையாக இருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை அதனை வங்கியில் டெபாசிட் செய்து, செக் பவுன்ஸ் ஆகும் பட்சத்தில் நீங்கள் சட்டரீதியாக சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
ரீஷிப்பிங் மோசடி: தற்போது டிரெண்டில் இருக்கும் மோசடி இது. அதாவது, ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ அடிப்படையில் ஒரு சில பொருட்களை உங்களுக்கு அனுப்பி, அதனை உங்கள் காசிலேயே பெறவைத்து, பின்னர், அந்தப் பொருட்களை உங்கள் மூலமாகவே ரீஷிப்பிங் செய்யவைப்பது. இதில் இருக்கும் மோசடி என்னவென்றால், நீங்கள் அனுப்பும் பொருட்கள் பொதுவாக திருடப்பட்ட பொருட்களாகவோ அல்லது திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தியோ ஆன்லைனில் வாங்கப்பட்டவை ஆகும். இந்த வகை மோசடியால் வேலை தேடுபவரான நீங்கள் உங்களுக்கு தெரியாமலே சட்டரீதியான சிக்கலில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும். எனவே, கவனம் தேவை.
டேட்டா என்ட்ரி மோசடி: தற்போது அதிகம் நடக்கும் மோசடிகளில் முதலிடம் டேட்டா என்ட்ரி மோசடிக்கு உண்டு. ‘சின்ன வேலைக்கு அதிக ஊதியம்’. அதுதான் இதன் தாரக மந்திரம். பெரும்பாலும் டேட்டா என்ட்ரி வேலைகளுக்கு முன்கூட்டியே பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றப்படுகிறார்கள். மேலும், வேலை தேடுபவர்களின் தனிப்பட்ட தகவலும் திருடப்படும் அபாயமும் இதில் உண்டு.
வேலை மோசடியை குறிக்கும் அறிகுறிகள்:
தேவையற்ற போன் கால்கள்: கன்சல்டன்சி நிறுவனங்கள் என்று சொல்லிக்கொண்டு தேவையில்லாமல் உங்களுக்கு போன் செய்து, வேலைத் தருவதாக பொய் வாக்குறுதி அளித்து உங்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்பது. அதை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவது.
முறையற்ற இ-மெயில்: இவ்வகை இ-மெயில்களை ஈசியாகக் கண்டறிய முடியும். எப்படியெனில், பழக்கமான, பெரிய நிறுவனங்கள் பெயரில் சரியான இலக்கணம் இல்லாமலும், எழுத்துப் பிழையுடனும் இவ்வகை இ-மெயில்கள் வரும். இவற்றை கொண்டே அது மோசடியா இல்லையா என்பதை அறியலாம்.
போலி இணையதளம் மற்றும் வலைதள கணக்குகள்: வெரிஃபைடு செய்யப்படாத போலி இணையதளம் மற்றும் வலைதள கணக்குகளில் வேலைகள் இருப்பதாக பட்டியலிடுவது. இதனை எளிதாக நம்ப வேண்டாம்.
இந்த மோசடிகளில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?
ஆராய்தல்: உங்களுக்கு வேலை கொடுப்பதாக சொல்லும் நிறுவனங்களின் நிஜ முகவரி, தொலைபேசி எண் மற்றும் அதிகாரபூர்வ இணையதளத்தைச் சரிபார்த்து ஆராய்வதன் மூலம் அந்த நிறுவனத்தின் சட்டபூர்வ அங்கீகாரத்தை, உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ளுதல் வேண்டும். ஆன்லைன் ரீவ்யூக்கள் ஆகியவற்றை செக் செய்துகொள்ளுதலும் நல்லது.
நம்ப முடியாத சலுகைகள் குறித்து எச்சரிக்கை: குறைந்த வேலைக்கு அதிக ஊதியம் தருவதாக உறுதியளிக்கும் வேலைகள் பெரும்பாலும் மோசடிகளாகும். உண்மையான நிறுவனங்கள் உங்கள் வேலைகளுக்கு ஏற்ப, ஊதியத்தை வரையறுப்பார்கள். எனவே, இதுபோன்ற நம்ப முடியாத சலுகைகள் குறித்து எச்சரிக்கை தேவை.
முன்கூட்டிய கட்டணங்களைத் தவிர்க்கவும்: சட்டப்பூர்வமாக வழங்கப்படும் வேலைகளுக்கும், பயிற்சிகளுக்கும் மற்றும் விண்ணப்பங்களுக்கும் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. எனவே, எந்த வேலைக்கும் முன்கூட்டியே பணம் கேட்பதாக இருந்தால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தகவல் தொடர்புகளைச் சரிபார்க்கவும்: பிழையான மின்னஞ்சல்கள், வேலைவாய்ப்பு பதிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால், முறையான வேலை வாய்ப்பு அறிவிப்புகள் பொதுவாக எந்தப் பிழைகளும் இன்றி இருக்கும்.
வேலைக்கான தகவலை உறுதிப்படுத்துவது: மோசடியாளர்கள் சொல்லும் வேலை தகவலை கண்ணைமூடிக் கொண்டு நம்பாமல், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அந்த வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும். மற்றபடி, தேவையில்லாத இ-மெயில், சமூக வலைதள விளம்பரங்களுக்கு ரெஸ்பான்ஸ் செய்வதை தவிர்க்கவும்.
உங்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும்: வேலைக்கு விண்ணப்பிக்கும் ஆரம்ப கட்டத்திலேயே உங்களின் வங்கிக் கணக்கு, பாஸ்வேர்ட் போன்ற தனிப்பட்ட விவரங்களை யாருக்கும் பகிர வேண்டாம்.
உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்: எல்லாவற்றையும் சிறந்தது, ஏதாவது உண்மையாக இருக்கும் என்றோ... நன்றாகத் தோன்றினாலோ அல்லது தவறாக உணர்ந்தாலோ, உங்கள் உள்ளுணர்வை நம்பி அதன்படி நடந்துகொள்ளுங்கள்.
Edited by Induja Raghunathan