20,000 ரூபாய் முதலீட்டில் வீட்டிலிருந்தே தொடங்கி அதிக லாபம் ஈட்டக்கூடிய 10 பிசினஸ் ஐடியாக்கள்!
மிகக்குறைந்த தொகையாக 20 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வீட்டிலிருந்தபடியே தொழில் தொடங்க உதவும் 10 யோசனைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
கொரோனா பெருந்தொற்று உலகையே புரட்டிப்போட்டுள்ள நிலையில் புதிதாக தொழில் தொடங்கும் யோசனையை பலர் தள்ளிப்போட நினைக்கலாம். இது சரியான நேரம் இல்லை என்று தோன்றும்.
ஆனால், இதுபோன்ற அசாதாரண சூழலில் தொடங்கப்பட்ட எத்தனையோ வணிகங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
கொரோனா சூழலில் டிஜிட்டல் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. மக்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். அதேபோல், வீட்டிலிருந்தே தொழில் தொடங்கவும் பலர் முற்படுகின்றனர்.
அந்த வகையில் வீட்டிலிருந்தே செயல்படும் வகையில், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக்கூடிய 10 தொழில் யோசனைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழில் யோசனைகளை செயல்படுத்த குறைந்தபட்சம் 20,000 ரூபாய் முதலீடு செய்தால் போதும்.
ஹோம் பேக்கரி
உங்களுக்கு பேக்கிங் செய்வதில் ஆர்வம் உள்ளதா? வெவ்வேறு சுவையில் பேக் செய்து அசத்துவீர்களா? அப்படியானால் ஹோம் பேக்கரி வணிகம் உங்களுக்கு லாபம் ஈட்டித் தரும்.
இந்திய பேக்கிங் துறை சிறப்பாக வளர்ச்சியடைந்து வருவதாக FIglobal அறிக்கை தெரிவிக்கிறது. 2024ம் ஆண்டில் இந்த சந்தையின் மதிப்பு 12 பில்லியன் டாலர் அளவிற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்தப் பெருந்தொற்று பரவல் காலத்தில் ஹோம் பேக்கிங் தொழில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
குறைந்தபட்சமாக 15,000 முதல் 20,000 ரூபாய் முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே பேக்கரி நடத்தலாம். கேக், சாக்லேட் போன்றவற்றைத் தயாரித்து சிறியளவில் தொடங்கி படிப்படியாக வளர்ச்சியடைய முடியும்.
கிஃப்ட் பாஸ்கெட்
பண்டிகை, திருமணம், விழாக்கள், சந்திப்பு இப்படி எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் கலாச்சாரம் தாண்டி பரிசு கொடுப்பது என்பது காலம் காலமகாவே நம் வழக்கத்தில் இருந்து வருகிறது.
இன்று வாழ்க்கைமுறை வெகுவாக மாறியுள்ளது. தனிநபர் வருவாயும் அதிகரித்துள்ளது. மக்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அவர்களுக்கு பிடித்தமான வகையில் பரிசளிக்க விரும்புகின்றனர். எனவே 'கிஃப்ட் பாஸ்கெட்' தயார் செய்து தருவது நல்ல லாபம் தரக்கூடிய தொழிலாகக் கருதப்படுகிறது.
இதற்கு அதிக முதலீடு தேவைப்படாது. படைப்பாற்றல் திறன் இருக்கும்பட்சத்தில் பல்வேறு டிசைன்களில் கிஃப்ட் பாஸ்கெட் தயாரித்து மக்களைக் கவரலாம். ஆரம்பத்தில் 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை முதலீடு செய்தால் போதும். சமூக வலைதளங்களின் மூலம் விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களை விரிவுபடுத்தலாம்.
கைவினைப் பொருட்கள்
மண் பாண்டங்கள், சுவரில் மாட்டப்படும் அலங்காரப் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் என அழகழகான கைவினைப் பொருட்களைத் தயாரித்து அவற்றை விற்பனை செய்யலாம். 20,000 ரூபாய் முதலீடு செய்தால் போதும். உங்களுக்குப் பிடித்தமான வேலைப்பாட்டைத் தேர்வு செய்து, அதற்கான மூலப்பொருட்களை வாங்கி வேலையைத் தொடங்கலாம்.
ஆன்லைன் ஸ்டோர் திறந்து சமூக வலைதளங்களில் உங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம்.
தனித்தேவைக்கேற்ற பரிசுகள்
வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செண்டிமெண்ட் இருக்கும். அதை சரியாகப் புரிந்துகொண்டு அவர்களது தேவைக்கேற்ப சேவையளித்தால் தொழிலில் சிறப்பிக்கலாம்.
நமக்கென்று ஒரு ஸ்டைல் உருவாக்கிக்கொண்டு மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டினால் நல்ல லாபம் ஈட்டலாம். 10,000-20,000 முதலீடு செய்தால் போதும்.
செயற்கை நகைகள்
நகைகள் இல்லாமல் பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்வதில்லை. அந்த அளவிற்கு பெண்களும் நகைகளும் ஒன்று கலந்துவிட்ட சூழலில் செயற்கை நகைகள் வணிகம் நல்ல லாபம் தரக்கூடியது.
மேற்குவங்கத்தில் கலம்காரி வடிவமைப்பு, தென்னிந்தியாவில் கோவில்கள் வடிவமைப்புடன்கூடிய நகைகள், ராஜஸ்தான், குஜராத் போன்ற பகுதிகளில் குந்தன் ஜுவல்லரி என அந்தந்த பகுதிகளுக்கு தனிச்சிறப்பு உண்டு.
இதுபோன்ற பகுதிகளிலிருந்து தனித்துவமான டிசைன்கள் கொண்ட செயற்கை நகைகளை வாங்கி மறுவிற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். 15,000-20,000 ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்கிவிடலாம்.
மாஸ்க்
கொரோனா பெருந்தொற்று பரவலால் மாஸ்க் அணிவது கட்டாயமாகிவிட்டது. இதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பலர் மாஸ்க் தயாரிப்பிற்கு மாறியுள்ளனர்.
10,000-20,000 ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலை எளிதாகத் தொடங்கிவிடலாம். 2019ம் ஆண்டில் 71.73 மில்லியன் டாலராக இருந்த இந்த சந்தை மதிப்பு 2027ம் ஆண்டில் 157.13 மில்லியன் டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக Allied Market Research அறிக்கை சுட்டிக்காட்டுவது குறிப்பிடத்தக்கது.
மெழுகுவர்த்தி / அலங்கார விளக்குகள்
வீட்டின் உட்புறச் சூழலை அழகுப்படுத்துவதில் மெழுகுவர்த்திகள், அலங்கார விளக்குகள் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் இவற்றிற்கான தேவை எப்போதும் இருந்து வருகிறது.
10,000 ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்கிவிடலாம். சொந்தமாக வீட்டிலேயே தயார் செய்தோ விற்பனையாளர்களிடமிருந்து மொத்தமாக வாங்கியோ விற்பனை செய்யலாம்.
பப்படம்
பப்படம் இந்திய உணவில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கும். சொந்தமாக தயாரிக்கும் செயல்முறையில் செலவு சற்று அதிகமாகும்.
இவற்றை மொத்த விற்பனையாளர்களிடம் வாங்கி மறுவிற்பனை செய்வதே சிறந்தது. குறைந்தபட்சம் 5,000-10,000 ரூபாய் முதலீட்டில் மின்வணிகம் மூலம் விற்பனை செய்து லாபம் ஈட்டலாம்.
ஊறுகாய்
ஒவ்வொரு வீட்டில் சமையலறையிலும் கண்டிப்பாக இருக்கும் ஒரு பொருள் என்றால் அது ஊறுகாய் மட்டுமே. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் பாரம்பரிய ஊறுகாய் வகைகள் கவனம் பெற்றுள்ளன.
10,000-15,000 ரூபாய் முதலீட்டில் சிறியளவில் ஊறுகாய் வணிகம் தொடங்கிவிடலாம்.
ஆர்கானிக் சோப்பு
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் சோப்பு. இந்தத் துறையில் பிரபமாகியிருக்கும் பெரிய பிராண்டுகளின் விலை அதிகம். குறைந்த விலையில் தரமான ஆர்கானிக் சோப்புகளை விற்பனை செய்தால் மக்கள் நிச்சயம் வாங்குவார்கள். அதுமட்டுமின்றி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் ஆர்கானிக் பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டி வருகின்றனர்.
ரசாயனங்கள் இல்லாத பொருட்களை விரும்பி வாங்குவோர் மத்தியில் இதுபோன்ற முன்னெடுப்பு நிச்சயம் வெற்றி பெறும். 10,000-15,000 ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்கிவிடமுடியும்.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா