அன்று மனிதக் கழிவுகளை அகற்றினார்; இன்று பத்மஸ்ரீ விருதாளர்!

வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களைத் துணிந்து எதிர்கொள்ள வயதோ நேரமோ முக்கியமில்லை என நிரூபித்துள்ளார் 42 வயது உஷா.

26th Mar 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களைத் துணிந்து எதிர்கொள்ள வயதோ நேரமோ முக்கியமில்லை. ராஜஸ்தானின் உஷா சௌமாரின் பயணம் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். இவருக்கு 42 வயதாகிறது.


இதற்கு முன்பு ஜெய்ப்பூரில் இருந்து 150 கி.மீ தொலையில் உள்ள அல்வார் என்கிற இவரது கிராமத்தில் தாழ்த்தப்பட்டவராகவே கருதப்பட்டார். ஏனெனில் இவர் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். இருப்பினும் இவர் அனைத்து தடைகளையும் துணிச்சலுடன் தகர்த்தெறிந்து ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கும் உந்துதலளிக்கும் நபராக உருவெடுத்துள்ளார்.


இவர் சிறப்பாக சமூகப் பணியாற்றியுள்ளார். சமூகப் புறக்கணிப்பிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொண்டதுடன் மற்றவர்களுக்கும் உதவியுள்ளார். மனிதக் கழிவுகளை அகற்றும் அவலமான நடைமுறையிலிருந்து வெளியேறியுள்ளார். இத்தகைய சாதனைகளுக்காக இவரது 42-வது வயதில் இந்திய அரசாங்கம் இவரை அங்கீகரித்துள்ளது. இந்த ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

1

உஷா இன்று பெண்களுக்கும் அல்வார் பகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தினருக்கும் நம்பிக்கையளிக்கிறார். இவர் பல ஆண்டுகளாக பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டு தீண்டத்தகாதவராகவே பார்க்கப்பட்டுள்ளார். இத்தகைய சமூக புறக்கணிப்புகளுக்கு எதிரான போராட்டம் நிறைந்த இவரது பயணம் எளிதாக இருக்கவில்லை.

ஏழு வயது முதல்…

“கழிப்பறைகளை சுத்தம் செய்வது மிகவும் அருவருப்பான பணி. வேறு வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் யார் இந்தப் பணியில் ஈடுபட விரும்புவார்கள்? இதனால் சமூகத்தில் உள்ள மற்றவர்கள் எங்களைப் புறக்கணிக்கின்றனர். எங்கள் சமூகத்துடன் ஒன்றிணைய மற்றவர்கள் விரும்புவதில்லை,” என்கிறார் உஷா.

முறையான பாதுகாப்பு அல்லது முன்னேற்பாடுகளின்றி மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றுவது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம். மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடைமுறைக்கு தடைவிதித்து சட்டம் இயற்றப்பட்டு பிணையில் வெளிவர முடியாத குற்றமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த நடைமுறை தொடர்கிறது.


இந்தியாவில் கல்வியும் சமூக விழிப்புணர்வும் இல்லாத பகுதிகளில் இளம் வயதிலேயே பலர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். உஷாவும் இதேபோல் இளம் வயதிலேயே ராஜஸ்தானின் பாரத்பூர் அருகே உள்ள தீக் என்கிற தனது சொந்த ஊரில் இந்தப் பணியில் ஈடுபட்டார்.

“நான் ஏழு வயது முதலே மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். என்னுடைய அம்மாவைத் தொடர்ந்து நானும் இந்தப் பணியில் ஈடுபட்டேன். எங்கள் சமூகத்தில் இந்தப் பணியைக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது. ஏனெனில் எங்களுக்குத் திருமணம் முடிந்தாலும்கூட மனிதக் கழிவுகளை அகற்றும் பணியை நாங்கள் தொடரவேண்டும்,” என்றார்.

இவர் சந்தித்த போராட்டங்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை. 10 வயதிருக்கும்போதே இவருக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டது. 14 வயதில் புகுந்த வீட்டினர் வசித்திருந்த ஆல்வார் பகுதிக்கு மாற்றலானார். இடம் மாறியது. குடும்பத் தலைவி ஆனார். இருப்பினும் சமூகத்தைப் பொறுத்தவரை இவரது நிலை மாறவில்லை.

“மக்கள் இன்றள`வும் எங்களை தீண்டத்தகாதவர்களாகவே கருதுகின்றனர்,” என்றார்.

டாக்டர் பிந்தேஷ்வர் பதக் உடனான சந்திப்பு

உஷா சுலப் இண்டர்நேஷனல் சோஷியல் சர்வீஸ் ஆர்கனைசேஷன் (SISSO) நிறுவனர் டாக்டர் பிந்தேஷ்வர் பதக்கை சந்தித்தது திருப்புமுனையாக அமைந்தது. காந்திய தத்துவத்தை நம்புபவரான டாக்டர் பதக் கடந்த ஐம்பதாண்டுகளில் மனிதக் கழிவுகளை அகற்றுவோரின் உரிமைகளுக்காக அயராது உழைத்தவர். இவரது முயற்சிகள் அனைத்துமே மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கு மறுவாழ்வளித்து திறன் பயிற்சியளித்து மாற்று வேலை வாய்ப்பினை வழங்கி சமூகத்தில் மரியாதைக் குரியவர்களாக மாற்றுவதற்கான முயற்சியாகும்.


2002-ம் ஆண்டு பதக் அல்வார் சென்றிருந்தார். அங்கு உஷாவையும் மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மற்ற பெண்களையும் சந்தித்தார்.

2

அவருடனான முதல் சந்திப்பு குறித்து உஷா கூறும்போது,

“நீங்கள் ஏன் மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் இன்னமும் ஈடுபட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். இதுவே எங்களது சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. என் அம்மா இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது முந்தைய தலைமுறையினரும் இந்தப் பணியை மேற்கொண்டனர். பாரம்பரியமாக எங்களது சமூகத்தினர் பல தலைமுறைகளாக இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்,” என்றார்.

மாறுபட்ட வாழ்க்கைமுறையை பின்பற்றுவது குறித்தும் மாற்று வருவாய் ஆதாரம் குறித்தும் உஷா கண்ட கனவானது ‘நயி திஷா’ (Nai Disha) மூலம் நனவானது. பதக் இந்த உள்ளூர் என்ஜிஓ-வை அமைத்தார். பதக்கின் முயற்சியில் SISSO மூத்த துணைத் தலைவர் டாக்டர் சுமன் சஹர் இணைந்துகொண்டு என்ஜிஓ-வின் செயல்பாடுகளையும் பெண்களுக்கு வழங்கப்படும் பயிற்சிக்கும் உதவுகிறார்.

புதிய தொடக்கம்

நயி திஷா உடன் உஷா இணைந்ததைக் கண்டு அவரது கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் அவரைப் பின்தொடர்ந்து புதிய திறன்களில் பயிற்சி பெற்றனர்.

3

அல்வார் பகுதியைச் சேர்ந்த பெண்கள் இன்று புதிய வேலை வாய்ப்புகளைப் பெற வழிகாட்டிய சுமன் கூறும்போது, “நயி திஷா முயற்சியின் மூலம் இந்தப் பெண்கள் ஊறுகாய், பப்படம், நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுப்பொருட்களைத் தயாரிக்கக் கற்றுக் கொண்டனர்,” என்றார்.

“தீண்டத்தகாதவராக உஷாவைக் கருதிய கிராமவாசிகள் இன்று அவர் தயாரிக்கும் உணவுப் பொருட்களை முன்வந்து வாங்குகின்றனர். இது அவரது வருவாயை அதிகரிக்கச் செய்துள்ளது,” என்றார்.

மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு உஷா ஒரு மாதத்திற்கு 250 ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டி வந்தார். இதைக் கொண்டு நிதித்தேவைகளை பூர்த்திசெய்து கொள்ள முடியாமல் போராடிய இவர் இன்று நிலையான வருவாய் ஈட்டுகிறார்.


அதுமட்டுமின்றி 2007-ம் ஆண்டு இவர் சுலப் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உஷா புதிய பொறுப்பேற்று மிகப்பெரிய அளவில் சமூக மாற்றம் ஏற்படுவதற்கு உந்துதலளித்து வருகிறார்.


ஆங்கில கட்டுரையாளர்: சுத்ரிஷ்னா கோஷ் | தமிழில்: ஸ்ரீவித்யா

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close