‘இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள்’ - பத்மஸ்ரீ விருது பெற்ற முகமது!
உரிமைக் கோரப்படாத 25,000 உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்த 87 வயது முகமது ஷரீஃப், கடந்த 27 ஆண்டுகளாக சாதி, மத வேறுபாடு பார்க்காமல் இறந்த உடல்களை அடக்கம் செய்கிறார்.
சமூகத்தின் வளர்ச்சிக்கும் பின் தங்கிய நிலையில் இருப்பவர்களின் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபடுபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் 82 வயதான முகமது ஷரீஃப் ஒருவர். இவர் ‘ஷரீஃப் சாச்சா’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் கடந்த 27 ஆண்டுகளாக இறந்த உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்.
உத்திரப்பிரதேசத்தில் இதுவரை உரிமை கோரப்படாத 25,000 உடல்களை முகமத் அடக்கம் செய்துள்ளார். ஃபைசாபாத் பகுதியைச் சேர்ந்த இவர் இருசக்கரங்களைப் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர் சாதி, மத வேறுபாடு பார்க்காமல் இறந்த உடல்களை அடக்கம் செய்கிறார். இறந்தவரின் மதத்தை அடிப்படையாகக் கொண்டு இறுதி சடங்குகளைச் செய்கிறார்.
'தி வீக்’ உடனான உரையாடலில் அவர் கூறும்போது,
“இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள்,” என்கிறார்.
பல வருடங்களுக்கு முன்பு இவரது மகன் உயிரிழந்துள்ளார். அவரது உடல் ரயில் தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அப்போதிருந்து உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் உரிமை கோரப்படாத உடல்களை முறையாக அடக்கம் செய்யவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
அப்போதிருந்து இவர் தனது சைக்கிள் அல்லது தள்ளுவண்டியில் இறந்த உடல்களை இடுகாட்டிற்கு சுமந்து சென்று இறுதி சடங்குகளைச் செய்து வருகிறார். இவரது செயலைக் கண்டு மக்கள் இவரை பைத்தியம் என்கின்றனர். ஆனால் சுற்றியிருப்பவர்களின் இதுபோன்ற கருத்துக்கள் அவரது பணிக்கு இடையூறாக இருக்கவில்லை. தொடர்ந்து இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார்.
முகமது தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களைப் பார்வையிட்டு உரிமை கோரப்படாத உடல்களை ஆராய்ந்து வருகிறார். 72 மணி நேரம் வரை உடல்களை யாரும் உரிமை கோராத நிலையில் அரசு அதிகாரிகள் அந்த உடல்களுக்கு இறுதி சடங்குகளைச் செய்ய முகமதை அணுகுவதாக ‘தி லாஜிக்கல் இண்டியன்’ குறிப்பிடுகின்றனர். பத்மஸ்ரீ விருது குறித்து கேட்டபோது,
“காவல் அதிகாரி ஒருவர் உடனடியாக என்னை மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அலுவலகம் வருமாறு அழைத்தார். நான் என்ன செய்தேன் என்று கேட்டேன். அவர் பதிலளிக்கவில்லை. என்னுடைய சைக்கிளை எடுக்கவும் அனுமதிக்கவில்லை. மாஜிஸ்ட்ரேட் அலுவலகத்தில் எனக்கு ரோஜாப்பூக்கள் கொடுக்கப்பட்டது. மாவட்ட மாஜிஸ்ட்ரேட் என்னிடம் விருது குறித்து தெரிவித்தார்,” என்று ’தி வீக்’ தெரிவிக்கிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA