கணித மேதை சகுந்தலா தேவியின் சாதனையை முறியடித்த ஹைதராபாத் இளைஞர்!
ஹைதராபாத்தைச் சேர்ந்த 21 வயது நீலகண்ட பானு பிரகாஷ் லண்டனில் உள்ள மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் (MSO) போட்டியில் இந்தியாவிலேயே முதல் முறையாக மனக் கணக்கீடு உலக சாம்பியன் விருது வென்றுள்ளார்.
மறைந்த கணித மேதை சகுந்தலா தேவிக்கு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் சமீபத்தில் உலக சாதனைக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இவருக்கு 'அதிவேக கணிக்கிடும் மனிதர்’ என்கிற கின்னஸ் டைட்டில் வழங்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 21 வயதான நீலகண்ட பானு பிரகாஷும் அதிவேக கணக்கிடும் மனிதராக உருவாகியுள்ளார். செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி பட்டதாரியான பானு பிரகாஷ் லண்டனில் உள்ள மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் (MSO) போட்டியில் இந்தியாவிலேயே முதல் முறையாக மனக் கணக்கீடு உலக சாம்பியன் விருது வென்றுள்ளார்.
“13 நாடுகளில் இருந்து 29 போட்டியாளர்களுடன் நான் போட்டியிட்டேன். இந்த போட்டியாளர்கள் 57 வயதிற்கு உட்பட்டவர்கள். இவர்களுடன் போட்டியிட்டு 65 புள்ளிகள் வித்தியாசத்தில் நான் தங்கப் பதக்கம் வென்றுள்ளேன். நான் வேகமாகக் கணக்கிடுவதைக் கண்டு நடுவர்கள் வாயடைத்துவிட்டனர். என்னுடைய கணக்கீடு துல்லியமாக இருப்பதை உறுதிசெய்ய கூடுதலாக கணக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டேன்,” என்று ஏஎன்ஐ இடம் நீலகண்ட பானு பிரகாஷ் தெரிவித்தார்.
“உலகின் அதிவேக கணக்கிடும் மனிதர் என்பதற்காக நான்கு உலக சாதனைகளையும் 50 லிம்கா சாதனைகளையும் வென்றுள்ளேன். கேல்குலேட்டரைக் காட்டிலும் விரைவாக என் மூளை கணக்கிடும். ஸ்காட் ஃப்ளான்ஸ்பர்க், சகுந்தலா தேவி போன்ற கணித மேதைகளின் சாதனைகளை முறியடிப்பது நாட்டிற்கே பெருமை சேர்ப்பது போன்றது,” என்றார்.
மிண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் (MSO) என்பது ஒவ்வொரு ஆண்டும் லண்டனில் நடைபெறும் மூளைத்திறன் தொடர்புடைய சர்வதேச போட்டி. இந்த ஆண்டு யூகே, ஜெர்மனி, யூஏஈ, ஃப்ரான்ஸ், கிரீஸ், லெபனான் போன்ற நாடுகளில் இருந்து 30 போட்டியாளர்கள் மெய்நிகர் வடிவில் பங்கேற்றனர்.
“உலகின் அதிவேக கணக்கிடும் மனிதர்” என்கிற பட்டத்தை வென்றதற்காகவும் சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் மனக் கணக்கீடு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றதற்காகவும் 21 வயது நீலகண்ட பானு பிரகாஷை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ட்விட்டர் மூலம் பாராட்டியுள்ளார்.
“இவர் இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளார். அவரது வருங்காலம் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்,” என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
பானு பிரகாஷ் Vision Math என்கிற முயற்சியைத் தொடங்க உள்ளதாக நியூஸ்18 தெரிவித்துள்ளது. மில்லியன் கணக்கான இந்தியக் குழந்தைகளைச் சென்றடைந்து கணிதப் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம். இந்தியாவை உலகளவில் பெருமைப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி இந்த முயற்சியை ஊக்குவிப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கட்டுரை: THINK CHANGE INDIA