காரைக்கால் ‘கராத்தே கிட்ஸ்’ - 9 வயதில் உலகச் சாதனை படைத்த இரட்டையர்கள்!
6 - 9 வயது வரையிலான கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கி உலகச் சாதனை படைத்துள்ள உலகின் முதல் இரட்டையர்கள் இவர்கள்தான்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்தவர் முருகானந்தம். அவரது மனைவி பெயர் பிரியா. இந்தத் தம்பதிக்கு ஒன்பது வருடங்களுக்கு முன்பு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அதில் ஆண் குழந்தைக்கு ஸ்ரீவிசாகன் என்றும், பெண் குழந்தைக்கு ஸ்ரீஹரிணி என்றும் அவர்கள் பெயர் வைத்தனர்.
முருகானந்தத்திற்கு சிறு வயது முதலே விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். எனவே தான் சாதிக்க முடியாததை தன் குழந்தைகள் மூலம் சாதிக்க நினைத்தார். பிறகென்ன, மூன்று வயதில் இருந்தே இரண்டு குழந்தைகளையும் பயிற்சிகளில் சேர்த்து விட்டார்.
ஸ்ரீவிசாகனும் சரி, ஸ்ரீஹரிணியும் சரி சிறுவயதிலேயே துறுதுறுவென இருந்ததால், முதலில் நீச்சல் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அது அவர்களுக்கான துறையல்ல என்பது பிறகுதான் தெரிந்துள்ளது. இதனால் அவர்களை இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியில் கராத்தே வகுப்புக்கு அனுப்ப ஆரம்பித்தார் முருகானந்தம்.
“3 வயசுலிருந்தே ரெண்டு பேரும் கராத்தே கிளாசுக்குப் போறாங்க. கராத்தேவை நல்லா கத்துகிட்டு இன்னைக்கு உலகிலேயே குறைந்த வயதில் பிளாக் பெல்ட் வாங்கிப் பெருமை சேர்த்திருக்காங்க. இதைப் பார்க்கிறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு, கராத்தேயுடன் ஸ்ரீவிசாகன் செஸ் கிளாசுக்கும் போறான். அதுபோல் ஸ்ரீஹரிணி நல்லா ஓவியம் வரைவாள். அத்துடன் கட்டுரை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்’’ என்கிறார் சாதனை இரட்டையர் களின் அம்மா பிரியா.
இரட்டையர்களின் சாதனைக்கு அவர்களது பெற்றோரின் சரியான திட்டமிடலும் ஒரு காரணம். இருவரும் குழந்தைகளின் படிப்பு மற்றும் பயிற்சிகளை பங்கிட்டுக் கொண்டு அவர்களை சரியாக அதில் வழிகாட்டியுள்ளனர். இதனாலேயே அக்குழந்தைகளும் குழப்பமில்லாமல் படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி இன்று வெற்றியாளர்கள் ஆகியுள்ளனர்.
‘‘குழந்தைகளின் கராத்தே பயிற்சிக்கான பொறுப்பு என்னுடையது. அவர்களின் பள்ளிப் படிப்புக்கான பொறுப்பு என் மனைவியுடையதுன்னு பிரிச்சிக்கிட்டோம். தினமும் அதிகாலை 5.00 மணிக்கு எழுந்திருச்சி, 5.30 மணிக்கு கராத்தே கிளாஸுக்குப் போயிடுவாங்க. இரண்டு மணிநேரப் பயிற்சிக்குப்பின் வீடு திரும்பியவுடன் ஸ்கூலுக்குப் போறதுக்கான எல்லா ஏற்பாடும் செஞ்சி வெச்சுருப்போம். ரெண்டு பேருமே ரொம்ப நல்லா படிக்குறாங்க. படிப்புடன், ஸ்கூலில் எந்தப் போட்டி நடந்தாலும் கலந்துகிட்டுப் பரிசு வாங்கிடுவாங்க.”
”கராத்தே போட்டிக்கு வெளியூருக்குப் போகிறபோது வயசு மற்றும் எடைக்கு ஏற்ற மாதிரிதான் போட்டியாளர்களும் இருப்பாங்க. சில நேரத்துல இவங்களைவிட வயசுல பெரியவங்க போட்டியாளரா கலந்துக் கிட்டாலும் அசராமப் போட்டியிட்டு ஜெயிப்பாங்க,” என்கிறார் அப்பா முருகானந்தம்.
காரைக்கால் குட்ஷெப்பர்ட் மேல்நிலை பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார்கள் ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணியும். கராத்தே மற்றும் படிப்பு மட்டுமின்றி தினமும் யோகா செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சின்ன வயதில் இப்படி அந்தப் பயிற்சி, இந்தப் பயிற்சி, படிப்பு என இருப்பதால், அவர்களுக்கு பொழுதுபோக்கே இருக்காதா என நீங்கள் சந்தேகப்பட வேண்டாம். அதற்கும் நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள் இந்த இரட்டையர்கள். கராத்தே பிடிக்கும் என்பதால், திரைப்படங்களிலும் ஆக்ஷன் படங்கள் தான் இவர்களது விருப்பமாம்.
குழந்தைகளின் கராத்தே மாஸ்டர் குமாரிடம் பேசியபோது,
‘‘ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி இருவரும் 6 வருடமா என்கிட்ட கராத்தே கத்துக்குறாங்க. எப்போதும் சரியான நேரத்துக்கு வந்துடுவாங்க. இந்த வயசுல பிளாக் பெல்ட் வாங்குவது உண்மையிலேயே பெரிய விஷயம். பல மாநிலங்களிலும் நாடுகளிலும் நடந்தபோட்டியில் இருவரும் ஜெயிச்சிருக்காங்க,” என பெருமையுடன் கூறுகிறார்.
இந்தச் சின்ன வயதிலேயே சாதனை புரிந்த உங்களின் வருங்காலக் கனவுதான் என்ன? எனக் கேட்டால் டக்கென இரட்டையர்கள் ஆளுக்கொரு காரணத்தை தெளிவாகக் கூறுகிறார்கள்.
‘‘ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் வாங்கணும், ஐ.ஏ.எஸ் படிச்சி கலெக்டராகணும்,’’ என்கிறான் ஸ்ரீவிசாகன். ஸ்ரீஹரிணியோ, ‘‘நானும் ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் வாங்கணும், எங்கள் தாத்தா இதய நோயால திடீர்ன்னு இறந்துட்டாங்க. அதனால டாக்டருக்குப் படிச்சி, இதயநோய் நிபுணர் ஆகி எல்லோரையும் காப்பாத்தணும்,’’ என்கிறார்.
இரட்டையர்களின் இந்த சாதனைகளுக்கு உறுதுணையாக இருப்பது அவர்களது பெற்றோர் தான். அப்படி இருக்கையில் அவர்களும் தங்கள் குழந்தைகளைப் பற்றி கனவுகள் வைத்திருப்பார்களே அது என்னவென்று விசாரித்தோம்.
“இந்தப் புள்ளைங்க ரெண்டுபேரும் ஒலிம்பிக் போட்டியில கலந்துகிட்டு இந்தியாவுக்குத் தங்க மெடல் வாங்கித் தரணும் என்பதுதான் எங்களோட ஒரே லட்சியம்,’’ என்கின்றனர் முருகானந்தமும், பிரியாவும்.
கராத்தே மட்டுமின்றி சிலம்பம், யோகா, கிக் பாக்ஸிங், குபுடோ, டேக்வாண்டோ என எண்னற்ற தற்காப்புக் கலைகளை கற்று வருகின்றனர் இந்த இரட்டையர்கள். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி உலகிலேயே இரட்டையர்கள் முதன்முதலாக 9 வயதுக்குள் கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கியவர்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளனர் இந்த இரட்டையர்கள்.
உலகச் சாதனை படைத்த இந்த இரட்டையர்களை புதுச்சேரி ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளனர். மக்கள் தொலைக்காட்சி சார்பில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் கையால் சாதனை குழந்தைகள் விருது பெற்றுள்ளனர் இந்த இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.