Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

’நானும் ஒரு விவசாயி’ திட்டம் மூலம் கின்னஸ் சாதனை- நடிகர் டூ இயற்கை ஆர்வலர் ஆரி

’நானும் ஒரு விவசாயி’ திட்டம் மூலம் கின்னஸ் சாதனை- நடிகர் டூ இயற்கை ஆர்வலர் ஆரி

Wednesday August 30, 2017 , 4 min Read

"

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் களத்தில் நின்று போராடிய நடிகர் ஆரி, இப்போது விவசாயத்துக்காகக் களமிறங்கியிருக்கிறார்.

\"அனைவரும் விவசாயிகளாக மாற வேண்டும். தனக்குத் தேவையான உணவை ஒவ்வொருவரும் தானே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்,'' என்கிறார் ஆரி.

அதன் முதல் விதையாக `மாறுவோம்... மாற்றுவோம்!' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இந்த அமைப்பின் முதல் முனைப்பாக ‘நானும் ஒரு விவசாயி' என்ற திட்டத்தை நடிகர் கமல்ஹாசனை வைத்து சமீபத்தில் தொடங்கிவைத்து செயல்வடிவம் தந்துள்ளார் ஆரி.

\"பாலம்

பாலம் கல்யாண சுந்தரம் மற்றும் நடிகர் கமல்ஹாசன் உடன் நடிகர் ஆரி


‘‘விவசாயம் அறியாதோரையும் விவசாயியாக மாற்றும் முயற்சி தான் இது. உலகளவில் இந்தியா ஒரு விவசாய நாடு ஆகும். உழவும், மருத்துவமும் தான் நமது ஆதித் தொழில். உணவே மருந்துனு வாழ்ந்த மக்கள் தமிழ் மக்கள். விதைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் விவசாயத்திற்கு அடுத்த தலைமுறை தரும் ஆதரவாகவும். கின்னஸ் சாதனை பதிவாகவும் துவங்கியுள்ளோம்,’’ என்கிறார்.

இளைஞர்கள் 2700 பேருக்கும் மேல் கலந்துகொண்டு, 5366 நாட்டு கத்தரி செடிகளை விளை நிலங்களில் பயிர் செய்து கின்னஸ் சாதனையை, ஆரி தலைமையில் செய்துள்ளனர். இதே போன்று 2017 பேரை வைத்து சீனாவில் நடைபெற்றது. அதை முறியடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

திண்டிவனம் அடுத்து உள்ள ஆவணிப்பூர் என்ற கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தில் இந்த சாதனையை வெற்றிகரமாகச் செய்துள்ளனர். தொடர்ந்து பேசிய அவர்,

‘‘கல்வி முறை சார்ந்து நாம ஓடிக்கிட்டு இருந்ததால நமக்கான உணவு சார்ந்த வாழ்க்கையை முழுசா மறந்துட்டோம் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘சீனாவில் ஒரே இடத்தில் பாரம்பர்ய விதைகள் மூலம் உருவான நாற்றுகளை மக்கள் ஒன்று கூடி நட்டார்கள்’னு ஒரு செய்தியைப் படிச்சேன். சீனா அரசாங்கமே முன்னெடுத்த நடத்திய நிகழ்வு அது. ஆனா நம்ம நாட்டுல, விவசாயிகள் தற்கொலை பண்ணிக்கிறாங்க... பட்டினியா கிடந்து டெல்லியில போராடிக்கிட்டிருக்காங்க.

\"கின்னஸ்

கின்னஸ் சாதனை படைத்த தினம்


விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சனைகளை காதுகொடுத்துக் கேட்டால்தான் அதன் வலி வேதனை தெரியும். இயற்கை விவசாயம் செய்ய எல்லோருக்கும் ஆசைதான். ஆனா, செயற்கை முறையைத்தான் அரசாங்கம் ஊக்கப்படுத்துகிறது . ‘இது விவசாயத்துக்குப் பண்ற துரோகம். எல்லாம் தெரிஞ்சும், வேற வழியில்லாமல்தான் விவசாயம் பார்க்கிறோம்’கிற விவசாயி வாழ்ந்து வருகிறார்கள் என்று மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்தார் ஆரி.

“இந்திய அரசு செயற்கை விதைகளுக்குக் தரும் முக்கியத்துவத்தை இயற்கை விதைகளுக்குத் தருவதில்லை. பசுமை புரட்சி என்ற தவறான திட்டத்தை ஊக்கப்படுத்துகிறது. பல நூறு வகையான கத்திரிக்காய் இருக்குனு சொல்றாங்க. இப்போ ரெண்டு மூணு வகைகள்தான் இருக்கு. சாதாரணமா விளைஞ்சுக்கிட்டிருந்த பப்பாளி, முருங்கை, மரங்களை இப்போ பார்க்க முடியுறதில்லை.”

80 சதவிகித நாட்டு விதைகள் அழிஞ்சுப்போச்சு. சில விவசாயிகள், பாரம்பர்ய விதைகளை பாதுகாத்து வெச்சிருக்காங்க. ஆனா, `நாட்டு விதைகளைப் பாதுகாப்பது தவறு'னு அரசு ஒருபக்கம் சொல்லுது.

“உலகத்துலேயே பெரிய கார்ப்ரேட் மாஃபியாக்கள், மருத்துவமும், உணவும்தான். பி.டி கத்திரிக்காய்க்கு எதிரா போராடின மாதிரி, நாட்டு விதைகளுக்கு ஆதரவா வேகமா இறங்கியாகணும் . செயற்கை விவசாயத்தில் விதை, உரம் பூச்சிக்கொல்லி மருந்து, விதைப்புக்குப் புது விதைகள்ணு... எல்லாமே சந்தை சுரண்டல் சூழ்ச்சியிலேயே இயங்கிக்கிட்டிருக்கு. தவிர, செயற்கை விதைகள் மூலமா விளைஞ்ச உணவுகளைச் சாப்பிட்டா உடல் குப்பையாகி நோய்ல தான் விழுறோம் என்று தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

எல்லாமே ஸ்லோ பாயிசன். கடைக்குப் போய் கண்ணாடிப் பெட்டியில இருக்கிற ஆப்பிளை வாங்கி வெட்டாம நாலு நாளைக்கு வெச்சுப்பாருங்க, பளபளப்பு மாறாம அப்படியே இருக்கும். அதேப்போல,

“வெள்ளை சர்க்கரை நல்லது இல்லை, கல் உப்பை பயன்படுத்துங்க, மைதா மாவைச் சாப்பிடாதீங்க!’னு இப்போதானே விழிப்புணர்வு மெல்ல பரவுது. இது ஆரம்பத்திலிருந்தே ஆபத்தானதுதான்னு மக்களுக்குப் தெரியபடுத்தாம நவீன வாழ்கையினு பழக்கப்படுத்திட்டாங்க.”

அரசாங்கம் அலட்சியமா இருக்கும்னு நினைக்கலை. பிளாஸ்டிக், ஆபத்துனு தெரியும். அந்தப் பிளாஸ்டிக்குக்கான ஒழுங்குமுறை ஆணையம் இது வரைக்கும் அமைக்கவில்லை. அரசாங்கம்தான் அப்படி இருக்குன்னா, நாமளும் எல்லாத்தையும் பிளாஸ்டிக் கவர்ல வாங்கிட்டு வர்றதையே கெளரவமா பார்க்கிறோம். கடை வீதிக்கு செல்கின்றோம் என்றால் பை எடுத்து சென்றார் என் அம்மா. ஆனால் இப்போது நவீன வாழ்க்கை என்று தவறு செய்கின்றோம். 

\"விதைகளை

விதைகளை விதைக்கும் ஆர்வலர்கள்


பக்கத்து மாநிலம் கேரளாவுல மைதாவைத் தடை பண்ணிட்டாங்க. தமிழ்நாட்டுல கண்டுக்காம இருக்கோம். விவசாயிக்கும், உணவுப் பிரச்னைக்கும் ஆதரவு கொடுக்க, தெருவுக்கு வர வேணாம். உங்க வீட்டு கிச்சன்ல தொடங்குங்கனு சொல்றதுக்குத்தான், இந்த முயற்சி என்றார்.

”இயற்கையான முறையில் விளைஞ்ச உணவுகளுக்கு மாறுங்க. வெள்ளை சர்க்கரையை ஒதுக்கிட்டு, நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்துங்க. மாடித்தோட்டம் மூலமாவோ, நிலங்கள் மூலமாவோ... நமக்கான காய்கறிகளை நாமளே உற்பத்தி பண்ணிக்கிற முறையைக் கத்துக்கோங்க. இதெல்லாம் பண்ணாலே விவசாயிகளுக்கு ஆதரவாகவும் உணவு அரசியலுக்கு எதிராகவும் போராட ஆரம்பிச்சுட்டீங்கனு அர்த்தம்!” என்கிறார் ஆரி.


மைதாவுல செஞ்ச பீட்சா, பர்கரைத்தான் `ஸ்டேட்டஸுக்குத் தகுந்த உணவு'னு நம்புறோம். பூச்சி இருந்தா காய்கறிகளை வாங்க மாட்டேங்கிறோம். நம்ம விவசாய முறையே `பூச்சி விரட்டி'தானே தவிர, `பூச்சிக்கொல்லி' அல்லனு நமக்குப் புரிய மாட்டேங்குது.

நான் ஒரு ஃபிட்னெஸ் டிரெய்னர். உணவு விஷயத்துல சரியாகவும் அக்கறையாவும் இருக்கிறவன். சிறு தானிய உணவு 100 சதவீதம் உடலுக்கு ஏற்ற உணவு. நாட்டுப் பப்பாளி விதைகளை ஆன்லைனில் 100 கிராம் 2,500 ரூபாய்க்கு வித்துக்கிட்டிருக்காங்க. என்று கவலையாக கூறி வருத்தப் படுகிறார் ஆரி.

‘‘இந்தியா மேல பல நாடுகள் `ஆர்கானிக் வார்' தொடுத்திருக்கிறதா சொல்றாங்க. யோசிச்சுப்பார்த்தா உண்மையா இருக்குமோனுதான் தோணுது. ஏன்னா, ‘கடலை எண்ணெய் உடலுக்கு நல்லதல்ல’னு சொன்ன கம்பெனிகள்தான், இன்று சாக்லேட்ல கடலையைப் புகுத்தி, ‘உடலுக்கு ஆற்றல் தரும் கடலை இருக்கிறது’னு விளம்பரம் பண்றாங்க. ‘குழந்தைகளுக்கு கோக் கொடுக்கக் கூடாது'னு தயாரிப்பு விதியில் எழுதியிருந்தாலும், அவங்க காட்டுற விளம்பரங்கள்ல அதைப் பதிவு பண்றதில்லை. 

கடை வீதி, ஷாப்பிங் மால், ஹோட்டலுக்குப் போனா விளம்பரங்களில் சொல்ற உணவுப் பண்டங்களை மட்டும்தான் `சாய்ஸ்'ல வெச்சிருக்காங்க. வாங்கிச் சாப்பிடும் நாமதான் `சாய்ஸ்' வைக்கணுமே தவிர, விற்கும் அவங்க வைக்கக் கூடாது.

இதை எல்லாம் இது வரைக்கும் தட்டி கேட்கலை, இனியாவது கேட்போமே?\" என்ற கேல்வியையும் எழுப்புகிறார் ஆரி. ‘மண்புழு வளர்ப்புத் தந்தை'னு அழைக்கப்படும் டாக்டர்.சுல்தான் ஹமீது இஸ்மாயில், தான் ‘மாறுவோம் மாற்றுவோம்’ க்கு வழிகாட்டி. அவரோட ஆலோசனைகள் பெரிய பலத்தைக் கொடுத்திருக்கு.

‘இனி கொஞ்சமாவது விவசாயத்தைக் கற்றுக்கொள்வேன். விவசாயிகளோட பிரச்னைகளைப் புரிந்துகொள்வேன்’னு ஃபேஸ்புக், வாட்ஸ்அப்’ல மட்டுமே பிரசாரம் பண்ணாம, ஒவ்வொரு நாளும் முயன்றுகொண்டே இருக்கணும். ஏன்னா, ஒவ்வொரு நாளும் நாம சாப்பிட்டுக்கிட்டுதான் இருக்கோம்!”

இந்த விஷயத்தில் “ஏன் உங்களுக்கு இந்த வேலை?” நடிப்ப மட்டும் பாருங்கனு, என்பதுதான் ஆரி அதிகம் எதிர்கொண்ட கேள்வி. ‘‘இப்படியெல்லாம் பேசிக்கிட்டிருந்தா, நடிக்க யாரும் கூப்பிட மாட்டாங்க'னுகூட பலர் அறிவுரை சொல்றாங்க.

சாப்பிடுற உணவு ஆரோக்கியமா இருந்தால்தான் வாழ முடியும். நடிகரோ, பிரதமரோ, சாமானிய மனிதனோ.. சம்பாதிக்கிறது அடிப்படை தேவைக்காகதான். உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம். முதல் தேவைக்கான புரிதலை உருவாக்கும் முயற்சி தான் இது,” என்று முடித்து நம் மனதில் ஆழ சிந்தனையை விட்டுச்சென்று விடைப் பெற்றார் ஆரோக்கியத்தின் உண்மை புரிந்த ஆரி. 

கட்டுரையாளர்: வெற்றிடம்

"