அங்கன்வாடிகளை சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி மையங்களாக மாற்றிய ஐஏஎஸ் அதிகாரி!
அங்கன்வாடி அமைப்பை குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, சுகாதார பராமரிப்பு, ஊட்டச்சத்து ஆகியவை கிடைக்கக்கூடிய இடமாக மாற்றியமைத்துள்ளார் இவர்.
நாட்டின் வளர்ச்சியில் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டு மக்கள் வளர்ச்சியை நோக்கி செயல்படுவதற்கு முக்கியத் துறையான சுகாதாரப் பராமரிப்புப் பிரிவு மேம்படவேண்டியது அவசியமாகிறது.
ஜார்கண்ட் ஐஏஎஸ் அதிகாரியான ஆதித்யா ரஞ்சன் ஜார்கண்டில் உள்ள சிங்பம் மாவட்டத்தில் பணியாளர்களுடன் இணைந்து சுகாதாரம் மற்றும் கல்வி அமைப்பை மேம்படுத்தி வருகிறார்.
மாவட்ட வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்ட ஆதித்யா ரஞ்சன் அங்கன்வாடி அமைப்பை குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, ஊட்டச்சத்து ஆகியவை கிடைக்கக்கூடிய இடமாக மாற்றியமைத்துள்ளார்.
ஆதித்யா Titli என்கிற என்ஜிஓ உடன் இணைந்து இதை சாத்தியப்படுத்தியுள்ளார். இந்த என்ஜிஓ பெண்களுக்குப் பயிற்சியளித்துள்ளது. தற்போது இந்த மையங்களில் தொடர் சுகாதார பராமரிப்பு பரிசோதனைகள் நடைபெறுகிறது. இலவசமாக மருந்துகளும் வழங்கப்படுகிறது.
’தி லாஜிக்கல் இந்தியன்’ உடனான உரையாடலில் ஆதித்யா கூறும்போது,
“அரசுத் துறை செயல்பாடுகள் துரிதமாக இருப்பதில்லை. எனவே எந்த ஒரு புதிய முயற்சியையும் நடைமுறைப்படுத்தி அதன் விளைவுகளை ஆய்வு செய்வதற்கு அதிக அவகாசம் எடுக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளோம். உங்களது பணி மூலம் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடிவது மிகுந்த திருப்தியளிக்கக்கூடியது. இந்த உணர்விற்கு ஈடு இணையே இல்லை. இருப்பினும் புதிய அங்கன்வாடி மையங்களைத் திறக்கும்போது அதிக முதலீடு தேவைப்படும். வெற்றிகரமாக செயல்படுத்தக்கூடிய இத்தகைய திட்டங்களுக்கு மாநில அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நம்பிகிறேன்,” என்றார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இதேபோன்று சுமார் 1,000 அங்கன்வாடி மையங்களை மாவட்டம் முழுவதும் உருவாக்க விரும்புகிறார் ஆதித்யா.
பொறியாளராக இருந்த இந்த ஐஏஎஸ் அதிகாரி ஒவ்வொரு மாணவரும் கணிணி பயிற்சி எடுக்க மாவட்ட இ-கவர்னன்ஸ் சொசைட்டி கணிணி பயிற்சித் திட்டம் (DeGS) தொடங்கினார். இந்தத் திட்டத்தில் கணிணியின் அடிப்படைகள் முழுவதையும் உள்ளடக்கிய 32 தொகுதிகள் இரண்டு மாத பயிற்சியில் வழங்கப்படும். ஏற்கெனவெ இத்திட்டத்தின்கீழ் 1,700 மாணவர்கள் பலனடைந்துள்ளனர்.
கல்வி கற்றவாறே கணிதம் மற்றும் அறிவியல் மீது ஆர்வம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ‘வொண்டர் ஆன் வீல்ஸ்’ திட்டத்தையும் இவர் அறிமுகப்படுத்தியுள்ளார். கட்டமைப்பு செலவுகளை சமாளிக்க ஆதித்யா ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் மாணவர்களைச் சென்றடைய உதவும் அகையில் ஒரு வேன் மூலம் இந்த முயற்சியை மேற்கொண்டார். இதுவரை சக்ரதார்பூரில் உள்ள சதர் பகுதியில் 30 பள்ளிகளை இந்த முயற்சி சென்றடைந்துள்ளது.
2015-ம் ஆண்டு அகில இந்திய அளவில் 99-வது ரேங்க் எடுத்து யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக ‘ஹியூமன்ஸ் ஆஃப் ஜார்கண்ட்’ உடனான உரையாடலில் ஆதித்யா குறிப்பிட்டுள்ளார்.
“அதிகாரத்தில் இருப்பவர்கள் பல்வேறு சிறு பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வுகாணலாம். ஒரு சாமானிய மனிதனாக எப்போதும் நான் இதுகுறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தேன். இருப்பினும் இத்தகைய சிறு பிரச்சனைகள் எதற்கும் தீர்வுகாணப்படுவதில்லை. எனவே மாற்றம் ஏற்படுவதற்காக காத்துக்கொண்டிருக்காமல் நானே மாற்றத்தை ஏற்படுத்தத் தீர்மானித்து யுபிஎஸ்சி தேர்விற்கு ஆயத்தமாகி தேர்ச்சியும் பெற்றேன்,” என்றார்.
கட்டுரை: THINK CHANGE INDIA