ஆறு மாதங்களில் 13 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றியுள்ள ஐஏஎஸ் அதிகாரி!
இந்தூர் நகராட்சி ஆணையரான ஆஷிஷ் சிங் குறைந்த செலவில், குறைவான நேரத்தில், கழிவுகள் நிரப்பப்படும் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியில் குவிந்திருந்த கழிவுகளை அகற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
மறுசுழற்சி முறையை பின்பற்றுதலாகட்டும், கழிவுகள் திறம்பட அகற்றப்படுவதாகட்டும் இந்தியா தொடர்ந்து கழிவுகள் தொடர்பான பிரச்சனைகளோடு போராடி வருகிறது. அரசாங்கமும் மக்களும் சூழலைப் புரிந்துகொண்டு கழிவு மேலாண்மையைக் கையாள புதுமையான வழிமுறைகளை எடுத்து வருகின்றன. இதற்கு சிறந்த உதாரணம் இந்தூர் நகராட்சி ஆணையர் ஆஷிஷ் சிங்.
இந்தூரின் தேவ்குராடியா பகுதியில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை நிரப்பும் இடம் பார்ப்பதற்கு மிகவும் மோசமாக காட்சியளித்தது. 2017-ம் ஆண்டில் நடந்த Swachh Survekshan ஆய்வின் அடிப்படையில் இது சுத்தமான நகரமாக போற்றப்பட்டாலும் இங்கு பல ஆண்டுகளாக குவிந்து கிடக்கும் துர்நாற்றம் வீசும் கழிவுகள் தொடர்ந்து அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் பிரச்சனையாகவே இருந்து வந்தது.
ஆனால் ஆறு மாத காலங்களில், ஐஏஎஸ் அதிகாரியான ஆஷிஷ் சிங் 13 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகளை அகற்றி 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கழிவுகள் நிரப்பப்படும் இடத்தை 400 கோடி ரூபாய் மதிப்புள்ள பகுதியாக மீட்டெடுத்துள்ளார். Efforts for Good உடனான நேர்காணலில் அவர் குறிப்பிடுகையில்,
”நான் இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து எங்களிடம் உள்ள வளங்களைக் கொண்டே செயல்படத் தீர்மானித்தேன். இந்த இயந்திரங்களைக் கொண்டு இரண்டு ஷிப்டுகளாக செயல்பட்டு ஆறு மாதங்களில் பணியை நிறைவு செய்தோம். இந்த ஒட்டுமொத்த செயல்முறைக்கும் 10 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே செலவிட்டுள்ளோம் என்பதே இதில் சுவாரஸ்யமளிக்கும் விஷயம் ஆகும்,” என்றார்.
2018-ம் ஆண்டில் ஆஷிஷ் சிங் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டதற்கு முன்பு இரண்டு ஆண்டுகளில் இரண்டு லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் மட்டுமே அகற்றப்பட்டது. இதற்கு முன்பு கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் தனியார் ஒப்பந்ததாரர்களை இணைத்துக்கொண்டே மேற்கொள்ளப்பட்டதால் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்நகரம் 65 கோடி ரூபாய் செலவிட நேர்ந்திருக்கும் என ’தி க்விண்ட்’ தெரிவிக்கிறது.
அப்படியானால் இவருக்கு இந்த வெற்றி எப்படி சாத்தியமானது?
இவரது தலைமையில் இந்த நகரில் பயோமைனிங் அல்லது பயோரெமிடியேஷன் முறைகள் செயல்படுத்தப்பட்டன. இந்த செயல்முறையில் பயன்படுத்தத்தக்க மண் மற்றும் பேப்பர், துணி, ப்ளாஸ்டிக் போன்ற மறுசுழற்சிக்கு உகந்த பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டன. பின்னர் மறுசுழற்சிக்கு உகந்த பொருட்கள் குவியலாக மீட்டெடுக்கப்பட்டது.
பாலிதீன் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு சாலை கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டது. மற்ற சிறு துகள்கள் கட்டிடங்களுக்கான புதிய கட்டுமானப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. தற்போது கழிவுகள் மொத்தமாக அகற்றப்பட்ட அந்த நிலப்பகுதி கோல்ஃப் மைதானமாக மாற்றப்பட்டுள்ளது.
கட்டுரை : THINK CHANGE INDIA