10, 12ம் வகுப்பு மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை’ - மார்க் ஷீட்களை பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள்!

மாணவர்களுக்கு மதிப்பெண்களை கடந்து வெற்றிக்கான பாதை விலாசமாக காத்திருப்பதை உணர்த்தும் வகையில் சில ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.

10, 12ம் வகுப்பு மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை’ - மார்க் ஷீட்களை பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள்!

Thursday January 12, 2023,

3 min Read

மாணவர்களுக்கு மதிப்பெண்களை கடந்து வெற்றிக்கான பாதை விலாசமாக காத்திருப்பதை உணர்த்தும் வகையில் சில ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் "அறிவுத்திறன் மற்றும் தன்மை-அதுதான் உண்மையான கல்வியின் குறிக்கோள்” எனக்கூறியது போல், மதிப்பெண்கள் எப்போதும் வாழ்க்கை அல்லது எதிர்கால குறிக்கோள்களை தீர்மானிப்பது கிடையாது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் சமூகத்தைப் பொறுத்தவரையில் மதிப்பெண்கள் தான் மாணவர்களின் திறனை முடிவு செய்கின்றன.

அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் புத்திசாலிகளாகவும், குறைந்த அல்லது பெயில் மார்க் பெறும் மாணவர்கள் அறிவுத்திறன் குறைந்தவர்களாகவும் மதிப்பிடப்படுகிறார்கள்.

Exam marks

அதேபோல் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளில் உள்ளவர்கள் பள்ளிப் பருவத்தில் நன்றாக படித்திருப்பார்கள். பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைக் குவித்திருப்பார்கள் என்ற எண்ணம் பெரும்பாலானோரிடம் உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே பாடங்களை மனப்பாடும் செய்து மதிப்பெண்களை குவித்தவர்கள் மட்டுமல்ல, தங்களது அறிவு மற்றும் செயல்திறனால் முன்னேறியவர்களாவார்கள். அதை தற்போது வைரலாகி வரும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பொதுத்தேர்வு மார்க் சீட்டுகள் நிரூபித்துள்ளன.

ஐஏஎஸ் அதிகாரியின் 10வது மதிப்பெண்:

ஐஏஎஸ் அதிகாரி ஷாஹித் சவுத்ரி என்பவர் ட்விட்டரில் தனது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பகிர்ந்துள்ளார். பல மாணவர்களும் அவரிடம் மதிப்பெண் சான்றிதழ்களைக் காண்பிக்கும் படி கேட்டுக்கொண்டதால் அதனை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

”மாணவர்களின் கோரிக்கையின் பேரில், 1997ம் ஆண்டு எழுதிய எனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இதோ! 339/500," எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி ஷாஹித் சௌத்ரி 1997 ஆம் ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத் தேர்வு வாரியத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி தேர்ச்சி அடைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள மதிப்பெண் சான்றிதழின் படி, ஆங்கிலத்தில் 70 மதிப்பெண்களும், கணிதத்தில் 55 மதிப்பெண்களும், அறிவியலில் 88 மதிப்பெண்களும் பெற்றுள்ளது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஐஏஎஸ் அதிகாரி செய்த செயல்:

ஐஏஎஸ் அதிகாரி ஷாஹித் சவுத்ரியின் மதிப்பெண் பட்டியல் வைரலானதைத் தொடர்ந்து, இதேபோல் மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியின் மதிப்பெண் பட்டியலும் கவனம் பெற்றுள்ளது.

சத்தீஸ்கர் 2009ம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் ஷரண் என்பவர் 1996ம் ஆண்டு பீகார் பள்ளித் தேர்வு வாரியத்தில் தான் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் சான்றிதழை சோசியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார். மொத்தம் 700 மதிப்பெண்களுக்கு 314 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று 44.85 சதவீதத்துடன் பார்டரில் பாஸ் ஆகியுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி துஷார் சுமேரா:

ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரண், குஜராத்தில் உள்ள பருச்சின் மாவட்ட ஐஏஎஸ் அதிகாரியான துஷார் சுமேராவின் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவனிஷ் ஷரணாவது பார்டர் மார்க்கிற்கு மேல் கொஞ்சம் அதிகமாக எடுத்திருப்பார். ஆனால், துஷார் சுமேரா 100க்கு ஆங்கிலத்தில் 35 மதிப்பெண்கள், கணிதத்தில் 36 மதிப்பெண்கள், அறிவியலில் 38 மதிப்பெண்கள் என பார்டர் மார்க்கில் பாஸாகி அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளார்.

12ம் வகுப்பு மதிப்பெண்களை பகிர்ந்த அதிகாரி:

முதல் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை எல்லாம் விட கடைசியாக 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழைப் பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நிதின் சங்வான் மாணவர்களின் அதிக கவனத்தைப் பெற்றுள்ளார்.

ஏனெனில், இவர் வேதியியலில் தேர்ச்சி பெறுவதற்கு தேவையானதை விட ஒரு மதிப்பெண்களை மட்டுமே அதிகமாக பெற்று எஸ்கேப் ஆகியுள்ளார். ஆம், வேதியியலில் 70க்கு 24 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

"எனது 12ம் வகுப்பு தேர்வில், நான் வேதியியலில் 24 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றேன். இது தேர்ச்சி மதிப்பெண்ணை விட ஒரு மதிப்பெண்கள் மட்டுமே அதிகமாகும். ஆனால், அது என் வாழ்க்கையில் நான் விரும்புவதை, செய்யப்போவதை தீர்மானிக்கவில்லை," எனக்குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி என்பது பட்டம் அல்லது மதிப்பெண்களைப் பொறுத்தது அல்ல என்பதை மாணவர்களும், குறிப்பாக அவர்களுடைய பெற்றோர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பகிர்ந்துள்ளனர்.

எனவே, மதிப்பெண் சார்ந்த பந்தயத்தை தவிர்த்து மாணவர்களை சுயமாக சிந்திக்கவும், திறமையாகவும் செயல்படவும் அனுமதிப்பதும் அவர்களை தலைசிறந்த பதவிகளில் அமர வைக்கும் என்பதற்கு இவர்கள் சரியான உதாரணம் ஆவார்கள்.