கிருமிகளைத் தடுக்கும் காற்று மாசு சுத்திகரிப்பு: வைரஸ் பரவலை தடுக்கும் ஆய்வில் ஐஐடி-விஐடி கூட்டு முயற்சி!
கோவிட் பரவலை தடுப்பதற்கான காற்று சுத்திகரிப்பு அமைப்பை உருவாக்கும் ஐஐடி மெட்ராஸ், விஐடி ஆகிய கல்வி நிறுவனங்கள் லண்டன் பல்கலையுடன் இணைந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளன.
கொரோனா வைரஸ் மற்றும் காசநோய் பரவலைத் தடுக்கும் வகையில், இந்தியாவுக்கு ஏற்ற காற்றை சுத்தமாக்கும் தொழில்நுட்பம் மற்றும் நெறிமுறைகளை உருவாக்க, ஐஐடி மெட்ராஸ் மற்றும் விஐடி ஆகிய கல்வி நிறுவனங்கள் யு.கேவில் உள்ள லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்துடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளின் உள்புறங்களில் பயன்படுத்தம் வகையில் இவை உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த கூட்டு ஆய்வு, உள் பகுதிகளில் காற்று மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான குறைந்த செலவிலான பயோ-ஏரோசால் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
தில்லியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனமான, மேக்னட்டோ கிளிண்டெக் நிறுவனத்துடன் இணைந்து, பல்வேறு இந்திய சூழல்களில் நிகழ் நேர செயல்பாட்டுடன் பல்வேறு சோதனை மற்றும் முன்னோட்ட அமலாக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் சுற்றுப்புற நாடுகளை இந்தத் திட்டம் இலக்கு பகுதிகளாகக் கொண்டுள்ளது. இந்தப் பகுதிகள் அதிக மக்கள் தொகை மற்றும் நகரமயமாக்கலைக் கொண்டுள்ளன. இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் போது. இந்திய துணை கண்ட பகுதியில் 10 கோடி மக்களுக்கு பயன் அளிக்கும்.
அல்ட்ரா ஒயிலெட்- கதிர்களைக் கொண்ட புதுமையான காற்று சுத்திகரிப்பு முறையை இந்த திட்டம் உருவாக்க முயல்கிறது. வைரஸ் மற்றும் இதர காற்று மூலம் பரவும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதாக இது அமைகிறது. மற்ற பில்டர்களைவிட இதற்கான பராமரிப்பு செலவும் குறைவானது.
சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஐஐடி மெட்ராஸ் எப்போதுமே கூட்டு ஆய்வுகளை முயற்சித்து வருகிறது. கடந்த ஆண்டு கோவிட் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போது நாங்கள் திகைத்தோம். ஆய்வாளர்களாக, இந்த வலியை குறைப்பதற்கான வழிகளை யோசிக்கத் துவங்கினோம்.
அதே நேரத்தில், யுகேவின் பொறியியல் ராயல் அகாடமியும் ஆய்வுக்கான சர்வதேச நிதியை அறிவித்தது. நாங்களும் உடனே, உள் பகுதிகளில் காற்றை சுத்தமாக்கும் ஆய்வை துவங்கினோம், என்று திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஐஐடி மெட்ராஸ் கடல்சார் பொறியியல் துறையின் பேராசிரியர் அப்துஸ் சமது கூறியுள்ளார்.
”சந்தையில் பல்வேறு யுவிசி தீர்வுகள் இருந்தாலும், காற்றில் பரவும் நோய்களைத் தடுக்கும் வகையில் உள் பகுதிகளை சுத்தமாக்கத் தேவையான தொழில்நுட்ப வடிவமைப்பு தீவிரம் இல்லாமல் இருக்கின்றன,” என்றும் அவர் கூறுகிறார்.
இந்த முன்னோட்ட வடிவம், பல்துறை சாதகத் தன்மை, திரவ நிலை ஆய்வு மற்றும் யுவிசி கதிர்களின் புதுமையான பயன்பாட்டைக் கொண்டிருக்கும் என்று விஐடி பல்கலைக்கழக மின் பொறியியல் பிரிவு பேராசிரியர் நித்யா வெங்கடேசன் கூறியுள்ளார்.
”இந்த அமைப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்று, காற்று சுத்திகரிப்பு கருவிகளைப் பயன்படுத்துவது மற்றும் சுத்தமாக்கல், காற்று வசதி, சமூக இடைவெளி தொடர்பான நெறிமுறைகளை உருவாக்க முயற்சிப்பது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வில், விஐடி பல்கலையின் சாகேத் கப்சே, ஐஐடி மெட்ராசின் ரிஷவ் ராஜ், மகேஷ் சவுத்ரி, வாசிம் ராஜா, லண்டன் பல்கலையின் தேனா ரஹ்மான ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.