குயவர்கள் மத்தியில் நவீனத்தை புகுத்தும் முயற்சியில் ஐஐடி மெட்ராஸ்: வருவாய் அதிகரிக்க புதிய வழி!
மைக்ரோவேவ் அடுப்பில் பாத்திரங்கள் தயாரிக்க பயிற்சி!
ஐஐடி மெட்ராஸ், தமிழகத்தைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர்களுக்கு, நவீன காலத் தேவையான மைக்ரோவேவ் அடுப்பில் வைக்கத்தகுந்த சமையல் பாத்திரங்கள் தயாரிக்க உதவுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பெருமுடிவாக்கம் கிராமத்தில் பாரம்பரிய குயவர்களுக்கு உதவும் வகையில், சந்தையில் அதிகம் நுகரப்படும் நுண்ணலை அடுப்பில் பயன்படுத்தக்கூடிய களிமண் பாண்டங்கள், பல்வகைக் கலைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள் மற்றும் சேமிப்புக் கொள்கலன்களைத் தயாரிக்க பொதுஆலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸின் ஊரகத் தொழில்நுட்பச் செயற்குழு, மாறி வரும் நுகர்வோர் தேவைகளுக்கேற்ப உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், தமிழகக் குயவர்களுக்கு உதவ,
மைக்ரோவேவ் அடுப்பில் பயன்படுத்தக்கூடிய வகையில் பாண்டங்களைத் தயாரிக்க, பொது ஆலையை நிறுவ உதவியுள்ளது. சந்தையில் இந்தப் பொருட்களின் மதிப்பு கூடியிருப்பதால், இது பாரம்பரியக் குயவர்களுக்கு நிலையான வருவாய் ஈட்ட உதவும்.
பல பாரம்பரிய குயவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய நிலையில், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றன. கைவினைஞர்களின் வருவாயை அதிகரிக்க, உற்பத்தித் திறனை மட்டுமல்லாமல் கைவினைஞர்களின் ஊதியத்தையும் மேம்படுத்த கூடுதல் திறன் மற்றும் தயாரிப்புப் பயிற்சியுடன் நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம் பெருமுடிவாக்கத்தில் பொது ஆலை ஒன்றைச் செயல்படுத்த ஐஐடி மெட்ராஸ் உதவுகிறது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் இன் தென்மண்டல பைப்லைன்ஸ் (ஐஓசிஎல்-எஸ்ஆர்பிஎல்) பிரிவின் சிஎஸ்ஆர் நிதியுதவியுடன் நாகர்கோவிலில் உள்ள அரசு சாரா அமைப்பான சமூக மேம்பாட்டு மையத்தைச் செயல்பாட்டுக் கூட்டாளியாகவும் கொண்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் நிறுவனத்துடன் (CGCRI) இணைந்து ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் குயவர்களுக்கு உதவுகிறது
இந்த முன்னெடுப்பில் ஐஐடி மெட்ராஸின் பங்களிப்பு குறித்து வலியுறுத்திப் பேசிய RuTAG-யின் பொறுப்பாளர் பேராசிரியர் அபிஜித் பி தேஷ்பாண்டே,
"ஒரு நிறுவனத்தின் உள்ளே உருவாகும் தொழில்நுட்ப மேம்பாடு, பல்துறைகளுடனும் தொடர்பு கொண்ட ஒரு முன்னெடுப்பாக உருவெடுப்பது அவசியம். அந்த வகையில், RuTAG, CGCRI, CSD, IOCL, அரசு அமைப்புகள்,உள்ளூர் கைவினைஞர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து பயன்களைப் பகிர்ந்தளிக்கிறது. இது மேலும் மேம்பட, அந்தக் கைவினைஞர்களின் தேவைகளையும் கண்டறிந்து அவற்றை மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் சென்று சேர்த்து, அதற்கேற்பத் தொழில்நுட்பத்தில் மேம்பாட்டைக் கொண்டு வரலாம்," என்று கூறினார்.
மேலும், இந்த மையத்தின் நன்மைகளைப் பற்றி விரிவாகப் பேசியவர்,
"களிமண் உற்பத்தித்திறனையும் தரத்தையும் அதிகரிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. CFC மூலம் ஒரு பரவலாக்கப்பட்ட உள்கட்டமைப்பால், சம்பந்தப்பட்ட அனைவருக்குமான உரிமை அதிகரிக்கிறது. மேலும், மையத்தின் செயல்பாடுகளைச் சுற்றி வேலை வாய்ப்புகளும் பெருகுகின்றன," என்றார்.
இந்த மையத்தின் மூலம் பெறக்கூடிய முக்கிய விளைவுகள்:
* குயவர்களின் வருவாய் மூன்றிலிருந்து நான்கு மடங்கு உயரும்.
* பாரம்பரிய மண் பாண்டப் பொருட்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் மூலம் நான்கு மடங்கு சந்தை மதிப்பு கூடும்.
* பெருமளவு சந்தை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதித் தரம்
* பயிற்சி பெறுவோர் நேரடிப் பயிற்சி மற்றும் வழிகாட்டல் மூலம் தொழில் முனைவோராகவும் வாய்ப்பு
* மாநிலத்திலுள்ள மற்ற மண்பாண்டத் தொழில் மையங்களிலும் இம்முறை தழுவப்படும் வாய்ப்பு
பல்வேறு வகையான களிமண் பொருட்களின் உற்பத்தி தொடர்பான வன் மற்றும் மென் திறன்களில் இதுவரை மொத்தம் 82 நபர்கள் இந்த மையத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) நிர்வாக இயக்குனர் சாவந்த், ஐஓசிஎல் பல்வேறு கிளஸ்டர்களில் இதுபோன்ற வாழ்வாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை ஆதரிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்.
இதற்கிடையே, பயிற்றுவிக்கப்பட்ட குயவர்கள் வீட்டு உபகரணங்கள், அதிக சந்தை மதிப்புகள் கொண்ட நுண்ணலை அடுப்பில் பயன்படுத்தக்கூடிய களிமண் பாண்டங்கள், கலை பொருட்கள், சமையல் பாத்திரங்கள் மற்றும் சேமிப்பு கொள்கலன்களை உள்ளடக்கிய பல்வகைப்பட்ட களிமண் பொருட்களை காட்சிப்படுத்தினர்.
ஒருங்கிணைந்த மட்பாண்ட உற்பத்தி அலகு மூலம் மைக்ரோவேவ் மட்பாண்டங்கள் உட்பட களிமண் பொருட்கள் தயாரிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சித் திட்டங்கள், புதிய பயிற்சி பெற்ற CFC யின் ஆதரவைப் பெற்று பயிற்சி பெறுவோர் தங்கள் சொந்த மட்பாண்ட அலகுகளை அமைக்க ஊக்குவிக்கும் அளவுக்கு முக்கிய கவனத்தைப் பெற்றன.