கோவிட் காலத்திலும் 184 காப்புரிமைகளை பதிவு செய்த சென்னை ஐஐடி ஆய்வாளர்கள்!
சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் சார்பில் பதிவு செய்யப்படும் சர்வதேச காப்புரிமைகளின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 3 மடங்காக உயர்ந்துள்ளது.
சென்னை ஐஐடி பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் கொரோனா காலத்தில் 184 காப்புரிமைகளை பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஐஐடிய ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ள காப்புரிமைகளில் கோவிட் -19 தொடர்பான 9 காப்புரிமைகளும் அடங்கும். கொரோனா வைரசை கண்டறிவது தொடர்பான முறை உள்ளிட்ட காப்புரிமைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் காப்புரிமை பதிவுகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சூழலை கொண்டுள்ளது. இதன் ஆய்வாளர்கள் சர்வதேச அளவிலான மற்றும் முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஐஐடி ஆய்வாளர்கள், மருத்துவம் மற்று சுகாதாரத் துறை தவிர, 5 ஜி, தொலைத்தொடர்பு, சென்சார்கள் உள்ளிட்ட துறைகளிலும் ஆய்வு செய்து காப்புரிமைக்கு பதிவு செய்துள்ளனர் என ஐஐடி செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும், சர்வதேச அளவிலான காப்புரிமை பதிவுகளும் அதிகரித்துள்ளது. 2017ம் ஆண்டு இது 22 ஆக இருந்த நிலையில், 2020ம் ஆண்டில் 65 காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டன.
தொழில் ஆலோசனை மற்றும் வர்த்தக ஆதரவு ஆய்வுக்கான மையம், அண்மை ஆண்டுகளில், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தாக்கல் செய்யப்படும் காப்புரிமைகளுக்கான எண்ணிக்கையை அதிகரிக்க ஊக்குவித்து வருகிறது.
“காப்புரிகமைகளுக்கு விண்ணப்பிப்பதில் பேராசிரியகள் மற்றும் மாணவர்களை ஐஐடி சென்னை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது, இதன் காரணமாக கடந்த ஆண்டு, 184 காப்புரிமைகளுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 தொடர்பாகவும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என ஐஐடி சென்னை-(ICSR), டீன் ரவீந்திர கெட்டு கூறியுள்ளார்.
ஐஐடி சென்னையில் உள்ள காப்புரிமை ஆய்வு பிரிவும், ஆய்வாளர்களுக்கு தேவையான முந்தைய காப்புரிமை தொடர்பான தகவல்களை வழங்கி வருகிறது.
காப்புரிமை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் தொடர்பான மெய்நிகர் சந்திப்புகள், மெயநிகர் காப்புரிமை ஒத்துழைப்புக் கூட்டங்கள் ஆகியவை காப்புரிமை செயல்பாட்டை எளிதாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காப்புரிமை தொடர்பான எண்ணங்களை ஆலோசிக்க, Have an Idea எனும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய காப்புரிமை அலுவலத்தில் தற்காலிக விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளவும் ஐஐடி சென்னை வழி செய்துள்ளது.