மஞ்சள் புற்றுநோய் அணுக்களை அழிக்கும் வல்லமை கொண்டது' - ஐஐடி ஆய்வு!
மஞ்சளும் மஞ்சளில் உள்ள வேதிப்பொருளான ‘கர்குமின்’ கேன்சரை உண்டாக்கும் அணுக்களை அழிக்கும் வல்லமை உள்ளதாக சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மஞ்சளும் மஞ்சளில் உள்ள வேதிப்பொருளான ‘கர்குமின்’ (Curcumin) புற்றுநோய் உண்டாக்கும் அணுக்களை அழிக்கும் வல்லமை உள்ளதாக சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
புற்றுநோய் செல்களை அழிக்கும் சிகிச்சைக்கு உதவக்கூடிய மூலப்பொருட்களை (therapeutic agents) உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. TNF-Related Apoptosis-Inducing Ligand (TRAIL) என்கிற புரதம் அத்தகைய மூலப்பொருளாக இருக்க வாய்ப்பிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட புற்றுநோய் அணுக்களை மட்டும் அழிக்கக்கூடிய திறன் இதற்கு இருப்பதாக உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
புற்றுநோய் சிகிச்சையில் ஆரோக்கியமான அணுக்களை சேதப்படுத்தாமல் புற்றுநோய் அணுக்களை மட்டும் அழிப்பது முக்கியம்.
ஐஐடி மெட்ராஸ் உயிரிதொழில்நுட்பத் துறை பேராசிரியர் ரமா சங்கர் வர்மா தலைமையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் சமீபத்தில் Pharmacological Reports பத்திரிக்கையில் வெளியானது. இதை ஸ்ரீதேவி சுரபள்ளி, மதுமதி ஜெயபிரகாசம், பேராசிரியர் வர்மா ஆகியோர் இணைந்து சமர்ப்பித்துள்ளனர்.
பேராசிரியர் சங்கர் வர்மா தனது ஆய்வு குறித்தும் அதன் முடிவுகள் குறித்தும் விவரிக்கையில்,
“TRAIL புற்றுநோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படும் தன்மை கொண்டுள்ளது என்பதை மருத்துவ ரீதியான ஆய்வுகளுக்கு முந்தைய நிலை ஆய்யில் கண்டறிந்தபோதும் மருத்துவ ரீதியான ஆய்வு முடிவுகள் திருப்தியளிக்கக்கூடியதாக இல்லை. ஏனெனில் புற்றுநோய் அணுக்கள் நீண்ட நேரம் வெளிப்புறத்தில் இருக்கும்போது TRAIL-க்கு எதிராக எதிர்ப்புத்திறனைப் பெற்றுவிடுகிறது. எனவே இத்தகைய எதிர்ப்புத்திறனை அனுமதிக்காத, அதேசமயம் TRAIL-க்கு ஏற்றவாறு செயல்பட்டு புற்றுநோய் அணுக்களை சிறப்பாக அழிக்க உதவும் ரசாயனங்களைக் கண்டறிவதில் அடுத்த ஆய்வில் கவனம் செலுத்தப்படும்,” என்றார்.
இது தொடர்பான இயற்கையான பொருட்கள் சார்ந்து பல்வேறு ஆய்வுகள் கவனம் செலுத்தப்பட்டன. ஐஐடி மெட்ராஸ் குழு நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் மஞ்சளில் உள்ள வேதிப்பொருளான கர்குமினைத் தேர்வு செய்தது.
கர்குமின் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. ப்ராஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றில் TRAIL-க்கு ஏற்றவாறு இது செயல்படும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஞ்சளில் உள்ள நச்சுத்தன்மை இல்லாத கர்குமின், ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜைகளில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய லுக்கிமியா அணுக்களை அழிப்பதற்கான சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சென்னை ஐஐடி ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது.
இருப்பினும் இந்த ஆய்வு முடிவுகள் அனைத்திற்கும் பொருந்தும் என்கிற பொதுப்படையான கருத்தை ஐஐடி மெட்ராஸ் ஆய்வாளர்கள் முன்வைக்கவில்லை. உலகளவில் கர்குமின் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.