இந்தியாவில் 15 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவாகிறது!
2018-ம் ஆண்டில் 33,356 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
2018ம் ஆண்டில் 33,356 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
2016ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 38,947 ஆக இருந்தது. 2017ம் ஆண்டில் 32,559-ஆக இருந்தது. இந்நிலையில் இத்தகைய வழக்குகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை என உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் குறிப்பிடுகிறது.
நாட்டில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் பதிவு செய்யப்படுவதையே இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.
பாதிக்கப்பட்ட 33,977 பேரில் ஒவ்வொரு நான்காவது நபரும் மைனர் என்றும் இதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் 18 முதல் 30 வயதுடையவர்கள் என்றும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பாதிக்கப்பட்ட மைனர் நபர்களில் 4,779 பேர் 16 முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள்; 3,616 பேர் 12 முதல் 16 வயதுடையவர்கள்; 757 பேர் 6 முதல் 12 வயதுடையவர்கள்; 281 பேர் ஆறு வயதிற்குட்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் பாதிக்கப்பட்டவர்களில் 17,636 பேர் 18 முதல் 30 வயதுடையவர்கள்; 6,108 பேர் 30 முதல் 45 வயதுடையவர்கள்; 727 பேர் 45 முதல் 60 வயதுடையவர்கள்; 73 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தரவுகள் தெரிவிக்கிறது.
இதில் 94 சதவீத வழக்குகளில் குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிச்சயமானவர்கள். 15,972 வழக்குகளில் குடும்ப நண்பர்கள், அருகில் வசிப்பவர்கள், முதலாளிகள் அல்லது பரிச்சயமானவர்களே குற்றவாளியாக இருந்துள்ளனர்.
12,568 வழக்குகளில் நண்பர்கள், ஆன்லைன் நண்பர்கள், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வரும் பார்ட்னர் அல்லது பிரிந்துசென்ற கணவர் போன்றோரே குற்றவாளிகளாக இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மாநிலவாரியாக பார்க்கும்போது மத்தியப்பிரதேசத்தில் அதிகளவில் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 5,433. அதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் 4,335 வழக்குகளும் உத்தர பிரதேசத்தில் 3,946 வழக்குகளும் மஹாராஷ்டிரத்தில் 2,142 வழக்குகளும் சத்தீஸ்கரில் 2,091 வழக்குகளும் கேரளாவில் 1,945 வழக்குகளும் அசாமில் 1,648 வழக்குகளும் டெல்லியில் 1,215 வக்குகளும், ஹரியானாவில் 1,296 வழக்குகளும் ஜார்கண்டில் 1,090 வழக்குகளும் மேற்கு வங்கத்தில் 1,069 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
காவல்துறையும் நீதிமன்றமும் இந்த வழக்குகளை முடித்துவைக்கும் விகிதமும் மோசமாகவே உள்ளது. இத்தகைய வழக்குகளில் 85 சதவீதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தண்டனையளிக்கப்படும் விகிதம் வெறும் 27 சதவீதம் மட்டுமே என்றும் சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
விரைவு நீதிமன்றங்கள் வேகமாக செயல்பட்டாலும் அதிகளவிலான வழக்குகளை அவை கையாள்வதில்லை என 2015ம் ஆண்டு சட்டம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. நீதிமன்றங்கள் ஒரு வழக்கிற்கு சராசரியாக 8.5 மாதங்கள் எடுத்துக்கொள்கிறது. இது பரிந்துரைக்கப்பட்ட விகிதத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு கூடுதல் அவகாசம் ஆகும். இவ்வாறு டெல்லியில் உள்ள Partners for Law in Development ஆய்வு குறிப்பிடுகிறது.
இந்தியாவின் சில பகுதிகளில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக பவ்லேறு சமூகக் கட்டுப்பாடுகள் நிலவுகிறது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்படுவதால் அவை கொலை வழக்குகளாகவே பதிவாகிறது. இதனால் பாலியல் வழக்குகள் தொடர்புடைய இந்த புள்ளிவிவரங்கள் குறைத்தே மதிப்பிடப்பட்டுள்ளது எனலாம்.
ஆங்கில கட்டுரையாளர்: நிரந்தி கௌதமன் | தமிழில்: ஸ்ரீவித்யா