பாலியல் பலாத்காரத்தைத் தடுக்கும் உள்ளாடை வடிவமைத்துள்ள கிராமப்புற மாணவி!
உள்ளாடையில் தொழில்நுட்பத்தை புகுத்தி பாலியல் பலாத்காரத்தை தடுக்க இம்மாணவி செய்துள்ள புதுமையை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் நடப்பதாக பதிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில் நாட்டில் பதிவு செய்யப்படாத சம்பவங்களின் எண்ணிக்கை கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது.
இந்தியாவில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்புறப் பெண்களுக்கு பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் தொடர்கதையாக உள்ளது. இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இதைத் தடுக்க அரசாங்கங்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பாதுகாப்புத் தொடர்பான அச்சுறுத்தல்கள், இந்த அச்சுறுத்தல்கள் பெண்களின் வாழ்க்கையிலும் அவர்களது கனவுகளிலும் ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகியவற்றை நன்குணர்ந்து இதற்குத் தீர்வுகாண முன்வந்துள்ளார் உத்திர பிரதேசத்தின் கிராமப்புறத்தைச் சேர்ந்த 20 வயது சீனு குமாரி. இவர் பாலியல் பலாத்கார முயற்சியைத் தடுக்கும் வகையில் ஒரு உள்ளாடையை வடிவமைத்துள்ளார். இது பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதைத் தடுக்க உதவுவதுடன் பலாத்காரம் செய்பவர்களைப் பிடிக்கவும் உதவும்.
”நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் பல்வேறு பாலியல் பலாத்கார சம்பவங்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு நேரும் பலாத்காரங்கள் என்னை வெகுவாக பாதித்தது. என்னுடைய குடும்பத்தினரின் பயம் அதிகரித்து வந்ததைக் கண்டு வேதனை அடைந்தேன். இத்தகைய பயம் எங்களது வாழ்க்கையை நேரடியாக பாதித்தது. இதற்கு தீர்வுகாண வேண்டும் என்று விரும்பினேன். குற்றவாளிகளின் மனதில்தான் அச்சம் வரவேண்டுமே தவிர அப்பாவிகள் அச்சப்படவேண்டிய அவசியமில்லை,” என்றார் சீனு.
இந்த இளம் மாணவி அன்றாடம் தனது பல்கலைக்கழகத்தைச் சென்றடைய நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டு வந்தார். இதுவே தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தீர்வினை உருவாக்க உந்துதலளித்தது. பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் பெண்களின் கல்விக்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதே இவரது நோக்கம்.
பாதிக்கப்படக்கூடிய கிராமங்கள்
ஃபருகாபாத் மாவட்டத்தில் உள்ள நாகலசடல் எனும் தொலைதூர கிராமத்தில் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சீனு. இவரது கிராமத்தில் உயர்நிலைப் பள்ளியோ கல்லூரியோ இல்லாததால் அங்கு மேற்படிப்பு படிக்கமுடியாமல் போனது. இதனால் நாகலசடல் பகுதியைச் சேர்ந்த பல பெண்கள் எட்டாம் வகுப்புடன் படிப்பை இடைநிறுத்தம் செய்யவேண்டிய சூழல் இருந்தது. வெகு சிலரே மேற்படிப்பு படித்தனர்.
போதிய அடிப்படை வசதிகள் இல்லாததே இதற்குக் காரணம் என சீனு விவரித்தார்.
“கல்லூரிகளோ பயிற்சி வகுப்புகளோ கிராமத்தில் இல்லை. பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் மக்களிடையே நிலவுவதால் கிராமத்தை விட்டு பெண்களை வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. இதனால் பெண்களால் படிப்பைத் தொடரமுடியாமல் போகிறது,” என்றார்.
ஆனால் சீனுவின் பெற்றோர் கல்வியின் அவசியத்தை உணர்ந்திருந்தனர். சீனு படிப்பைத் தொடர விரும்பியதால் அவர் கிராமத்திற்கு வெளியே சென்று படிக்க ஊக்குவித்தனர். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த நிலையில் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல தினமும் 50 கி.மீ பயணித்து மெயிண்டரி மாவட்டத்திற்கு செல்லவேண்டியுள்ளது.
”நான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் அல்ல. பெண்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதில்லை. எங்களது கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தனியாக பயணிக்க முடியாது என்பதால் என் அப்பா மெயிண்டரி பகுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தார்,” என நினைவுகூர்ந்தார்.
நாகலசடல் பகுதியில் உள்ள சாலைகள் மதியவேளையிலும் மாலை நேரங்களிலும் ஆள் நடமாட்டமின்றி காணப்படும். எனவே பெண்கள் தனியாக செல்லும்போது கேலி, கிண்டல் போன்ற துன்புறுத்தல்களுக்கு ஆளாவதுண்டு. எனவே பாதுகாப்பை உறுதிசெய்ய ஆண் துணையுடனோ அல்லது பெண்கள் ஒரு குழுவாகவோ பயணம் செய்யவேண்டிய நிலை உள்ளது.
கருவி
இத்தகைய சூழலுக்கு தீர்வுகாண பாலியல் பலாத்கார முயற்சியைத் தடுக்கும் வகையிலான ஒரு உள்ளாடையின் முன்வடிவத்தை சீனு உருவாக்கியுள்ளார்.
இந்த உள்ளாடையில் கேமராவும் ஜிபிஎஸ் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. அவசரகால அழைப்பை முடுக்கிவிடும் பட்டனும் இதில் நிறுவப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் காவல்துறை அதிகாரிகளும் குடும்பத்தினரும் அந்த பெண் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கும். ஒரே ஒரு க்ளிக் செய்வதன் மூலம் எளிதாக அழைக்கமுடியும். இந்த உள்ளாடையில் கடவுச்சொல் செட் செய்து லாக் செய்துவிடமுடியும்.
”இதில் ஸ்மார்ட் லாக் இணைத்துள்ளேன். சரியான கடவுச்சொல்லை அழுத்தினால் மட்டுமே திறக்கமுடியும். ஜிபிஎஸ் மற்றும் அழைக்கும் வசதி கொண்ட எலக்ட்ரானிக் கருவியையும் இதில் பொருத்தியுள்ளேன். இதை அணிந்துள்ள பெண்ணிடம் யாரேனும் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தால் இந்த கருவி அவரது உறவினர்களுக்கும் காவலர்களுக்கும் தகவல் அனுப்பும். ஜிபிஎஸ் கொண்டு அந்த இடத்தைத் தெரிந்துகொண்டு காவலர்கள் அங்கு சென்று பலாத்கார சம்பவம் நடக்காமல் தடுக்கலாம்,” என்றார்.
”இந்தத் தயாரிப்பு அன்றாட பயன்பாட்டிற்கானது அல்ல. பெண்கள் தனியாக பயணம் மேற்கொள்ளும்போதோ பாதுகாப்பற்ற சூழல்களிலோ இதைப் பயன்படுத்தலாம்,” என்றார் சீனு.
பெரும்பாலான பாலியல் பலாத்கார சம்பவங்களில் வன்கொடுமை செய்தவர்களைக் கண்டறிய முடியாமல் போகிறது. அவர்களை கைது செய்யவோ தண்டிக்கவோ முடியாத சூழல் உள்ளது. பலாத்காரம் செய்தவர்களைக் கண்டுபிடிக்க இந்த உள்ளாடையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உதவும் என்கிறார் சீனு.
”இந்தக் கருவியை பெண்கள் பயன்படுத்தத் தொடங்கினால் பாலியல் தொல்லை செய்ய முயற்சி செய்பவர்கள் பிடிபடுவார்கள். இதைக் கண்டு இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட நினைக்கும் மற்றவர்களுக்கு பயம் ஏற்படும். அத்துடன் பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டால் அவர்களது குடும்பங்களும் கட்டுப்பாடுகள் விதிக்கமாட்டார்கள்,” என்றார்.
தற்போது இந்தக் கருவியின் முன்வடிவம் அஹமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்னொவேஷன் ஃபவுண்டேஷனுக்கு காப்புரிமைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
வரவேற்பு
“இந்தத் திட்டத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டபோது பலர் இதை பொருட்படுத்தவில்லை. இது சாத்தியம்தானா என கேள்வியெழுப்பினர். இதற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு நொய்டா செல்ல 200 கிமீ பயணம் செய்தேன். பணப்பற்றாக்குறை காரணமாக சற்றே மலிவு விலையில் அதிக தரமில்லாத பொருட்களை வாங்கவேண்டியிருந்தது,” என்றார் ஸ்ரீ புருஷோத்தம் சிங் இண்டர் கல்லூரியில் பிஎஸ்சி படிக்கும் மாணவியான சீனு.
சீனு தனது குடும்பத்தின் ஆதரவுடன் 5,000 ரூபாய்கும் குறைவாக செலவிட்டு முன்வடிவத்தை உருவாக்கியுள்ளார். கிராமத்தினரிடம் கருவியைக் காட்டியபோது நல்ல வரவேற்பு கிடைத்தது.
சீனு தனது முன்வடிவத்திற்கு தரமான தயாரிப்புகளைப் பயன்படுத்தமுடியாமல் போனதாகக் கருதுகிறார். ஜிபிஎஸ் ட்ராக்கர், லாக் ஆகியவை மேலும் சிறியளவில் இருந்தால் அதிக கனமில்லாமல் இருக்கும் என்று கருதுகிறார். அத்துடன் தரமான பொருட்களைக் கொண்டு இதை உருவாக்கினால் பயன்படுத்த மேலும் வசதியாக இருக்கும்.
”பாலியல் பலாத்கார முயற்சியைத் தடுக்கும் வகையில் நான் உருவாக்கியுள்ள இந்த உள்ளாடை வெறும் முன்வடிவம் மட்டுமே. வசதியின்மை காரணமாக மலிவு விலை பொருட்களை நான் பயன்படுத்தியுள்ளேன். முன்வடிவத்திற்குப் பயன்படுத்திய துணி தரமற்றது. டிஜிட்டல் லாக் அளவில் பெரிது. கருவி சரியான இடத்தில் பொருத்தப்படவில்லை. ரெக்கார்டர் தொங்கியவண்ணம் பொருத்தப் பட்டுள்ளது. இவற்றை தொழிற்சாலையில் தயாரிக்கும்போது வெவ்வேறு அளவுகளில் தயாரிக்கலாம். இதனால் சந்தையில் விற்பனையாகும் வழக்கமான உள்ளாடை போன்றே இருக்கும்,” என்றார்.
இந்த உள்ளாடைத் தயாரிப்பிற்கு புல்லட்ப்ரூஃப் துணி வகை பயன்படுத்தப்படுவதால் இந்தக் கருவியில் கோளாறு வருவதற்கு சாத்தியமில்லை என்கிறார் சீனு. இதை கத்தியைக் கொண்டு கிழிக்கமுடியாது. சருமத்தில் தடிப்புகள் ஏற்படவும் வாய்ப்பில்லை. எனினும் அதிக கனமில்லாத மேம்பட்ட முன்வடிவத்தை உருவாக்க தற்போது கூட்டுநிதி முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதேசமயம் மலிவு விலையில் சந்தையில் விற்பனைக்கு தயார் நிலையில் இருக்கும் தயாரிப்பை உருவாக்கத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி சீனுவின் முயற்சியைப் பாராட்டியதுடன் அவரது முயற்சிக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
”இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். இது அடிப்படை மனித உரிமை. இதற்காகப் போராடவேண்டிய அவசியம் இருக்கக்கூடாது. இத்தகைய அருவருப்பான குற்றச்செயலில் ஈடுபட முயன்றால் மாட்டிக்கொள்வோம் என்கிற அச்சம் மக்களுக்கு ஏற்படவேண்டும். குற்றங்கள் குறைய இது நிச்சயம் உதவும்,” என்று கூறினார் சீனு.
ஆங்கில கட்டுரையாளர்: ஸ்ருதி கெடியா | தமிழில்: ஸ்ரீவித்யா