‘இந்தியா என்னில் ஒரு அங்கம்’ - பத்ம பூஷன் விருது பெற்ற கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை உருக்கம்!
உலக அரங்கில் இந்தியர்களை தலைநிமிரச் செய்தவர்களில் ஒருவரான, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு 2022ம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது இன்று வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடங்கிய சுந்தர் பிச்சையின் பயணம் அனைவரையும் வியக்க வைக்கும் அளவிற்கு மவுண்ட் வியூ வரை பரவியுள்ளது. உலக அரங்கில் இந்தியர்களை தலைநிமிரச் செய்தவர்களில் ஒருவரான, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு 2022ம் ஆண்டுக்கான ’பத்ம பூஷன்’ விருது இன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்குவதற்காக கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருதினை அறிவித்திருந்தது. சமீபத்தில், சான் பிரான்சிஸ்கோவில் சுந்தர் பிச்சைக்கு, இந்தியாவின் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் விருதை, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து வழங்கினார். \
இந்நிகழ்ச்சியின் போது சுந்தர் பிச்சையின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் இந்திய தூதரக தூதர் டி வி நாகேந்திர பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து,
“சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கூகுள் மற்றும் ஆல்பெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையிடம் பத்ம பூஷனை ஒப்படைப்பதில் மகிழ்ச்சி. மதுரையிலிருந்து மவுண்டன் வியூ வரை சுந்தரின் உத்வேகப் பயணம், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துகிறது. உறவுகள், உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இந்திய திறமைகளின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது,” என பதிவிட்டுள்ளார்.
பத்ம பூஷன் விருதை வழங்கியதற்காக அமெரிக்காவுக்கான இந்திய தூதருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் சுந்தர் பிச்சை,
“பத்ம பூஷன் விருது பெறுவதும், இன்று என்னுடன் எனது குடும்பத்தினர் இருப்பதும் ஒரு பெரிய கவுரவம். இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சை உருக்கம்:
இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதினை பெற்றது குறித்து சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
"இந்த பெருமையை எனக்கு வழங்கிய இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி கூறுகிறேன். என்னை இந்த நிலைக்கு உருவாக்கிய நாட்டிலிருந்து இதுபோன்ற மதிப்புமிக்க விருதைப் பெறுவது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இந்தியா என்னில் ஒரு அங்கம். நான் எங்கு சென்றாலும் இந்தியாவின் மதிப்புகளை எடுத்துச் செல்வேன். இந்த விருதை பாதுகாப்பாக வைத்திருப்பேன். அறிவை வளர்த்துக்கொள்ள மிகவும் பாடுபட வேண்டிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என் பெற்றோர்கள் எனது ஆர்வத்தை நிறைவேற்றுவதற்காக நிறைய தியாகங்களைச் செய்தனர். அவர்களுக்கு எனது நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதாகவும், இந்த முன்னேற்றங்கள் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ள சுந்தர் பிச்சை, இந்தியாவில் இருந்து வரும் புதுமைகளால் உலகம் பயனடைவதாக தான் நம்புவதாக கூறியுள்ளார்.
கூகுள், இந்தியாவுடனான கூட்டாண்மை தொடர வேண்டும் என தான் நினைப்பதாகவும், ஏனெனில், இவை இரண்டும் ஒன்றிணைந்தால், மக்களுக்கு தொழில் நுட்பத்தில் நிறைய நன்மைகள் உள்ளது என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘பணத்தை பற்றி மறந்துவிட்டு, ஜாலியாக பணியாற்றுங்கள்’ - ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அட்வைஸ்!