‘பணத்தை பற்றி மறந்துவிட்டு, ஜாலியாக பணியாற்றுங்கள்’ - ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அட்வைஸ்!
கூகுள் நிறுவனம் ஊழியர்களின் பொழுதுபோக்கு மற்றும் பயண வரவுச் செலவுத் திட்டங்களை குறைத்ததை தொடர்பாக அந்நிறுவனத்தின் சிஇஓ விளக்கம் அளித்துள்ளார்.
கூகுள் நிறுவனம் ஊழியர்களின் பொழுதுபோக்கு மற்றும் பயண வரவுச் செலவுத் திட்டங்களை குறைத்ததை தொடர்பாக அந்நிறுவனத்தின் சிஇஓ விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர் பிச்சை, நிறுவனத்தின் ஊழியர்கள் குறித்தும், அவர்களது திறமை குறித்து கருத்து தெரிவித்தது சர்ச்சையை உருவாக்கியது. நிறுவனத்தில் அதிக ஊழியர்கள் உள்ளதை குறிப்பிட்ட சுந்தர் பிச்சை, பலர் திறமையாக வேலை செய்யவில்லை எனத் தெரிவித்திருத்திருந்தார்.
மேலும், திறமையாக பணியாற்றும்படியும், தயாரிப்புகளை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு உதவிடுவதில் அதிக கவனம் செலுத்தும்படியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கூகுள் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு காரணம் 2022ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்த வருமானம் வரவில்லை என்பதுதான் எனக் கூறப்பட்டது. கடந்த காலாண்டை விட இந்த காலாண்டில் கூகுள் நிறுவனத்தின் வருமானம் 13 சதவீதம் குறைந்துள்ளதால், கூகுள் ஊழியர்களின் பயணம் மற்றும் பொழுதுபோக்குக்கான பட்ஜெட்டைக் குறைத்துள்ளது.
உற்பத்தித்திறனை நிர்வகித்தல், ஓய்வுநேர பட்ஜெட்டில் சிக்கனம் மற்றும் பணிநீக்கங்கள் குறித்த விளக்கங்களைத் தேடிக்கொண்டிருந்த ஊழியர்களுக்கு வாராந்திர ஆல்-ஹேண்ட்ஸ் மீட்டிங்கில் சிஇஓ சுந்தர்பிச்சை பதிலளித்துள்ளார்.
சுந்தர் பிச்சை கொடுத்த அட்வைஸ்
மந்தநிலை மற்றும் பணியாளர் நலன்களுக்காக குறைக்கப்பட்ட பட்ஜெட்டுக்காக கவலைப்படுவதற்கு பதிலாக வேலையை ஜாலியாக செய்யுங்கள் என்று சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார். அண்மையில் கூகுள் ட்ராவல் பட்ஜெட், வெளியூர் பயண தங்கும் செலவுகள் மற்றும் கேளிக்கைக்கு அளித்துவந்த பட்ஜெட்டை வெகுவாக குறைத்திருப்பது குறித்து சர்ச்சை எழுந்தது.
CNBC இன் அறிக்கையின்படி, கடந்த வாரம் நடைபெற்ற அனைத்துக் குழு கூட்டத்தில் செலவுக் குறைப்பு குறித்து ஊழியர்களிடமிருந்து பிச்சை கேள்விகளை எதிர்கொண்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை,
“இதுபோன்ற பெரிய பொருளாதார நிலைமைகளை எதிர்கொள்ள ஊழியர்கள் ஒன்றாக இருக்கவேண்டும். நீங்கள் அனைவரும் வெளியில் இருந்து வரும் செய்திகளைப் படிக்கிறீர்கள் என்று நம்புகிறேன். கடந்த தசாப்தத்தில் ஏற்பட்டுள்ள கடினமான பொருளாதாரச் சூழல் மூலம் நாங்கள் சற்று பொறுப்பாக இருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு நிறுவனமாக, இதுபோன்ற தருணங்களைச் சந்திக்க நாம் ஒன்றிணைவது முக்கியம்,” எனக் கூறியுள்ளார்.
"கூகுள் சிறியதாகவும் மோசமான நிலையை எதிர்கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. நீங்கள் ஜாலியாக இருப்பதை எப்போதும் பணத்துடன் ஒப்பிடக்கூடாது. எனவே வேலையை ஜாலியாக செய்யுங்கள், அதனை பணத்துடன் ஒப்பிடவேண்டாம்” எனக்குறிப்பிட்டுள்ளார்.
கூகுள் புதிய பணியாளர்களை பணியமர்த்தும் செயல்முறையை நிறுத்திவைத்துள்ளது குறித்தும் சுந்தர்பிச்சை விளக்கம் அளித்துள்ளார். கூகுளில் அதிகமான எண்ணிக்கையிலான ஊழியர்கள் உள்ளனர், ஆனால் உற்பத்தித்திறன் அதிகரிக்கவில்லை என என்பதை மீண்டும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"நீங்கள் 20 பேர் கொண்ட குழுவாகவோ அல்லது 100 பேர் கொண்ட குழுவாகவோ இருப்பீர்கள் என நினைக்கிறேன். எங்களின் வளர்ச்சியை எதிர்நோக்கும் அடிப்படையில் நாங்கள் கட்டுப்படுத்தப் போகிறோம். ஒருவேளை நீங்கள் மேலும் ஆறு பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டிருந்தால், நால்வரைத் தேர்வு செய்யலாம். அதை எப்படிச் செய்யப் போகிறீர்கள்? பதில்கள் வெவ்வேறு அணிகளுக்கு வித்தியாசமாக இருக்கும்," எனக்கூறியுள்ளார்.
உலக அளவில் உயர்ந்து வரும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, ரஷ்யா - உக்ரைன் போர் போன்ற பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக, கூகுள், ஃபேஸ்புக் போன்ற பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கான சில சலுகைகளையும், புதிய பணியாளர்களை பணி அமர்த்துவதை மெதுவாக மாற்றியுள்ளது.
தொகுப்பு - கனிமொழி
தலைமைத்துவம் என்றால் என்ன? நச்சுனு 4 வார்த்தையில் விளக்கம் கொடுத்த சுந்தர் பிச்சை!