குப்பையில் வீசிய சீட்டுக்கு ஜாக்பாட்: ரூ.7 கோடி லாட்டரியை உரியவரிடம் ஒப்படைத்த இந்திய குடும்பம்!
குவியும் பாராட்டுக்கள்!
அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் லாட்டரி கடை ஒன்றை நடத்தி வருகிறது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பம். இந்த கடைக்கு சில நாட்களுக்கு முன்பு வந்த ஃபைகா என்ற ஒரு அமெரிக்க பெண் லாட்டரி ஒன்றை வாங்கி பாதி சுரண்டிவிட்டு அதை அப்படியே கீழே போட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
இதற்கிடையே, சமீபத்தில் தனது கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட கடை உரிமையாளரின் மகனான அபி ஷா, குப்பைத் தொட்டியில் முழுமையாக சுரண்டாத அந்த லாட்டரியை பார்த்து அதை எடுத்துள்ளார். அவருடன் இருந்த தாயார் அருணா ஷா இந்த டிக்கெட் கடைக்கு வாடிக்கையாளரான ஃபைகாவால் வாங்கியதை நினைவு கூர்ந்து சொல்லியுள்ளார்.
கண்டெடுக்கப்பட்ட அந்த லாட்டரி சீட்டை முழுவதும் சுரண்டிப் பார்த்த அபி ஷா, அதற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளதை அறிந்தார். இந்திய மதிப்பில் அது 7.2 கோடி ரூபாய்.
இவ்வளவு பெரிய பரிசுத் தொகை அந்த லாட்டரி டிக்கெட்டுக்கு கிடைத்தும், அதை தாங்களே வைத்துக்கொள்ளாமல் தங்கள் கடையின் வாடிக்கையாளரான ஃபைகாவை தேடிப்பிடித்து அவரிடம் அதை ஒப்படைத்துள்ளனர் இந்த இந்திய குடும்பம். முன்னதாக ஃபைகாவை இரண்டு நாட்களாக தேடியுள்ளனர் ஷா குடும்பத்தினர். அந்த இரண்டு நாட்களும் அவர்கள் தூக்கமில்லாமல் தவித்துள்ளனர்.
கடையின் உரிமையாளரான மவுனிஷ் ஷா இது தொடர்பாக பேசுகையில்,
“ஒரு மாலை, எங்கள் மகன் குப்பையில் இருந்து டிக்கெட்டை கவனித்தார். அதில் உள்ள எண் சரியாக சுரண்டப்பவில்லை. அதை சுரண்டியபோது 1 மில்லியன் டாலர் பரிசுக்குரிய எண் அதில் இருந்தது. நாங்கள் அதை வைத்துக்கொண்டு இரண்டு இரவுகள் தூங்கவில்லை. இந்தியாவில் இருக்கும் எங்கள் தாத்தா பாட்டியை அழைத்து விஷயத்தைச் சொன்னோம். அவர்கள் லாட்டரி டிக்கெட்டின் உரிமையாளரிடமே அதை மீண்டும் கொடுங்கள், அந்த பணம் நமக்கு வேண்டாம் என்றார்கள். அதன்படியே ஃபைகாவை தேடி கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்தோம். நான் அதை மீண்டும் கொடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றுள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள ஃபைகா,
“அன்று நான் ஒரு அவசரத்தில் இருந்தேன், மதிய உணவு இடைவேளையில் இந்த லாட்டரியை வாங்கிச் சுரண்டினேன். பாதி மட்டுமே சுரண்டிய நிலையில் அதிலிருந்து எண் பரிசு வெல்லாது என நினைத்து, பணிக்கு செல்லும் அவசரத்தில் அப்படியே கீழே போட்டுவிட்டேன். ஆனால் என்னிடம் அதனை கடையின் உரிமையாளர்கள் கொண்டுவந்து சேர்த்தனர். அந்த தருணத்தில் அந்த சந்தோஷத்தை நினைத்து என்னை அறியாமல் அழுதேன், நான் அவர்களை அணைத்துக் கொண்டேன்," என்று கூறியுள்ளார்.
இவ்வளவு பெரிய பரிசுத்தொகை இருப்பது அறிந்தும் லாட்டரி சீட்டை உரியவர்களிடம் ஒப்படைத்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தினர் செயல் மற்றவர்களை நெகிழவைத்துள்ளது. அவர்களை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதனால் அவர்கள் தற்போது ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.
தகவல் உதவி: NRI Pulse | தொகுப்பு: மலையரசு