'2020ன் சிறந்த சிறுமி' - டைம் இதழ் பெருமைப் படுத்திய 15 வயது கீதாஞ்சலி!
2020 ஆண்டின் சிறந்த சிறுமியாக இந்திய அமெரிக்கச் சிறுமியை தேர்ந்தெடுத்து பெருமைபப்டுத்தியுள்ளது அமெரிக்காவின் புகழ் பெற்ற டைம் பத்திரிகை.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சிறந்த நபர்களைத் தேர்ந்தெடுத்து அறிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது அமெரிக்காவின் டைம் பத்திரிகை. அந்தவகையில், இந்தாண்டு முதன்முறையாக இளம் சிறுமியை தேர்ந்தெடுத்துள்ளது டைம்.
அமெரிக்கா முழுவதும், 8 முதல் 16 வயதுக்குட்பட்ட 5 ஆயிரம் குழந்தைகளிலிருந்து 5 குழந்தைகள் இதில் பரிந்துரைக்கப்பட்டனர். அதில் கீதாஞ்சலி ராவ் சிறந்த சிறுமியாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.
கீதாஞ்சலி அப்படி என்ன சாதித்தார்?
அமெரிக்காவில் வாழும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் சிறுமி கீதாஞ்சலி. அவர் கொலராடோ மாகாணத்தில் வசித்து வருகிறார். சிறந்த சிறார் விஞ்ஞானி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.
அறிவியல் தொழில்நுட்பத்தால் சமூக மாற்றம் சாத்தியமா என்ற கேள்வி தான் கீதாஞ்சலியின் கண்டுபிடிப்புகளுக்கு அடிநாதம். Tethys என்ற கருவியை கண்டுபிடித்துள்ளார் கீதாஞ்சலி. சொல்லப்போனால் இந்த கருவிக்கு பெயர் சூட்டியவரும் அவர் தான்.
குடிநீரில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காரீயம் கலந்திருப்பதை கண்டறிய இந்த கருவி உதவுகிறது. கார்பன் நுண்குழாய் மூலம் குடிநீரில் கலந்திருக்கும் காரீயத்தை இந்த கருவி கண்டறியும். மரபணு பொறியியல் அடிப்படையில் வலி நிவாரண மருந்துகளுக்கு அடிமையாவதை முன்கூட்டியே கண்டறியும் கருவியையும் கண்டறிந்து அசத்தியுள்ளார் கீதாஞ்சலி.
அதுமட்டுமா, செயற்கை நுண்ணறிவு மூலம் இணைய மிரட்டல்களை கண்டறியும் இணைய நுட்பத்தையும் உருவாக்கியிருக்கிறார் இந்த இளம் விஞ்ஞானி. அடிப்படையில் அவர் ஒரு பியானோ இசைக்கலைஞராகவும் அறியப்படுகிறார். இந்த இளம் வயதில் சமூக மாற்றத்தை நோக்கி நடைபோடும் அவருக்கு, அமெரிக்க அதிபரின் இளையோர் சுற்றுச்சூழல் விருது ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.
”நமக்கு பிடித்ததைச் செய்யவேண்டும். அது எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும் சரி. அடுத்தவரை மகிழ்ச்சிபடுத்தவேண்டும். அறிவைத் தூண்டி சிந்திக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் கூர்ந்து கவனிக்கவேண்டும். அதுபற்றி ஆராய வேண்டும். புதிதாக ஒன்றை உருவாக்கி, அதை உலகுக்கு சொல்லவேண்டும் என்பது தான் என்னுடைய லட்சியம்; தாரக மந்திரமும்கூட. என்னால் ஒரு விஷயத்தை சிறப்பாக செய்ய முடிகிறது என்றால், மற்றவர்களாலும் வேறு பல விஷயங்களை சிறப்பாக செய்யமுடியும்,” என்கிறார் கீதாஞ்சலி.
2019ம் ஆண்டின் சிறந்த நபராக காலநிலை செயற்பாட்டாளரான 16 வயதேயான கிரெட்டா துன்பர்க்கை டைம் இதழ் தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.