இளம் மக்கள் சேவகர்; 21வது பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே அரசியல் என்ட்ரி தந்த ரேஷ்மா!
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 21-வயது நிரம்பியவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையில், வேட்புமனு தாக்கல் செய்தவற்கு முந்தைய நாள் ரேஷ்மாவுக்கு 21-வது பிறந்தநாள்.
இளம் வயதில் மக்கள் சேவையாற்றும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அப்படித்தான் ரேஷ்மா மரியம் ராய்க்கு வாய்ப்பு கதவைத் தட்டியிருக்கிறது.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா மரியம். தேர்தலில் போட்டியிட முடிவுசெய்த இவருக்கு வயது ஒரு தடையாக இருந்தது. காரணம் ரேஷ்மாவுக்கு வயது 20. தேர்தலில் போட்டியிட வயது வரம்பு 21. அவர் எப்படி தேர்தலில் போட்டியிட்டார் என்பது சுவராஸ்யமான நிகழ்வு. இதனைப்பார்ப்போம்.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 21-வயது நிரம்பியவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையில், வேட்புமனு தாக்கல் செய்தவற்கு முந்தைய நாள் ரேஷ்மாவுக்கு 21-வது பிறந்தநாள்.
தன் பிறந்தநாளை கொண்டாடி முடிந்த கையுடன், அடுத்த நாள் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இடது ஜனநாயக முன்னணி (LDF) சார்பில் போட்டியிடும் இளம் வேட்பாளராக ரேஷ்மா மரியம் அறியப்பட்டுள்ளார்.
கேரளாவின் பத்தனம்திட்டாவில் உள்ள அருவப்புலம் கிராம்பஞ்சாயத்து 11வது வார்டில் போட்டியிடுகிறார் ரேஷ்மா. இது குறித்து அவர் பேசுகையில்,
“தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், வேட்புமனு தேதியை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தேன். தேர்தல் தேதி தள்ளிப்போய் கொண்டேயிருந்த நிலையில், இம்முறை நான் தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது. நான் அதிர்ஷ்டசாலியும் கூட,” என்று தெரிவித்துள்ளார்.
ரேஷ்மாவின் குடும்பத்தைப் பொறுத்தவரை, அவரது பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் ஆதரவாளர்கள். ஆனால், ரேஷ்மா கல்லூரி படிக்கும்போதே, இடதுசாரி சிந்தனை மீது ஆர்வமாக இருந்தார்.
கொன்னியில் உள்ள விஎன்எஸ் கல்லூரியில் பிபிஏ படிக்கும்போது SFI-ன் உறுப்பினராக இருந்தார். DYFI-ல் மாவட்ட குழு உறுப்பினராகவும் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார் ரேஷ்மா.
”என் கட்சி சார்பில் என்னை போட்டியிடுமாறு கூறியபோது நான் மறுக்கவில்லை. படிக்கும் கல்லூரியின் விதிமுறை பின்பற்றி தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தேன். ரேஷ்மா தனது பிரசாரத்தை தனித்துவமாக மேற்கொள்ள முடிவெடுத்திருக்கிறார். தனது சகோதரர் ராபினுடன் பிரசாரத்துக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். தான் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களில், தன்னுடன் கையில் டைரியை எடுத்துச் செல்லவும், அதில் குடியிருப்புவாசிகள், மக்களின் பிரச்னைகளை குறித்துக்கொள்ளவும் ரேஷ்மா திட்டமிட்டுள்ளார்.”
மக்களின் பிரச்னைகள் குறித்து பட்டியிலிட்டுள்ள ரேஷ்மா, அங்கன்வாடிக்கு கட்டிடம் அமைக்கவேண்டும், சாலை பிரச்சனைகள் சீரமைப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நிலவுகிறது. அவர்களுக்கான இந்த சிக்கல்களை தீர்க்கவேண்டும், என்கிறார் ரேஷ்மா.
இளம்வயதில் அரசியல் களத்தில் குதித்திருக்கிறார் ரேஷ்மா. வெறுமனே ஆர்வத்தில் தேர்தலில் போட்டியிடாமல், மக்கள் பிரச்னைகளை அறிந்துக்கொண்டும், அவர்களுக்கான பிரச்னைகளானத் தீர்வை அமைத்துக்கொடுக்கவும், திட்டமிட்டிருக்கிறார் ரேஷ்மா.
வாழ்த்துகள் ரேஷ்மா!
கட்டுரை தொகுப்பு: மலையரசு