'5வது இடத்துக்கு முன்னேறிய இந்திய பொருளாதாரம்' - பட்ஜெட் தாக்கல் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த முறை தனது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த முறை தனது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
2023 - 2024ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டும் காகிதமில்லாத பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் இதுவாகும். இன்றைய தினம் கருப்பு பார்டர் மற்றும் அழகிய தங்க நிற வேலைப்பாடுகள் கொண்ட சிவப்பு நிற புடவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கையில் சிவப்பு நிற டிஜிட்டல் டேப்லெட்டுடன் நாடாளுமன்றம் வந்தார்.
2019ம் ஆண்டு நிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5வது முறையாக மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார்.
2023 - 2024ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
“அமிர்த காலின் முதல் பட்ஜெட் இதுவாகும். இந்தியப் பொருளாதாரம் சரியான பாதையில் செல்வதையும், ஒரு நட்சத்திரமாக பிரகாசமாக இருப்பதையும் உலகம் அங்கீகரித்துள்ளது. 2014ம் ஆண்டு மோடி பதவியேற்ற பிறகு உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது. விவசாயிகள், பெண்கள் உட்பட அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சாதனைகளை உலகமே பாராட்டுவதால் தலைநிமிர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறேன்,” எனத் தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரத்தில் முன்னேற்றம்:
பிரதமர் மோடி ஆட்சி தலைமையிலான 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், 9.6 கோடி புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனா காலக்கத்தில் 20 மாதங்களில் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், 2023ம் ஆண்டு ஜனவரி 1 முதல் மேலும் ஓராண்டுக்கு அந்தியோதயா திட்டத்தின் கீழ் உணவு தானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உலக அளவில் உக்ரைன் போர் உள்ளிட்ட சவால்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகப் பொருளாதார ஒழுங்கில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்தும் விதமாக இந்தியாவிற்கு ஜி 20 தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது நமக்கான ஒரு தனித்துவமான வாய்ப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் என்ன?
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
“நடப்பு ஆண்டில் பொருளாதாரம் 7% வளர்ச்சி அடையும். இது முக்கிய பொருளாதாரங்களில் மிக உயர்ந்ததாகும். சவால்கள் இருந்தபோதிலும் இந்தியா சரியான பாதையில் செல்கிறது. 2014 முதல் அரசாங்கத்தின் முயற்சி சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்துள்ளது. பல வளர்ச்சி இலக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம்,” என்றார்.
விவசாயத்தில் தொழில்முனைவோரை உருவாக்க ‘வேளாண் ஊக்குவிப்பு நிதி’ உருவாக்கப்படும் என அறிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளுக்கான கடன் தொகை ரூ.20 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளார். பசுமை எரிசக்தி உற்பத்திக்கு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என உறுதியளித்தார்.