3 ஆண்டுகளில் 23 தொழில்கள் - பாடங்களை படிக்கட்டுகளாக மாற்றி உயர்ந்த திருவண்ணாமலை இளைஞர்!
சநல் - ஈகோ ஃரெண்ட்லி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் நிறுவனர் தட்சணாமூர்த்தியின் தன்னம்பிக்கை கதை இது. மூன்று ஆண்டுகளில் 23 தொழில்களை ஆரம்பித்து, எதுவுமே கைகொடுக்காவிட்டாலும், துவண்டு போகாமல் துணிந்து நின்று வென்ற பிசினஸ் மேன் இவர்.
பலமுறை தோற்றாலும், நினைத்த பணியை முடிக்காமல் அசரமாட்டேன் என்று இருக்கும் பலரை பார்த்திருப்போம். அதே போன்ற மன உறுதியுடன், பலமுறை தொழிலில் தோல்வியை தழுவினாலும், பிசினஸ் செய்து எப்படியும் ஜெயித்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன் 3 ஆண்டுகளில் தொடர் தோல்விக்குப் பின் தற்போது 24வதாக தொடங்கிய பிசினசில் வெற்றிகரமாக திகழ்ந்து வருகிறார் இந்த இளைஞர்.
தட்சணாமூர்த்தி துறைராஜின் சொந்த ஊர் திருவண்ணாமலை. சென்னையில் சிவில் துறையில், கட்டமைப்பு பொறியியல் படிப்பை முடித்துள்ளார். படிக்கும் போதே நிச்சயம் இன்னொருவருக்கு கீழ் வேலை செய்யக் கூடாது என்று தெளிவாக இருந்த தட்சணாமூர்த்தி, இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பின் போதே தன்னுடைய கலைத்திறமையை மட்டும் மூலதனமாக வைத்து ‘கைநாட்டு’ எனும் பிசினசை ஆரம்பித்தார்.
சிறு வயதிலிருந்தே கலையில் ஆர்வம் இருந்ததால், நண்பர்கள் தெரிந்தவர்கள் என கிடைப்பவர்களுக்கு எல்லாம் ஏதாவது வரைந்து கொடுத்து தன் தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தினார் தட்சணாமூர்த்தி. அவருடைய இந்த முதல் பிசினஸில் பெரிய முதலீடு எல்லாம் இருக்கவில்லை. நண்பர்களே பெயிண்டிங் செய்யத் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர்.
’நண்பர்களுக்கு மட்டுமே வரைந்துக்கொண்டிருந்த சமயத்தில், முதல் முறையாக என் கல்லூரி நிர்வாகத்தை அணுகி, இனி கல்லூரியில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் வெளியில் இருந்து பேனர்கள், போஸ்டர்கள் வாங்க வேண்டாம். அதை நானே என் கைப்பட வரைந்துக் கொடுக்கிறேன் என்று சொன்னேன்.
”பேராசிரியர்களின் உதவியுடன் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, முதல் முறையாக என் கல்லூரியின் கல்சுரல்சுக்கு தேவையான எல்லா பேனர்களையும் போஸ்டர்களையும் நானே உருவாக்கினேன். அதை பாராட்டி பேராசிரியர்கள் எனக்கு ஒரு சான்றிதழுடன் மூவாயிரம் ரூபாயும் கொடுத்தார்கள்,” என்று உற்சாகமாக கூறும் தட்சணாமூர்த்திக்கு, அந்த மூவாயிரம்தான் முதல் சம்பளமாகவும், தன்நம்பிக்கையாகவும் இருந்துள்ளது.
மூன்று வருடத்தில் இருபத்தி மூன்று தொழில்கள்:
கல்லூரி முடியும் சமயம், அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. படிப்பு முடிந்ததும், சென்னையை விட்டு, இங்கிருக்கும் பல வாய்ப்புகளை விட்டு, தன் அப்பாவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக திரும்ப ஊருக்கே சென்றுவிட்டார் தட்சணாமூர்த்தி. ஊரில் இருந்த போதும், ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என குறைந்த முதலீட்டில் பல தொழில்களை ஆரம்பித்து நடத்தியுள்ளார்.
மூன்று ஆண்டுகளில் 23 தொழில்களை முயற்சி செய்தும் எந்த தொழிலிலுமே அவருக்கு மனநிறைவு கிடைக்கவில்லை.
“ஒரு தொழில் எப்போது மன நிறைவோடு சேர்த்து பணநிறவும் கொடுக்குதோ அது தான் வெற்றிகரமான பிசினஸ், என்று சொல்லும் தட்சணாமூர்த்தி, தொடர்ந்து மனம் தளராமல், பல தொழில்களை செய்துள்ளார். ஆனால் எந்த தொழிலிலுமே அவர் பெரிய முதலீடும் செய்யவில்லை, பெரிய இழப்புக்களையும் சந்திக்கவில்லை. அதற்கு காரணம் அந்த துறையில் தான் செய்யும் ஆராய்ச்சிதான்,” என்று கூறுகிறார் தட்சணாமூர்த்தி.
23வது தொழில், கட்டுமானம் சம்மந்தப்பட்டதுதான். மக்கள் குப்பை என்று நினைத்து தூக்கிபோடும் பொருட்களை கட்டுமானத்திற்காக பயன்படுத்தும் நோக்கத்தில் ஒரு நிறுவனத்தை தட்சணாமூர்த்தி ஆரம்பித்தார். அதன் தொடக்க விழாவின் போது, விருந்தினர்களுக்கு தாம்பூலப்பை கொடுக்கலாம் என்று, ஒரு நல்ல துணிப்பையை தேடி அலைந்துள்ளார் தட்சணாமூர்த்தி, பல கடைகள் ஏறி இறங்கி, கடைசியாக ஒரு தரமான நல்ல துணிப்பை அவருக்கு கிடைத்துள்ளது.
”அது வெறும் சாதாரண துணிப்பைதான், ஆனால் அதை அவ்வளவு அழகாக வடிவமைத்திருந்தார்கள். என்னை அது மிகவும் ஈர்த்தது. அந்த துணிப்பை பற்றி விசாரித்து, அதை வாங்கிக்கொண்டு என் கட்டுமான நிறுவனத்தின் பூஜையை முடித்தேன். பின் வேலையில் மூழ்கிவிட்டேன். ஆனால், சில மாதங்களிலேயே இந்த தொழிலும் எனக்கு மனநிறைவை கொடுக்கவில்லை. சோர்ந்து போய் உட்கார்ந்திருந்த சமயம், என் வீட்டில் அந்த துணிப்பையை மீண்டும் பார்த்தேன். அப்போது கிடைத்த ஒரு யோசனையில் உருவானதுதான் ’சநல்’, என்கிறார்.
சநல் - சமுதாய நலனில்
2017ல், தன்னுடைய 24வது தொழிலாக சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான 99.9% பிளாஸ்டிக் இல்லா பொருட்களை உருவாக்கும் ’சநல்’ ‘
' எனும் ஈகோ-ஃப்ரெண்ட்லி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தட்சணாமூர்த்தி ஐந்தாண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ’சநல்’ வெப்சைட் மூலம் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் தேவையான பல இயற்கையான பொருட்களை மக்கள் நேரடியாக வாங்கிக்கொள்ளலாம்.”சநலில் நாங்கள் முதலில் விற்பனை செய்ய ஆரம்பித்தது துணிப்பைகளைதான். இப்போது பல வகையான இயற்கை சோப்புகள், பேப்பரில் செய்யப்பட்ட பேனாக்கள், மரக்கிளையில் இருந்து செய்யப்பட்ட பென்சில்கள், நோட்டுபுக்குகள், சமையலுக்கு பயன்படுத்த பல வகையான கரண்டி, ஸ்பூன்கள் என விதவிதமான பல பொருட்களை உருவாக்கி அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறோம். இதற்கு முக்கிய காரணமே எங்கள் வாடிக்கையாளர்கள். அடுத்த புதிய பொருளுக்கான ஐடியாவை அவர்களே கொடுத்துவிடுவார்கள்,” என்று சொல்லும் தட்சணாமூர்த்தி இப்போது திருவண்ணாமலையை அடுத்து சென்னையிலும் தன் கிளையை ஆரம்பித்துள்ளார்.
சநல் நிறுவனத்திலிருந்து ஒரு குப்பை கூட வெளியில் வராது. தேவையில்லாத பொருட்களை சேமிக்க ஒரு இடத்தை உருவாக்கி, அந்த பொருட்களை மீண்டும் எப்படி பயன்படுத்தலாம் அல்லது அதை ஒரு புதிய ப்ராடக்டாக எப்படி மாற்றலாம் என்பதே தட்சணாமூர்த்தியின் சிந்தனையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சநல் ஈகோ-பாட்
சுற்றுச்சூழலை பாதுக்காக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சநல் நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த முன்னெடுப்பின் மூலம், ஒரு மூன்று சக்கர வாகனத்தில் சநல் நிறுவனத்தின் பொருட்களும், சுற்றுச்சூழலை பாதுகாக்க சொல்லி வலியுறுத்தும் வாசகங்களையும் ஏந்திய வண்டி, சென்னையின் முக்கிய இடங்களுக்கு செல்லும்.
அங்கு மக்கள், தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்தே ஈகோ-ஃப்ரெண்ட்லி பொருட்களை ஏன் பயன்படுத்த வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டை எப்படி குறைக்கலாம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வதுடன், சநல் பொருட்களையும் வாங்கிக்கொள்ளலாம்.
சநல் ஸ்பேஸ்
சநல் ஆரம்பித்த சமயத்தில், பல அங்காடிகளுக்கும், சூப்பர்மார்கெட்டுகளுக்கும் சநல் பொருட்களை அனுப்பும் போது, அதில் பல பொருட்கள் விற்பனையாகாமல் இருப்பதை கவனித்த தட்சணாமூர்த்தி, அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க நினைத்தார். அப்போது, இந்த பொருட்கள் சரியாக காட்சிப்படுத்தப்படாமல் இருப்பதே காரணம் என்று கண்டுபிடித்து அதற்கான ஒரு புது யுக்தியை கையாண்டார்.
“வெறும் ஐந்தடி இடத்தில் சநல் நிறுவனத்தின் 157 பொருட்களை 7 வகைகளாக பிரித்து காட்சிப்படுத்தும் முறையை உருவாக்கினேன். இதன் மூலம் சூப்பர் மார்க்கெட், ஆர்கானிக் கடைகள், ஹோட்டல், ஐடி நிறுவனங்கள், மால்கள் என எங்கு வேண்டுமானாலும் சநல் பொருட்களை ஐந்தடியில் வைத்து டிஸ்பிளே செய்து விற்பனை செய்ய முடிந்தது,” என்கிறார்.
எல்லாமே அனுபவம் தான்!
சநல் ஆரம்பிப்பதற்கு முன், சிமெண்ட் தொழில், விசிட்டிங் கார்ட், செங்கல் சூளை, பழைய விண்டேஜ் பொருட்களை தேடி கண்டுபிடித்து விற்பனை செய்வது என்று பல தொழில்களில் ஈடுபட்டுள்ளார் தட்சணாமூர்த்தி. ஏன் ஒரு விவசாயியாக கூட இருந்துள்ளார்.
”உண்மையிலேயே நான் விவசாயத்தை மிகுந்த ஆர்வத்தோடு கற்றுக்கொண்டேன். விவசாயத்தை முழுமையாக கற்றப் பின் தான், அது ஒரு பிசினஸ் இல்லை என்பது புரிந்தது. விவசாயம் ஒரு ஆத்மீகமான விஷயம். அதை பிசினஸாக பணத்திற்காக செய்ய முடியாது. செய்யவும் கூடாது. விவசாயத்தை பிசினசாக பார்ப்பவர்களுக்கு என்றுமே அதில் வெற்றி கிடைக்காது. அதனால், நூறு முறை நன்கு ஆலோசித்தப்பின், விவசாயத்தில் இருந்து நான் விலகிவிட்டேன்.
“நான் ஒரு பிசினஸ் மேனாக இருக்கவே விரும்புகிறேன். என் தொழிலில் நான் நியாயமாக இருப்பேன். சமூக அக்கரையுடனும், பொறுப்புடனும் செயல்படுவேன். ஆனால், பிசினஸை சமூக சேவை போல என்னால் நடத்த முடியாது. நான் ஆரம்பித்த தொழில்கள் எல்லாமே குறைந்தபட்ச முதலீட்டில் ஆரம்பித்ததுதான். அதிகபட்சமாக பத்தாயிரம் மட்டுமே முதலீடு இருக்கும். நான் ஒவ்வொரு தொழிலிலும் சம்பாதித்த பணத்தை மீண்டும் இன்னொரு தொழிலில் முதலீடு செய்வேன். பணத்தை எனக்காக செலவு செய்ததே கிடையாது,” என்கிறார்.
இன்று பலர், தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், எங்கே அது தோல்வி அடைந்து விடுமோ என்ற தயக்கத்திலேயே முதல் அடியைக் கூட எடுத்துவைக்காமல் தடுமாறி வருகின்றனர். சிலர் தொழில் ஆரம்பித்த சில மாதங்களிலேயே அவர்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டால், உடனே சுற்றியிருப்பவர்களின் பேச்சில் துவண்டு போய் தொழில் செய்வதிலிருந்தே விலகிவிடுகின்றனர்.
ஆனால், தான் ஒரு நல்ல பிசினஸ் மேன் என்ற ஒரே நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு இன்று தட்சணாமூர்த்தி உயர உயர வளர்ந்து வருகிறார்.
“இன்று தொழில் தொடங்க அரசாங்கமே பல உதவிகள் செய்யத் தயாராக இருக்கிறது. எந்த பொருளை விற்க வேண்டும், அதை யாருக்கு விற்க வேண்டும், எங்கு விற்பனை செய்தால் லாபம் கிடைக்கும் போன்ற அடிப்படை ஆராய்ச்சியையும் அனுபவத்தையும் வளர்த்துக்கொண்டாலே அவர்கள் பாதி தொழிலதிபர்கள்தான்,” என்று கூறுகிறார் தட்சணாமூர்த்தி.
1 லட்சம் மூங்கில் டூத்பிரஷ் விற்பனை; 50 லட்சம் வருவாய்: சுற்றுச்சூழலைக் காக்கும் சென்னை நண்பர்கள்!